Translate

Monday, 26 November 2012

மாவீரர் நாளை முன்னிட்டு இராணுவம் குவிப்பு! படையினரின் தடைகளை ஏற்க மாட்டோம்! – ரதன்

மாவீரர் நாளை முன்னிட்டு இராணுவம் குவிப்பு! படையினரின் தடைகளை ஏற்க மாட்டோம்! – ரதன்

'தமிழினத்திற்காகத் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். அவர்களை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழரினதும் கடமை. கார்த்திகை 27 இல் இதைத் தடுப்பதற்கு வன்னியில் உள்ள இராணுவத்தினருக்கு எந்த அருகதையும் கிடையாது.'


இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை பிரதித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

மாவீரர் நாள் நெருங்குவதையடுத்து வன்னியில் படையினர் கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இம்முறை மாவீரர் நாளன்றே கார்த்திகை விளக்கீடும் கொண்டாடப்படவுள்ளது. மாவீரர் நாளும், கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதால், வன்னியில் ஆலயங்கள் மீதும் இராணுவத்தினர் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கிவிட்டனர் என அறியமுடிகின்றது.

இது தொடர்பாக எம்.எம்.ரதன் மேலும் தெரிவித்தவை வருமாறு:

அல்லல்பட்ட தமிழினத்தின் விடுதலைக்காக களத்தில் நின்று போராடி தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தவர்கள்தான் மாவீரர்கள். இந்தப் புனிதத் தெய்வங்களை நினைவுகூருவது தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும். கார்த்திகை 27 இல் இதைத் தடுப்பதற்கு படையினருக்கு எந்த அருகதையும் கிடையாது.

இம்முறை மாவீரர் நாளும், கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதனால் மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழ் மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாலை நேரத்தில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி புனிதத் தெய்வங்களை நினைவுகூர சந்தர்ப்பம் வந்துள்ளது.

இந்நிலையில், மாவீரர் நாள் வருவதையிட்டு இராணுவத்தினர் வன்னியில் மக்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். பல பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாவீரர் நாளும், கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதனால் வன்னியில் இந்து ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர். இதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆலயங்களில் தீபங்களை ஏற்றுவதற்கு ஏன் இராணுவத்தினரிடம் அனுமதி பெறவேண்டும்? அவர்கள் எமக்கு யார்?

மாவீரர்கள் தமிழன்னையின் வயிற்றில் பிறந்தவர்கள் தமிழின விடுதலைக்காக போர்க்களம் புகுந்தவர்கள். இவர்களை ஒவ்வொரு தமிழரும் புனிதத் தெய்வங்களாக நினைத்து வழிபடுவர். இதற்கு தடை விதிக்க இராணுவத்திற்கு அருகதை கிடையாது.

சிங்கள மக்களும் யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவுகூருகின்றார்கள். அதேபோல தமிழ் மக்களும் விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவார்கள். இதை இராணுவத்தினரும், அரச தரப்பினரும் விளங்கிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா யாழ். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


http://www.pongutham...37-4f2b237323f9 

No comments:

Post a Comment