Translate

Monday, 22 October 2012

அரசின் கபட நாடகம் தமிழரிடம் பலிக்காது


news
ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களை உதாசீனம் செய்துவிட்டு, தமிழ் மக்களிடையே தலைவரொருவரைப் பலவந்தமாகத் திணிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. அரசின் இந்தக் கபட நாடகம் பலிக் காது என்பதனை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற் கும் தமிழ் மக்கள் இதற்கான பதிலைத் தெளிவாக எடுத்துக்காட்டுவர்.

 
 
இவ்வாறு நேற்றுக் கருத்துத் தெரிவித்திருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் சிங்கள, பௌத்த மக்களிடம் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார். தமிழ் மக்களிடம்  அவர் தோற் றவர்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
 
எதிர்க்கட்சித் தலைவ ரின் உத்தியோகபூர்வ இல் லத்தில் நேற்று நடைபெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடக வியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
 
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நல்லூர் பிரதேசசபைக்குச் சொந்தமான காணி தமக்கு வேண்டும் என்று இலங்கை இராணுவத்தினர் பிரதேசசபைத் தலைவரிடம் பலவந்தமான முறையில் கேட்டனர். இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தமையையடுத்து குறித்த இடத்தில் இருந்த காவலாளிகளை இராணுவத்தினர் அடித்துத் துரத்தி அந்த இடத்தைக் கைப்பற்றினர்.
 
இராணுவத்தினரின் இந்த அக்கிரமச் செயலை எதிர்த்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நல்லூர் பிரதேசசபைத் தலைவர் வசந்தகுமாரை அவரிடம் இருக்கும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வருமாறு பொலிஸார் பணித்திருந்தனர். 
 
இதனையடுத்து பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் அளித்துவிட்டு வந்த வசந்தகுமாரை இனந்தெரியாதவர்கள் தாக்கி அவரிடமிருந்த ஆவணங்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.
 
தலைநகரில் மட்டுமல்ல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள யாழ்ப்பாணத்திலும் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், அவர்கள் எவரும் கைது செய்யப்படுவதில்லை. இதுதான் நாட்டில் இன்று நடக்கும் காட்டாட்சியின் வெளிப்பாடு.
 
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காத இந்த அரசு அவர்களிடம் தோல்வியையே தழுவியுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா, கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியையே தழுவினார். இதிலிருந்து என்ன தெரிகிறது? அவர் சிறுபான்மை மக்களிடம் தோற்றுவிட்டார் என்பதே தெளிவு.
 
சிங்கள, பௌத்த மக்களிடம் மட்டுமே வெற்றிபெற்ற இந்த அரசு அதனை அறியாதது போல் செயற்படுகிறது. ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களை உதாசீனம் செய்துவிட்டு, தமிழ் மக்களிடையே தலைவரொருவரைத் திணிக்க அரசு முயற்சிக்கின்றது. அதுவே அரசின் இன்றைய தேவைப்பாடாகவும் இருக்கின்றது.
 
எது எப்படியிருப்பினும் அரசின் இந்தக் கபட நாடகத்திற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் பலியாக மாட்டார்கள். அரசின் நாடகம் எம்மிடம் எடுபடாது என்று இந்த அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற்குமே தமிழ் மக்கள் எடுத்துக்கூறுவர்  என்றார் சுமந்திரன் எம்.பி.

No comments:

Post a Comment