Translate

Tuesday 27 November 2012

அரசியல் தீர்வை இனியும் தாமதிக்காது முன்வைக்குமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம்! செல்வம் அடைக்கலநாதன் அறிவிப்பு!!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இனியும் தாமதிக்காது வழங்கக்கோரி அடுத்த வருடம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் குதிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.


இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமது சுய இலாபத்துக்காக அரசியல் தீர்வை ஒத்திப்போடாது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தோ அல்லது அரசுடன் இணைந்தோ அல்லது அனுசரணையாளராக இருந்தோ உடனடியாகத் தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:

தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி தேவை என்றால் அவர்கள் தேர்தல்களில் அரசுக்கு வாக்களித்திருப்பர். ஆனால், அவர்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்பதால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.

அந்த வகையில் அரசு அரசியல் தீர்வை முன்வைக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலம் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு அரசியல் தீர்வைத் துரிதப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜனாதிபதியின் தலைமையில் இந்த அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்போது தமிழ் மக்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பர். அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்பர்.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனைத்து இனங்களும் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். அந்த உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

ஜனாதிபதியுடன் இணைந்தோ அல்லது அவருக்கு அழுத்தங்கொடுத்தோ அல்லது அனுசரணையாளர்களாகச் செயற்பட்டோ இந்த அரசியல் தீர்வை உடனடியாக முன்வைக்க சர்வதேசம் முன்வரவேண்டும். தமது சுய இலாபங்களுக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அரசியல் தீர்வை ஒத்திப்போடும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

நான் துப்பாக்கி ஏந்திப் போராடி பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்தவன். ஆயுதப் போராட்டத்துக்கும் ஜனநாயக நீரோட்டத்துக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகவே விடுதலைப் புலிகள், ஈ.பி.டி.பியினர் மற்றும் எனது போராளிகள் ஆகியோர் ஆயுதம் ஏந்திப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்தனர்.

இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில்தான் அவர்கள் தியாகம் செய்தனர். அப்பாவி இராணுவத்தினரும் உயிரிழந்தனர். நானும் இந்தப் போராட்டத்தில் செத்து மடிந்திருக்கலாம். எனது சமூகத்துக்கான எனது கடமையை நான் செய்யத் தவறிவிட்டேன் என்று எனது மனம் உறுத்துகின்றது.

ஆகவே, இனப்பிரச்சினைக்கான தீர்வை இனியும் தாமதிக்காது முன்வைக்குமாறு கோரி நான் அடுத்த வருடம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ளேன். எனது உயிரை இழந்தால்தான் தீர்வைப் பெறமுடியும் என்றால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிரை இழக்கவும் நான் தயார்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் தெரிவித்தார்.


http://www.pongutham...4a-983d3fe6789e 

No comments:

Post a Comment