Translate

Friday 27 January 2012

த. தே. கூட்டமைப்பு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகக் கூடாது – இந்து நாளேடு


தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகிப் போகக் கூடாது அல்லது சமூகத்தின் மத்தியில் காணப்படும் தீவிரவாதப் போக்குக் கொண்ட சக்திகளால் ஊறுவிளைவிக்கும் போதும் கூட தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்.

இவ்வாறு சென்னையை தளமாகக்கொண்ட ‘The Hindu’ ஆங்கில நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
அதன் முழுவிபரமாவது,
அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையாக ’13ம் திருத்தச்சட்டத்தின் மேலதிக சரத்துக்கள்’ தொடர்பில் தனது அர்ப்பணிப்பை சிறிலங்கா அதிபர் மீளவும் வெளிக்காட்டியமையானது வரவேற்கப்பட வேண்டியுள்ளது.
இதற்கு முன்னரும் அதிபர் பல தடவைகள் இத்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் தான் ஆர்வம் கொண்டுள்ளதாக 2009ல் ‘இந்து’ நாளேட்டிற்கு வழங்கிய நேர்காணல் உள்ளடங்கலாக பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனை வெளிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காப் படைகளால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு இரு ஆண்டுகள் மேலாகி விட்டதன் பின்னர் அரசியற் தீர்வு விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் குறைந்த முன்னேற்றத்தையே காட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபரின் முன்னைய அரசியற் தீர்வு விடயத்தில் ஆதரவாக இருந்த இந்தியா உட்பட ஏனைய உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
ராஜபக்ச தனது அரசியல் நலன்களைக் கட்டியெழுப்புவதற்கான நகர்வுகளிலும், சிறிலங்கா அரசாங்கமானது புனர்வாழ்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள யுத்தத்திற்குப் பின்னான இக் காலப்பகுதியில், நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப்பிரச்சினைக்கு விரைவான அரசியற் தீர்வொன்றை சிறிலங்கா அதிபர் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த அடிப்படையில், சிறிலங்கா அரசாங்கமானது அரசியற் தீர்வொன்றில் தான் மிகத்தீவிர கரிசனையுடன் இருப்பதைக் காட்டுவதற்கான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ் சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன், சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்தது.
அரசியற் தீர்வு தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றையும் இவ் அரசாங்கம் அமைத்துக் கொண்டது. அவசரகாலச்சட்டத்தை 2011ல் தளர்த்தியமையும் இத்தீர்வுத் திட்டத்தைப் பெறுவதில் அரசாங்கம் முனைப்பாக இருப்பதைக் காட்டுவதற்கான சமிக்கையாக அமைந்திருந்தது.
கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்ததன் மூலம், சிறிலங்கா அரசாங்கமானது 2009ல் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் இழப்புக்கள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களிற்குப் பதிலளித்துக் கொண்டது.
இவ் ஆணைக்குழுவானது சிறிலங்கா அரசாங்கத்தால் மேலும் கவனிக்கப்பட வேண்டிய சில பரிந்துரைகளை அடையாளங் கண்டுள்ளது. இருந்தும், தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் சிறிலங்கா அரசாங்கமானது இன்னமும் உறுதியான சில நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
13வது திருத்தச் சட்டமானது அரசியற் தீர்வொன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு வெளிப்படையாக வழங்கப்பட்ட தீர்ப்பைக் கொண்டு அவர் செயற்படுவதாயின், பிரத்தியேகமாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களையும் கவனத்திற் கொண்டு செயற்படுவதற்கான நேரம் இதுவாகும்.
இதுவரையில், அரசாங்கமானது காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களில் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்வதற்கான தனது விருப்பத்தை வெளிக்காட்டவில்லை. ’13ம் திருத்தச் சட்டத்தின் மேலதிக சரத்தானது’ மேல்சபையில் சகல மாகாணங்களிற்கும் பிரதிநிதித்துவத்தை வழங்குவதைக் குறிக்கின்றது.
அரசியற் தீர்வுத் திட்டம் ஒன்றை வரைவதற்கான பொறிமுறையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவானது முன்னைய ஆணைக்குழுக்கள் போன்று செயற்படக்கூடாது. அதாவது அரசாங்கத்தால் முன்னர் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத்தும் எந்தவொரு பயனுள்ள வெளிவிளைவுகளையும் தருவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் இதற்குப் பதிலாக அரசியற் தீர்வொன்றை எதிர்ப்பதற்கான நகர்வுகளை மேற்கொண்ட அமைப்புக்களாகவே விளங்கியுள்ளன.
தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகிப் போகக் கூடாது அல்லது சமூகத்தின் மத்தியில் காணப்படும் தீவிரவாதப் போக்குக் கொண்ட சக்திகளால் ஊறுவிளைவிக்கும் போதும் கூட தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்.
யாழ்ப்பாணம் மற்றும் இதர பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான இராணுவ விடயம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள அச்சநிலைக்கு அப்பால், வடக்கில் மாகாணத் தேர்தலை மிக விரைவில் நடாத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட வேண்டும்.

No comments:

Post a Comment