புதிய பாதை குறித்து சிந்திக்கும் இந்தியாவும் மேற்குலகமும் -இதயச்சந்திரன்
சர்வதேச நெருக்கடிக்குழு வெளியிட்ட இந்த வார ஆய்வில், ‘ஒரு மையத்தில் சகல அதிகாரங்களும் குவிக்கப்பட்ட ஆட்சியொன்றின் உருவாக்கம்’, இலங்கையில் தோற்றம் பெறுவதாக எச்சரிக்கிறது.இந்த எச்சரிக்கையானது, மேற்குலக முதலீட்டாளர்களிடையே இலங்கை குறித்தான பார்வையை மாற்றும் சக்தி படைத்தது என்பதில் சந்தேகமில்லை.
முடக்கப்பட்ட போராட்டங்களிலிருந்து கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்கிற வகையில் அடிபணிவு அரசியலிற்கான புதிய தளமொன்று உருவாக்கப்படுவது போலிருக்கிறது. அது மட்டுமல்லாது, புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ச் சமூகத்தை விடுதலை வியாபாரிகள் என்றும் சிலர் விபரிக்க முற்படுகிறார்கள்.வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்பவர்கள், வரலாற்றையும், மக்களின் போராட்டத்தையும் நிராகரிக்கும் சிந்தனைக்குள் புதைந்து விடுவது அபத்தமாகவிருக்கிறது.
தாம் வாழும் சொந்த சமூகத்தின் உளவியலைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், எவ்வாறு புலம்பெயர் சமூகத்தையும், சர்வதேச சமூகத்தையும் புரிந்து கொள்ள முடியும்?இந்தியாவும் கூட்டமைப்பும் மட்டுமே, ஈழத்தமிழ் மக்களிற்கான அரசியல் உலகமென்று சிந்தனைத் தளத்தினை குறுக்கிக் கொள்வது, சமகால உலக அரசியலிற்கு பொருந்தாத விடயம என்பது உணரப்பட வேண்டும்.தமிழர் தாயக நிலப்பரப்பிலும் கடலிலும் உலகமே நடமாடுகிறது.கண்ணிற்குத் தெரியாத வல்லரசு பிரம்மாக்கள் காட்சியளிக்கும் காலம் அண்மிக்கிறது.
திருமலை மாவட்டத்தில் 5000 ஏக்கர் நிலங்களை அரசு சுவீகரிக்கிறது. ஏற்கனவே கல்லோயா குடியேற்றத் திட்டத்திலிருந்து, காமினி திசாநாயக்கவின் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக, தமிழ்ப் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் பறிபோன வரலாற்றினை திரும்பிப் பார்த்து ஞாபகமூட்ட வேண்டிய அவசியமில்லை.
2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையினால் சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் நவரெட்ணபுரத்தைச் சார்ந்த 1,486 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, இன்னும் அகதி முகாம்ளில் இயல்பு வாழ்வினைத் தொலைத்து அவலப்படுகின்றன.
இந்திய முதலாளிகளுக்கு அனல்மின் நிலையம் நிறுவ சம்பூர் பிரதேசத்தை வழங்கõவிட்டால், இராணுவம் படைத் தளங்களை அமைத்து விடுமென வியாக்கியானங்களும் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்ப் பேசும் மக்களின் நிலங்கள், அரசால் பறிக்கப்படுவதை எதிர்த்து கிரானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து, புலம்பெயர் மக்களை விளங்கிக் கொள்ள எத்தனிக்கும் அறிஞர்களுக்குத் தெரியவில்லை.மண்டைத்தீவில் 150 குடும்பங்களின் விவசாய நிலங்கள் கடற்படையால் பறிக்கப்பட்டுள்ளன. 40 ஏக்கர் நிலம், நிரந்தர உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கடற்படை அதிகாரிகளோடு பேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் , தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாது, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஜெயபுரம் கிராமமொன்றின் வீதிக்கு “மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை’ என்கிற பெயர் சூட்டப்பட்டுள்ளது.இவையெல்லாம் ஆயுதப் போராட்டத்தால் வந்த வினையென்று நிறுவ முற்படுபவர்கள், திருமலை நகருக்கு அண்டிய கரையோரப் பகுதியில், “”சிறிமாபுரம்” என்ற பெயர் சூட்டப்படும் போது, விடுதலைப் புலிகள் இல்லையென்கிற வரலாற்று உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.தமிழ் மக்கள், வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளவில்லையென்றவாறு, வரலாற்றை திரிபுபடுத்தும் அல்லது அதனை மூடி மறைக்கும் உளச் சிதைவும் போதனைகள், காலப் போக்கில் கரைந்து போவது தான் நிஜம்.
