ஐ.நா. அறிக்கைக்கு சிங்கள அரசு விடுத்துள்ள எதிர்ப்பு
இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஐ.நா. குழுவின் அறிக்கை கடந்த 14-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில், போரில் சிக்கிக் கொண்ட தமிழர்களை காப்பாற்ற ஐ.நா. அதிகாரிகள் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை போர் பற்றிய ஐ.நா. அறிக்கை அடிப்படையற்றது. எந்த மக்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டார்களோ, அந்த மக்களையே மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்த விடுதலைப்புலிகளை ராணுவ ரீதியாக இலங்கை தோற்கடித்தது.
அத்தகைய இலங்கையை குறை கூறும் மற்றொரு முயற்சியே இந்த அறிக்கை. இறுதிக்கட்ட போரில் இறந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை அப்போதே ஐ.நா. உயர் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை ஆதாரமாக கொண்டு, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதே இந்த அறிக்கையின் நோக்கமாக தோன்றுகிறது.
அப்பாவி மக்களுக்கு மத்தியில் விடுதலைப்புலிகள் தங்கள் பீரங்கிகளை வைத்திருந்தனர் என்பதை இந்த அறிக்கை ஒப்புக்கொள்கிறது. ஆனால், அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசியது என்ற குற்றச்சாட்டை கூறும் ஐ.நா. அறிக்கை, தற்காப்பு கொள்கை பற்றியோ, எதிர் தாக்குதலின் அவசியத்தை பற்றியோ கவனத்தில் கொள்ளவில்லை. அல்லது ஏவுகணை எங்கிருந்து வந்தது என்று ஆராயவும் இல்லை.
இந்த அறிக்கை அடிப்படையில், இலங்கை அரசை மற்ற நாடுகள் குறை சொல்கின்றன. இந்த அறிக்கை, ஐ.நா.வின் செயல்பாடு பற்றிய அறிக்கை என்ற உண்மையை அந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இலங்கை அரசை குற்றம் சாட்டுகின்றன. அந்நாடுகள் உண்மை நிலவரத்தை ஆராய தயாரில்லை என்பதையே இது காட்டுகிறது’’என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment