சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாம் செயற்ப்படுவதா, அல்லது எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையில் எமது கொள்கையினை முன்வைப்பதா?
கடந்த பத்தியில் சுயநிர்ணய உரிமைக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு பற்றி ஆராயப்பட்டிருந்தது. அதில், அதிகாரப்பகிர்வு வழிமுறையிலான தீர்வுக்கு இணங்கிப்போவது, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை நிர்மூலமாக்கும் செயற்பாடு என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இம்முறை பத்தியானது, இரு தேசங்கள் ஒரு நாடு என்ற நிலைப்பாடு எவ்வாறாக சர்வதேசத்தினால் நோக்கப்படும் என்பது பற்றி ஆராயவுள்ளது.
சர்வதேசத்தினைப் பொறுத்த வரையில், அது இலங்கை தொடர்பில் நிலையான வெளியுறவுக் கொள்கையினை கொண்டதாக இல்லை. சர்வதேசமானது இலங்கை தொடர்பில் இந்தியா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, மற்றும் சீன தலைமையிலான நாடுகள் என மூன்று அணிகளாக செயற்படுகின்றது. இவ்வாறாக சர்வதேசம் மூன்று அணிகளாக செயற்படுகின்ற நிலையில், அவர்கள் தத்தமது நாடுகளின் நலன் சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்திய தீர்வினையே எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வலியுறுத்துகின்ற நிலைமை உள்ளது.
சர்வதேச சமூகம் தமது நலன்களைக் பேணத்தக்க வகையில், இலங்கைத் தீவின் உள்நாட்டு விவகாரங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் தங்களுக்கென ஓர் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது. அந்த நிலைப்பாடென்பது, அவர்களது நலனை கவனத்திற்கொள்வதாகவே இருக்கும். அதனடிப்படையில் அழுத்தத்தினை பிரயோகிப்பதற்கான முக்கியமான ஒரு கருவியாக, தமிழ் அரசியல் உருவாகியுள்ளது. ஆதலால், சர்வதேசத்தினை மட்டும் திருப்திப்படுத்தும் முகமாக கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து, தமிழ்மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்காது பேணப்படத்தக்கவகையிலும், அதேவேளை, சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையிலும், தமிழ் அரசியல் தலைமைகள் தமது நிலைப்பாட்டினை உறுதியாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்கவேண்டும்.
ஏனெனில், தமது நலனை பேணத்தக்க வகையிலேயே சர்வதேசம் இலங்கை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும். குறைந்த அழுத்தத்துடன் தமது நாட்டின் நலன் பேணப்படுமாயின், தமிழ்மக்களுக்கு குறைந்தபட்சத் தீர்வினையே திணித்துவிட முயற்சிப்பார்கள்.
இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்கு நிலையானதும், நீதியானதுமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், தமிழ் அரசியல் தலைமைகளை ஒரு கருவியாக பயன்படுத்தி, சிங்களத் தரப்பினை தமது தேவைக்கேற்ப வழிநடத்துவதிலேயே சர்வதேச சமூகம் கவனம் செலுத்துகிறது.
அதற்காக, தமிழ் அரசியல் தலைமைகள்; சிறீலங்கா அரசின் நலன்களுக்கு நேரடியாகவே இணங்கிச் செயற்படுகின்ற தரப்பாக இருக்கக் கூடாது எனவும் சர்வதேசம் எதிர்பார்க்கும்.
அதற்காக, தமிழ் அரசியல் தலைமைகள்; சிறீலங்கா அரசின் நலன்களுக்கு நேரடியாகவே இணங்கிச் செயற்படுகின்ற தரப்பாக இருக்கக் கூடாது எனவும் சர்வதேசம் எதிர்பார்க்கும்.
ஆகவே, தமிழ்த் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைமைகள், பூகோளஅரசியலில், தமிழ்மக்களுக்கு சார்பாக உருவாகியுள்ள வாய்ப்பை உரியமுறையில் பயன்படுத்த வேண்டும்.
புதிய நாடு என்ற விடயம் சர்வதேசத்தின் தற்போதைய ஒழுங்குகளை மாற்றியமைக்கும் எனக்கூறி, அதனை சர்வதேசம் நிராகரித்து வருகிறது. அதேவேளை, இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உள்ள தமிழர் தேசம், அதேபோன்ற சமஅந்தஸ்த்துடன் உள்ள சிங்கள தேசத்துடன் ஓரு நாட்டுக்குள் இணைந்து வாழக்கூடியவகையிலான அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்திகொண்டிருக்கும் வரை, அதனை சர்வதேச சமூகம் நிராகரிக்கமுடியாத சூழல் உருவாகும். மேலும், தமிழ்த் தேசம் தாராளவாத ஜனநாயக கோட்பாட்டினை அரவணைத்து செல்லும் வரை, தமிழ்மக்களின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் நிராகரிக்க முடியாததாக அமையும்.
புதிய நாடு என்ற விடயம் சர்வதேசத்தின் தற்போதைய ஒழுங்குகளை மாற்றியமைக்கும் எனக்கூறி, அதனை சர்வதேசம் நிராகரித்து வருகிறது. அதேவேளை, இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உள்ள தமிழர் தேசம், அதேபோன்ற சமஅந்தஸ்த்துடன் உள்ள சிங்கள தேசத்துடன் ஓரு நாட்டுக்குள் இணைந்து வாழக்கூடியவகையிலான அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்திகொண்டிருக்கும் வரை, அதனை சர்வதேச சமூகம் நிராகரிக்கமுடியாத சூழல் உருவாகும். மேலும், தமிழ்த் தேசம் தாராளவாத ஜனநாயக கோட்பாட்டினை அரவணைத்து செல்லும் வரை, தமிழ்மக்களின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் நிராகரிக்க முடியாததாக அமையும்.
இந்த அடிப்படையில் தான் சென்ற பத்தியில் கூட இரு தனித்துவமான இறைமை கொண்ட தேசங்கள், சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்திய கூட்டினை நிராகரிக்க முடியாது என்றிருந்தேன்.
மேலேகூறப்பட்ட விடயங்களை சுருக்கமாகச் சொன்னால், சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாம் செயப்படுவதா, அல்லது எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையில் எமது கொள்கையினை முன்வைப்பதா என்ற கேள்வி எழுகிறது? தமது நலன்களை முன்னிறுத்திய சர்வதேச சமூகத்தின் நிகழ்சிசி நிரலானது, இறைமையும், சுயநிர்ணய உரிமையும் உடைய தமிழர் தேசத்தின் நலன்களை பேணாது. ஆகவே, எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, சர்வதேச சமூகம் நிராகரிக்க முடியாத வகையில், தாராளவாத ஜனநாயக கோட்பாட்டினை அடிப்படையாக வைத்து, எமது கொள்கையினை முன்வைக்கவேண்டும். அந்த அடிப்படையில்தான், இரு சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட தேசங்களுடைய கூட்டாக தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறோம்.
இவைகள் இவ்வாறிருக்க, சிங்கள தேசத்தின் தலைமைத்துவமான சிறீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் அவசியமாக நோக்கத்தக்க விடயமாகவுள்ளது.
கடந்த வாரப் பத்தியில், அதிகாரப் பகிர்வு என்ற பாதையில் தமிழ் அரசியல் தலைமைகள்; நகர்வதானது, நாம் சுயநிர்ணய உரிமையினை எவ்வாறு இழப்பதாக அமையும் என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தேன். அது அவ்வாறிருக்க, இன்றைய சூழ் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வு என்ற விடயத்திலும் பார்க்க குறைந்த பாதையான அதிகாரப் பரவலாக்கம் என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் என்பதை அடிப்படையாகக் கொண்டே பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைகள் என்ற விடயத்தினை முன்வைத்து பேச்சுக்கள் நடக்கையில், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வாயிலாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் எவ்வாறானவை என்பது அனைவரும் கவனத்திலெடுக்க வேண்டிய விடயமாகும். இந்த மாகாண சபையில், ஆளுநர், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என மூன்று அங்கங்கள் இருப்பதனை நாம் அவதானிக்கலாம்.
மாகாண சபைகளுக்கு தனியான இருப்புக் கிடையாது. சிங்கள தேசத்தின் தயவில் தங்கியிருக்க வேண்டிய இருப்பே உள்ளது. இம் முறைமையில்; சிங்கள தேசத்தின் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற ஆளுநரினாலேயே, மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர் கட்டுப்படுத்தப்படுகின்றார். ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆளுநரினால் நிiவேற்று அதிகாரம் மாகாண சபைகள் மீது பிரயோகிக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரத்தினை அமைச்சரவை ஊடாகவும் திணைக்களங்களின் தலைவர்கள் ஊடாகவும் ஆளுநர் பிரயோகிக்கின்றார்.
அதாவது, முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் ஆக்கபூர்வமான அதிகாரங்கள் எதுவும் இல்லை. அவர்கள் தனித்து ஆளுநரின் நிறைவேற்று அதிகாரத்தை பியோகிப்பதற்கு உதவுவதற்கும் ஆலோசனை வழங்குவதற்குமே மட்டுமே உள்ளனர். அதேவேளை, அமைச்சரவையின் ஆலோசனைகளைப் புறக்கணித்து அல்லது கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலே ஆளுநரால் தன்னிச்சையாக செயற்பட முடியும் என்பது ஆழமாக அவதானிக்கப்பட வேண்டியது.
ஜனாதிபதி விரும்பிய நேரத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபைகளைக் கலைக்கலாம். இது தமிழ்த் தேசத்து மக்கள் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்த பிரதிநிதிகளை சிங்கள தேசத்து தலைவர் கேட்டுக் கேள்வியின்றி அகற்றுவதாக அமைகின்றது. அத்துடன், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை செயல்வடிவம் கொடுக்கக்கத்தக்கதாக சட்டங்களை பாராளுமன்றம் இயற்றவேண்டும்;. அவ்வாறாக இயற்றிய சட்டத்தினை (உதாரணமாக மாகாண சபைகள் சட்டம் ) சாதாரண பெரும்பான்மை மூலம் பாராளுமன்றம் நீக்கவோ மாற்றவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் உத்தரவுப் படியே மாகாண சபைகள் நடந்துகொள்ளவேண்டும். இதன் அர்த்தம், ஜனாதிபதியின் விருப்பத்திற்கும் உத்தரவிற்கும் அடங்கிய வகையிலேயே மாகாண சபைகள் செயற்பட வேண்டும் என்பதாகும்.
மாகாண சபைகளின் நிதி சம்மந்தமான விடயங்கள் கூட ஜனாதிபதியினதும் சிங்கள தேசத்தினதும் கட்டுப்பாட்டுக்குள்ளேயேயுள்ளது. மாகாண அமைச்சரவை ஆளுநருடன் இணங்க மறுத்தால், ஜனாதிபதி அமைச்சரவையினை கலைக்க முடியும்.
சுருக்கமாகக் கூறுவதாயின், மாகாண சபை முறையில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அமைச்சரவைக்கு அமைச்சரவை அதிகாரங்கள் இல்லை. அதேவேளை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுனருக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. இதனை இன்னுமொரு வகையில் கூறுவதாயின், பல அதிகாரங்கள், ஆளுனருக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் ஒரு மோசமான நிலையே உள்ளது.
மாகாண சபைகள் உண்மையில் நிதியைக் கூட கையாள முடியாத ஒரு புகழப்பட்ட உள்ளுராட்சி சபைகளாக மட்டுமே உள்ளன. இது மட்டுமல்லாமல், மாகாண சபைகளினால் எடுக்கப்படும் தீர்மானங்களை “தேசிய கொள்கை” என்ற பெயரில் பாராளுமன்றத்தினால் கொண்டுவரப்படும் சட்டங்களின் வாயிலாக செல்லுபடியற்றதாகச் செய்ய முடியும் என்ற நிலையும் காணப்படுகின்றது.தமிழ் மக்களது விருப்பாக அவர்களது அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையே உள்ளது. ஆனால், அதிகாரப் பகிர்வென்பது சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும்; ஒரு அம்சமாகவே உள்ளது என்பதைனை எனது முன்னைய பத்திகளில் சுட்டிக்காட்டியிருந்தேன். மாகண சபையென்பது அந்த அதிகாரப் பகிர்வையும் விட மோசமானது என்பதுடன், வெறும் அதிகாரப் பரவலாக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது.
இந்த மாகாண சபையென்பது ஒற்றையாட்சி முறைக்குள் உருவாக்கப்பட்ட ஒரு விடயமாகும். சிறீலங்கா அரசு ஓற்றையாட்சி முறைக்குள் அமைந்திருக்கின்றமையே இனப்பிரச்சினை தோற்றம் பெற்று நீண்டு செல்வதற்கான பிரதான காரணமாகும். இந்த நிலையில், மாகாண சபையை கட்டியெழுப்பலாம் என முற்பட்டால், அந்த மாற்றங்கள் ஒற்றையாட்சியை மீறுகின்ற விடயமாக இருப்பின், அந்த திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பொரும்பான்மையினையும், ஒரு சர்வஜன வாக்கnடுப்பில் பெரும்பான்மை ஆதரவினையும் பெறவேண்டி இருக்கும். இது, இன்றைய சிங்கள தேசத்தின் மனோநிலையை கருத்தில் கொள்ளும் போது சாத்தியமற்ற விடயம் என்பதை முன்னைய கட்டுரைகள் ஊடாக எடுத்துக் காட்டியிருந்தேன்.இதனை, தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கும் புனித வாரத்தில் மனதிற்கொள்வோமாக.
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-
நன்றி – ஞாயிறு தினக்குரல்
நன்றி – ஞாயிறு தினக்குரல்
No comments:
Post a Comment