மனம்போல் மன்மோகன் பல்டி!
தமிழர்கள் மீதுஅணுஉலையைக் திணிக்கத் துடிக்கும் காங்கிரசைக் கருவறுக்க
அரிமாவளவன் அழைப்பு!!
காலை நடந்த பேச்சுவார்த்தையில் உயர்மட்டக்குழு என்றும், கூடங்குளத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என்றும் மக்கள்தான் முக்கியம் என்றும் பேசிய தலைமையமைச்சர் மன்மோகன்சிங் மாலையில் வல்லுனர் குழு என்றும் உரிய காலத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பல்டிக்கு மேல் பல்டி அடித்துள்ளார்.
உலகநாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்குகளும் கட்டடங்களும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இடிந்து விழுந்தது குறித்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இந்தியா தலை குனிந்து நின்றது. இதற்குக் காரணமான கல்மாடி போன்ற மலைவிழுங்கிகளை அமைச்சரவையிலேயே வைத்திருந்த மன்மோகன்சிங் இன்று கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று அடித்துச் சத்தியம் செய்கிறார். அவர் மூக்கின் கீழேயே நடந்த உலக மகா ஊழல்களை உணராத உத்தமர் அவர். அலைக்கற்றை ஊழலில் ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடிகளை விழுங்கிய எமகாதர்கள் ஏப்பம் விட்டது உலகத்திற்கே கேட்டது. ஆனால், அருகிலிருந்த தனக்கு தெரியவே தெரியாது என்று சத்தியம் செய்கிறார். இந்த மகா உத்தமர்தான் இப்போது, கூடங்குளம் பற்றி அடுத்த சத்தியம் செய்கிறார். ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டட ஊழல், அரங்குகளும் பாலங்களும் சரிந்து விழுந்த கல்மாடி ஊழல், அலைக்கற்றைத் திருட்டு ஊழல் போன்றனவெல்லாம் மன்மோகன்சிங் அருகில்தான் நடந்தன. ஆனால், கூடங்குளம் என்பது ஊழல் உலை மட்டுமல்ல! ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் உலை வைக்கும் அணு உலை அது!
பாதுகாப்பானது என்றால், பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே! பாராளுமன்றத்தைத் தாக்கியதையே தடுக்க முடியாது அசகாயச் சூரர்கள் அணுஉலை வெடித்தால் காப்பாற்றிக் கரை சேர்த்து விடுவார்களாம்! முதல் அணுஉலையைக் கட்டும்போது எச் சி எல் என்ற நிறுவனம் ஒதுக்கீட்டுத் தொகையை 46 விழுக்காட்டுக்குத்தான் டெண்டர் கோரி ஒப்பந்தம் எடுத்தது. கடல் மணலைக் கலந்து கட்டடம் கட்டுகிறார்கள் என்று அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் புகார் அளித்தார். இப்படியெல்லாம் கண்ணெதிரேயே தில்லு முல்லு செய்து கட்டிய அணுஉலை வரைபடத்திலும் விளம்பரத்திலும் வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம். நடைமுறையில் அதுவும் ஒரு காமன் வெல்த் “கலக்கல்” கட்டடம்தான்.
தில்லி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே இரண்டு முறை குண்டு வெடித்தது. அதையே தடுக்க முடியவில்லை. மும்பை நகரின் நட்ட நடு வீதியில், நடுப்பகலில் சுட்டுத் தள்ளியதை நேரடி ஒளிபரப்பினார்களே! இப்படி மையத்தையே காப்பாற்ற இயலாத இவர்கள் கடைக்கோடியில் கடைபரப்பி வைத்திருக்கிற அணுஉலைகளைக் காப்பாற்றப் போகிறார்களாம்!
வெடித்தபிறகு மன்மோகன்சிங், எழுதி வைத்து இரங்கல் வாசிப்பார். கேட்க நாம் இருக்க மாட்டோம். தமிழகத்திற்கு எதிராக இருக்கிற இலங்கைக்கும் கேரளாவிற்கும் மின்சாரம் வழங்கத்தான் திட்டம்.
எஞ்சியிருப்பது தமிழ்நாட்டிற்கு என்று காடை காட்டுகிறார்கள்! கண்ணை விற்றா சித்திரம் வாங்குவோம்? உயிரை விலை பேசியா எச்சில உணவு தேடுவோம்? தமிழனைக் காவு கொடுத்து மின் உற்பத்தியா?
மத்தியில் இருக்கிற காங்கிரசு அரசு தமிழர் விரோத அரசு என்று எண்ணற்ற முறை மெய்ப்பித்து விட்டது. இரு நாட்களுக்கு முன்பாக ராமேசுவரம் பகுதியிலிருந்து சிங்கள இனவெறி கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகள் இந்தியப் படைகளின் முன்பாகத்தான் கடத்தப்பட்டிருக்கின்றன. 550 மீனவர்களைக் கொன்ற பின்னரும் இந்தியா தமிழ் மீனவர்களைக் காப்பாற்றவில்லை. ஈழத்தில் மிகப்பெரிய ஒரு இனப்படுகொலையை சிங்களப் இனவெறி அரசோடு சேர்ந்து செய்து முடித்த காங்கிரசு ஆட்சி கூடங்குளத்தில் மட்டும் தமிழினத்தின் மீது பாசமழையையா கொட்டப்போகிறது? மீண்டும் ஒரு தமிழினப் படுகொலைக் களத்தைத்தான் அங்கே உருவாக்கி வைத்திருக்கிறது.
ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தொழிக்க நினைக்கும் காங்கிரசுக் கட்சிக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாடை கட்டுவோம்! ஈழத் தமிழர் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அள்ளிப்போட்டுக் கொன்ற இதே அரசு இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்கும் ஆயுதத்தை நம் நடுவில் நிறுவுகிறது. வெடித்த பின்னர் வேதனைகளைக் கொட்டக்கூட நாம் இருக்கமாட்டோம்! நம்மைக் கொல்லத் துடிக்கும் இன எதிரிகளை இந்தத் தேர்தலிலும் அடையாளம் காண்போம். எங்கெங்கு காங்கிரசுக் கட்சி நிற்கிறதோ அங்கெல்லாம் அக் கட்சியை வேரடி மண்ணோடு சாய்ப்போம். இவ்வாறு தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் திரு. அரிமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment