Translate

Friday 27 January 2012

தமிழர் விடயத்தில் இந்தியாவின் நடிப்பு


இலங்கை சீன உறவுப் பாலத்தைத் துண்டிப்பதற்குப் 13 பிளஸைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி தீவிரமாக செயற்படும் இந்தியா, தமிழர் விடயத்தில் கரிசனை கொள்வதுபோல் நடிக்கின்றது என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத் துள்ளது சோஷலிசக் கட்சி.ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான இந்த அரசிடம் இனப்பிரச்சினைக்கு உண்மையானதொரு தீர்வுத் திட்டம் இல்லை. காலத்தை இழுத்தடிப்பதே அதன் நோக்கம். அமைச்சர் பஸிலின் கூற்றும் இதனையே பிரதிபலிக்கின்றது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மக்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோரவில்லை என்று அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்தக் கூற்றுத் தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே சோஷலிசக் கட்சியின் பொதுச் செயலாளர்  மஹிந்த தேவகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
இனவாதப்போக்கை கடைப்பிடிக்கும் இந்த அரசிடம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் எண் ணம் இல்லை என்றே நாம் கருதுகின்றோம்.
தீர்வு விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஒரு கதை சொல்கின்றார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்னுமொரு கதை சொல்கின்றார். தற்போது அமைச்சர் பஸில் புதிய கதையொன்றை சொல்கின்றார். எந்த கதையை நாம் நம்புவது? அதிகாரப் பரவலாக்கத்திற்கு அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இவர்களைப் பகைத்துக்கொண்டால் பௌத்த வாக்கு வங்கி குறைந்துவிடும் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியமே அரசுக்கு தற்போது தேவைப்படுகின்றதே தவிர, இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல. அரசின் செயற்பாடுகள் எமக்கு இதனையே உணர்த்துகின்றன. மஹிந்த தலைமையிலான அரசிடம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கம் இல்லை.  இதனால்தான் முரண்பட்ட கருத்துகளை அமைச்சர்கள் கூறிவருகின்றனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களே இவ்வாறு கூறுவதால் அது அரசின் கருத்து என்றே பொருள்படும்.
இந்தியாவிற்கு ஒன்றையும், மேற்குலகுக்கு ஒன்றையும் கூறி பச்சோந்திகளாகச் செயற்படும் இந்த அரசை நாம் நம்பமாட்டோம்.இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சந்தைவாய்ப்புகளை விஸ்தரித்துக்கொள்வதே இந்தியாவின் பிரதான நோக்கங்களுள் ஒன்று.அதுமட்டுமின்றி, சீனா இலங்கை உறவுப் பாலத்தைத் துண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 13 பிளஸ் என்ற பழைய பல்லவியைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியுள்ளது.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் நோக்குடன் இந்தியா, இலங்கை விவகாரத்தில் தலையிடவில்லை. அது வியாபார நோக்கத்திற்காகவே தலையிடுகின்றது என்பதைத் தமிழ்மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment