Translate

Friday, 27 January 2012

தங்களைத் தாமே நம்பும் நிலையே தமிழர்களுக்கு இன்று


ஆலயங்களில் வசதி படைத்தோர் கடவுளை வணங்குவதற்காகச் செல்கின்றனர். இவர்கள் அங்கே கடவுளை முட்டாள் என நினைத்துக் கொண்டே தமது வேண்டுகோள்களை முன் வைப்பார்கள் , கடவுளும் தன்னை ஒரு முட்டாளாகக் காட்டிக் கொண்டே இவர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பார்.

இது சாதாரணமாக சமுதாயத்தில் இருக்கும் நடைமுறையாக உள்ளது. தற்போது இந்திய கிருஷ்ண பரமாத்மா, அமெரிக்க இராமச்சந்திர மூர்த்தி ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷ முன் எழுந்தருளினார்கள்.முன்னர் அமெரிக்க இராமபிரான் வருகை தந்தார்.பின்னர் இந்திய கிருஷ்ணா வருகை தந்தார். இவர்களிடம் தன்னை ஒரு சிறந்த பக்தனைப் போல் அடையாளம் காட்டிய மஹிந்த ராஜபக்ஷ வியர்க்க,விறுவிறுக்க நடுநடுங்கியபடி ஆடைகள் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்க இரண்டு கைகளையும் பிடித்துக் குலுக்கி தனது மரியாதையைச் செலுத்தி இங்கு என்ன நடைபெறுகிறது என்பதை புலம்பித்தள்ளியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு 13+ கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன்,நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உள்ளேன், நாட்டில் சகலரும் அமைதியாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவதே எனது இலட்சியம் என பல்வேறுவிதமான வாக்குறுதிகளை கடவுள்மாடம் அள்ளி வீசி தனது நாடகத்தை நடத்தி முடித்துள்ளார் மஹிந்த ராஜபக்ஷ. வருகை தந்திருந்த கடவுள்மாரும்

பக்தனின் நடிப்பை நம்புமாற்போல் மனமாற வாழ்த்திவிட்டுச் சென்றுள்ளனர். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மஹிந்த ராஜபக்ஷவை அனுசரித்துப் போங்கள் எனக் கூறியதுடன்,அவர் எமது பக்தர். அவரை எம்மால் கைவிட முடியாது என்றும் தமது நடவடிக்கைகள் மூலமாக
மறைமுகமாக எச்சரித்துவிட்டும் சென்றுள்ளனர்.
இதற்கு மேலாக அமெரிக்காவில் மஹிந்த ராஜபக்ஷ மீது வழக்கு போட முடியாத நிலையை ஏற்படுத்தி மஹிந்த ராஜப க்ஷவை பரிசுத்தமானவர் என அமெரிக்க அரசாங்கம் பிரகடனப்படுத்தியும் உள்ளது.

தற்போது நடந்தேறியுள்ள மனதைப் புண்படுத்தும் இந்த விடயங்களைக் கண்டு கண்ணீரைச் சிந்தாத தமிழர்கள் இருப்பார்களா? எனத் தெரியவில்லை. மேலும் வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்களும் இந்த நிலைமைகளைக் கண்டு தீராத சோகம் கொண்டிருப்பதுடன், தம்மை இவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என எண்ணுவார்கள் என்றே எண்ணுகின்றேன்.

நிச்சயமாக இந்த நிலைமை ஏற்படும் என நான் முன்பு பலமுறை தமிழ் சமுதாயத்தை பார்த்து எச்சரிக்கை விடுத்திருந்தேன்.எனது அரசியல் பத்தியை ஒழுங்காக வாசித்து வருபவர்கள் நிச்சயமாக இந்தக் கடவுள்மாரின் குத்துக்கரணங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கமாட்டார்கள்.

தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்காத வரை இத்தகைய ஏமாற்றங்களைச் சந்தித்தே ஆகவேண்டி வரும்.வலுவான நிலையில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் மேற்படி கடவுள்மார் உதவுவதைத் தவிர வேறுவழிகள் எதுவும் அவர்களால் கையாளாத நிலையே ஏற்படும்.

இந்திய கிருஷ்ணா இங்கு வந்திருந்த போது, நான் சமாதானத்திற்காக எவ்வளவோ செய்ய உள்ளேன் என நடித்த மஹிந்த ராஜபக்ஷ, திரைமறைவில் அநுராதபுரத்தில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற மனித உரிமைப் போராட்டக்காரர்களுக்கு என்ன செய்தார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளில் வெறுப்புற்று வெளியேறியிருந்த பிரிவினர் தற்போது மக்கள் போராட்டக் குழுவென்ற அமைப்பை நிறுவி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேற்படி போராட்டக் குழுவுடன் நவசமசமாஜக் கட்சி உள்ளிட்ட பல முற்போக்கு சக்திகள், இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தியக் கடவுள் கிருஷ்ணா வந்திருந்த அன்று காணாமல் போனவர்கள் தொடர்பாகவும்,அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் வடக்கில் இராணுவ ஆட்சியை நீக்கி,சிவில் ஆட்சியை ஏற்படுத்துதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை 20 பஸ்களில் கட்டி ,10000ற்கு மேற்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி அநுராதபுரத்தில் இருந்து யாழ். நோக்கி ஊர்வலமாக வாகனங்களில் சென்றிருந்தனர். சிங்கள மக்கள் மேற்படி ஊர்வலத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால் செய்தியை அறிந்த பாதுகாப்புப் பிரிவினர் மேற்படி வாகனப் பேரணி ஓமந்தை சோதனைச் சாவடிக்கு வருவதற்கு முன்பாக எத்தனையோ தடைகளை ஏற்படுத்தி எத்தனையோ கட்டுக் கதைகளைப் பரப்பி இந்த ஊர்வலத்தை முறியடிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் சகலதையும் முறியடித்துக் கொண்டு புளியங்குளம் வரை வருகை தந்துவிட்டு இருள் தொடங்கியதால் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற் கொண்டு புளியங் குளம் சந்தியில் வைத்து மறியல் போராட்டத்தை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளனர். சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காக உண்மையான போராட்ட முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ செய்த அசிங்கமான செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்ஷவின் உண்மையான முகத்தை மீண்டும் உலகிற்கு வெளிக்காட்டியிருக்கின்றது.
இலங்கையின் வரலாற்றில் ஏ9 பாதை மிக முக்கியமான பாதையாகக் காணப்படுகின்றது.மிகக் கொடிய மனித வதையைக் கண்ட பாதையாகவும் காணப்படுகின்றது. தென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கி வந்த சமாதான பிரியர்களை வாட்டி வதைத்த சம்பவம் இந்த பாதையிலேயே இன்று நடந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் கோர முகத்தை வடக்கு கிழக்கு மக்கள் ஏற்கனவே கண்டுவிட்டனர்.தற்போது தென்னிலங்கை மக்களும் காணத் தொடங்கியுள்ளனர்.20 பஸ்களில் வடக்கு நோக்கிய போராட்ட நிகழ்வு ஆரம்பம் மட்டுமே ,இது 2000 பஸ்களாக மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
எனவே கடவுள்மாரை நம்பும் உங்கள் போக்கை மாற்றி, உங்களை நீங்கள் நம்பும் நிலைமைக்கு நகருங்கள். அதன் மூலமே உண்மையான விடுதலையை நோக்கி உங்களால் நகரமுடியும்.
--கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன--

No comments:

Post a Comment