2009 இல் வன்னியில் நிகழ்ந்த மிகப்பெரிய மனிதப் பேரவலம், ஒரு இனப்படுகொலைதான் என்பதனை நிறுவ, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டங்களை, “பணம் சம்பாதிப்பதற்காக இவர்கள் எமது நாட்டுப் பிரச்சினை பற்றி பேசுகிறார்கள்’ என்று இலங்கை ஜனாதிபதி கொக்காவில் பிரசங்கத்தில் பேசியது போன்று, திருமலை நகர சபை மண்டபத்திலும் இதேபோன்ற சிந்தனைச் சிதறல் வெளிப்பட்டுள்ளது.கூட்டமைப்பா தமிழ் மக்களின் ஏக தலைமை அல்லது இந்தியாவா எம்மைக் காப்பாற்றக் கூடிய நாடு என்பதல்ல வட, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை.10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், தலையைச் சுற்றும் பதிலே ஆட்சியாளர்களிடமிருந்து வரப் போகிறது.
யாழில், சட்டத்திற்கு முரணான வகையில் ஆட்சி செய்ய இராணுவம் முயற்சிக்கிறதென, நாடாளுமன்றில், இரா. சம்பந்தன் பெரிய கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டார்.இதையேதான் ஸ்ரீதரனும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் பல சம்பவங்களைச் சாட்சியாக முன்வைத்து நீண்ட காலமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது, ஊடகவியலாளர் மீது, படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட அச்சுறுத்தல்கள், அரச நிர்வாக கட்டமைப்பு, இராணுவ மயப்படுத்தப்பட்டு விட்டதை ஏற்கனவே உணர்த்திவிட்டன.நாடாளுமன்ற தெரிவுக்குழு என்கிற, காலத்தை இழுத்தடிக்கும் நீண்ட பாதையில் அரசு காலடி வைத்தால், பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விடுவோமென கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெளிவாகக் கூறுவது, ஒட்டுமொத்த கூட்டமைப்பின் முடிவா என்று தெரியவில்லை.
ஏனெனில் இரா. சம்பந்தனுக்கு புகழாரம் சூட்டும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய, கூட்டமைப்பின் சில உறுப்பினர்களே குழப்பத்தை விளைவிக்கிறார்கள் என்று அண்மையில் கூறியது குறிப்பிடத்தக்கது.
உங்களுடைய இராஜதந்திரம் எங்களுக்குப் புரியும் என்பதை உணர்த்த,”"எம்முடன் பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்தி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் ஊடாக, சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும்” என்று சம்பந்தன் அரசிற்குக் கூறுவது அறிவுரையா? அல்லது எச்சரிக்கையாவென்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.பேசிக் கொண்டவாறே தீர்வுத் திட்டங்களை இரு தரப்பும் முன்வைக்கலாம். இதில் நம்பிக்கையில்லையென்று கூறியவாறு, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் போட்டியிடலாம்.ஆனால் பேசியோ அல்லது சர்வதேசத்தின் ஊடாகவோ அல்லது கூட்டமைப்பின் நம்பிக்கைக்குரிய இந்தியாவின் நிலைமாறி இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ, ஏதாவதொரு தீர்வு வரும்போது, வட கிழக்கிலுள்ள அரச காணிகள் அனைத்தும் பன்னாட்டு முதலீட்டாளர்களின் வசமாகும் மோசமான நிலைமை ஏற்படலாம்.
அத்தோடு தமிழ் மக்களின் குடியிருப்பு நிலங்கள், நிரந்தர உயர் பாதுகாப்பு வலயத்தால் விழுங்கப்படும் ஆபத்தும் உருவாகலாம்.
சர்வதேச நாணய நிதியமானது, கடனை வழங்கி விட்டு கவலையில் ஆழ்ந்துள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (FOREIGN DIRECT INVESTMENTS) வருவது குறைவாக இருக்கின்றதே என்பதுதான் அவர்களின் சோகம்.
அதாவது காணி விற்றாவது கடனை அடைக்கலாமென்று அரசு கனவு காண்கிறது.வருட முடிவிற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை, பல்வேறு நாடுகளிடமிருந்தும், அமைப்புகளிடமிருந்தும் பெற்ற கடன்களுக்கான தவணைப் பணமாக வட்டியோடு சேர்த்துச் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் மட்டும் 842 மில்லியன் டொலர்களை கடன் தவணைப் பணமாகவும், அதில் 262 மில்லியன் டொலர்கள் வட்டியாகவும் இலங்கை அரசு வழங்கியுள்ளது.
அரசு பெற்றுக் கொண்ட 16 பில்லியன் டொலர் கடன் தொகைக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 155 மில்லியனும் ஜப்பானிற்கு 310 மில்லியனும் இந்த வருடம் கட்ட வேண்டும்.அடுத்த 10 வருடங்களில், கடன் தவணைப் பணமாக 8 பில்லியன் டொலர்களைச் செலுத்த வேண்டும். அதில் வட்டி மட்டும் 2.5 பில்லியன் டொலர்களாகும்.ஏற்கனவே உல்லாசப் பயணத்துறை அபிவிருத்திக்காக கிழக்கின் கரையோரப் பிரதேசங்களை, வெளிநாட்டு அபிவிருத்தி முதலீட்டு நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ளது. ஆனாலும் தென்னிலங்கையைப் பார்க்கிலும் தென்னிந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள பல வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்புவதால் சந்தைக்கான போட்டியில் இலங்கை ஓரங்கட்டப்படும் சாத்தியப்பாடு உண்டு.
சர்வதேச நெருக்கடிக்குழு வெளியிட்ட இந்த வார ஆய்வில், ‘ஒரு மையத்தில் சகல அதிகாரங்களும் குவிக்கப்பட்ட ஆட்சியொன்றின் உருவாக்கம்’, இலங்கையில் தோற்றம் பெறுவதாக எச்சரிக்கிறது.இந்த எச்சரிக்கையானது, மேற்குலக முதலீட்டாளர்களிடையே இலங்கை குறித்தான பார்வையை மாற்றும் சக்தி படைத்தது என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை நிலப்பரப்பில், இரண்டு முரண்பட்ட அரசியல் சக்திகள் இருப்பதை, அமெரிக்காவும் இந்தியாவும் தமது நலன் சார்ந்த பார்வைக்குட்பட்டு ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் தென்னிலங்கையில் கட்டமைக்கப்படும், மியன்மார் பாணியிலான அதிகார மையம் குறித்து விழிப்படைகிறார்கள்.கைவிட்டுச் செல்லும் தென்னிலங்கைத் தளங்களிற்கு மாற்றீடான, பிறிதொரு இயற்கை வளமிக்க மையமொன்று தமிழர் தாயகத்தில் உண்டு.
திருமலைக்கும் அம்பாந்தோட்டைக்குமிடையே அதிக தூரம் இல்லை.மாற்றுத் தெரிவொன்றினை பரிசீலனைக்கு உட்படுத்தும் காலத்தின் தேவையை, மேற்குலகமும் இந்தியாவும் எதிர்கொள்வது போல் தெரிகிறது. சர்வதேச நெருக்கடிக் குழுவும் (INTERNATIONAL CRISIS GROUP) இதனையே கோடிட்டுக் காட்டுவதை புரிந்து கொள்ளலாம்.
நன்றி – வீரகேசரி
No comments:
Post a Comment