Translate

Monday 10 October 2011

முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன்ட் மாலதி! தமிழீழப் பெண்களின் வீரத்தின் தியாகத்தின் விடுதலை வேட்கையின் முகம் மாலதி.!!

சமூக மூட நம்பிக்கைகளும், பிற்போக்குத்தனங்களும், ஆண்மேலாதிக்க ஒடுக்கமுறைகளும், பாகுபாடுகளும் செழித்துவளர்ந்திருந்த, எமது தமிழீழச் சமூகச் சூழலில் இருந்து, தன்இனத்திற்காக, தன்எழுச்சியாய் போராடப் புறப்பட்டு, தன் உயிரைக் கொடையாகக் கொடுத்த முதலாவது பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன்ட் மாலதி. 


தமிழீழத்தின் வரலாற்றிலும், தமிழர்களின் வரலாற்றிலும், இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் பெயர் பெண்குலத்தின் பெருமை பேசும்வகையில் பொறிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பெண்களின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்தும், துணிவு வீரம் போர்க்குணம் குறித்தும், தியாகம் குறித்தும் பண்டைத்தமிழ் ஏடுகளில் உயர்வான பதிவுகள் நிரம்பப்பெற்றிருந்தாலும், அவற்றை எல்லாம் தாண்டி, இந்த இருபதாம் நூற்றாண்டில், எதிரி இராணுவத்துடன், நேருக்குநேர் நின்று மோதி தன் இனத்துக்காய் வீரகாவியம் ஆன, மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு மாலதியினுடையது.

1987ம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் பத்தாம் நாள் கோப்பாயில், இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கும், விடுதலைப் புலிச்சேனைக்கும் இடையே நடைபெற்ற நேரடி மோதலில், முன்னின்று வீராவேசமாகக் களமாடிய மாலதி, எதிரிகளின் குண்டுகள் சல்லடையாய் துளைக்க, தாய் மண்மடியில் வீரமகளாய் வித்தாக வீழ்ந்தார்.

தாயக விடுதலைக்காக ஆண்களுக்கு நிகராக, களமாடும் துணிவையும், உயிரைத் துச்சமென மதித்து, அதனை இழக்கவும் தயாராகும் அர்ப்பணிப்பு மனோநிலையையும் தமிழீழப் பெண்கள் மத்தியில் விதைத்துச் சென்ற மாலதியின் நினைவுநாளே தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளாக வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றது.

இனவிடுதலையுடன் சேர்த்து, பெண்விடுதலையையும் இலக்காகக்கொண்டு அணிவகுத்த பல்லாயிரக்கணக்கான பெண்போராளிகளின் முன்னுதாரணம் மாலதி.

தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள் என்பது, தமிழீழப் பெண்களுக்கு மட்டுமன்றி, புலம்பெயர்ந்துவாழும் தமிழீழப் பெண்களுக்கும் பொதுவானநாள். சிறப்புற கடைப்பிடிக்கவேண்டிய நாள்.

சமூகத்தின் தடைகள், எல்லைகளைக் கடந்து, வசவுகள், இழிவுகளைக் கடந்து தேசிய விடுதலைக்காக, களமாடிய பெண்போராளிகள், ஆண்போராளிகளைவிட தெளிவும் உறுதியும் படைத்தவர்களாக விளங்கினர். இரட்டைப் போராட்டத்தை அவர்கள், நடத்தினார்கள்.
இனவிடுதலையையும், சமூகவிடுதலையையும் இன்னமும் பெற்றிராத எம் தமிழ் இனத்தின் பெண்கள் மத்தியில், இனத்திற்கும் பெண்குலத்திற்குமாகப் பாடுபடும் எண்ணங்களை கிளர்ந்தெழச்செய்யும் நாளாக, தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள் அமையட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம் - பிரான்ஸ்

No comments:

Post a Comment