பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணம்' நேற்று சனிக்கிழமை (29.10.2011) தொடங்கியது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியான ஜெயசங்கர் முருகையாவினால் தொடங்கப்பட்டுள்ள இந்த நடைப்பயணத்தில் குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகிய விடுதலைச் செயற்பாட்டாளர்களும் இணைந்துள்ளனர். நேற்று முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
- ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
- ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு, தமிழீழத்தில் சர்வதேச சமுகத்தின் மத்தியஸ்தத்துடன் கூடிய ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.
- ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இன அழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் தனியாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும்.
- சிறிலங்காவின் கொடுஞ்சிறைகளினுள்ளே அடைபட்டு, துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழ் பொதுமக்களும், முன்னாள் போராளிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
- தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அனைத்து ஈழத்தமிழர்களும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படல் வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனு நீதிக்கான நடைப்பயணத்தின் போது பிரித்தானியப் பிரதமரிடமும், அமைச்சர்களிடமும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை நீதிக்கான நடைப்பயணத்தில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழீழன அழிப்பின் காணொளிச் சாட்சியங்கள் திறந்த வெளியரங்குகளில் திரையிட்டு காண்பிக்கபடவுள்ளன. மேலும் ஐந்து கோரிக்கைகளுக்கும் ஆதரவு திரட்டும் நோக்கில் நடைப்பயணத்தின் போது பிரித்தானிய மக்களிடம் கையெழுத்தும் சேகரிக்கப்படவுள்ளது. இந்தக் கையெழுத்துப் பிரதிகள் பிரித்தானிய அரசாங்கத்திற்கும், ஏனைய சர்வதேச மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மற்றும் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தினை நியாயப்பாடுகளை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களும் நடைப்பண வழியெங்கிலும் விநியோகிக்கபடவுள்ளன.
No comments:
Post a Comment