Translate

Tuesday 21 February 2012

அரசியல் கோமாளிகளின் மாறுபட்ட கருத்துக்கள்


தமது இறுதி இலட்சியம் தமிழீழமே என ஆயுதம் ஏந்திப் போராடிய டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணா போன்ற அரசியல் கோமாளிகள் தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறுவது வெட்கக்கேடானது. 

எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அவ் இலட்சியத்தை தொலைத்துவிட்டு ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்த சிங்கள அரக்கர்களுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று சுகபோக வாழ்க்கை அனுபவிக்கும் இவர்களைப் போன்ற எட்டப்பர்கள் இருக்கும் வரையில் தமிழர்களுக்கு விமோசனமே கிடைக்கப் போவதில்லை.
தென் ஆபிரிக்காவில் பிறந்து வளர்ந்த ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் தலைவி நவநீதம்பிள்ளைக்கு இருக்கும் துடிப்பு இவ் அரசியல் கோமாளிகளுக்கு இல்லை என்பதை நினைக்கும் போது வெட்கப்பட வேண்டியதாகவுள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரும் தமது இலட்சியத்திற்காகவேதான் இன்றுவரை போராடுகிறார்கள். இக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் போராளி அமைப்புக்கள்கூட தாம் கொண்ட இலட்சியத்திற்காகவே இன்றுவரை அரசியல் பாதையில் போராடுகிறார்கள். ஆகவே, இவர்கள் இன்றும் தமிழீழப் போராளிகளாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாகத்தான் கடந்த தேர்தல்களில் இக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார்கள் என்பதனை எட்டப்பர்கள் உணராமல் இருக்கிறார்கள் போலும்.
இவர்களைப் போன்ற எட்டப்பர்களினால்த்தான் இன்றுவரை தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளின் கட்டுப்பாட்டில் வாழும் இழிவு நிலை உருவாகியது. சிங்கள அரச படைகளின் யாழ் மீதான ஆக்கிரமிப்புப் போரின் போது ஒட்டுமொத்த வடக்கு மக்களும் விடுதலைப்புலிகளின் பின்னால் அணிவகுத்து நின்றார்கள் என்பதனை எவராலும் மறுக்க முடியாது. அன்று வீரப்புலிகளுக்குப் பின்னால் சென்ற மக்களை இந்த எட்டப்பர்கள் இன்று சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுக்கு காட்டிகொடுத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.

தமிழர்களின் கலாச்சாரப் பண்பாடுகள் மற்றும் வரலாறுகளை அழித்தாலே தமிழர்களை அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிச் செயற்படுகிறது சிங்களம். ஒரு இனத்தின் அடையாளம் என்பது அவர்கள் சார்ந்த கலை, மொழி, சமயம், பண்பாடு, வரலாறுகளே. இவைகளை அழித்துவிட்டால் குறித்த இனத்திற்கான தன்னிச்சையான அடையாளத்தை பேண முடியாது. சர்வதேச அங்கீகாரத்தை ஒரு இனம் பெற அடிப்படையான காரணிகளும் இவைகளே. இதனை நன்கே அறிந்து செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது சிங்கள அரசுகள். இதனை புரிந்தும் புரியாத ஜோக்கியர்கள் போன்று பேசுகிறார்கள் இந்த எட்டப்பர்கள்.

தமிழர்கள் குறித்து பேச அருகதையற்றவர்கள்
தமிழீழமே தமது இலட்சியம் என்று கூறியவர்களும், பிரபாகரனே தமது ஏகோபித்த தலைவன் என்று கூறியவர்களும் இன்று சிங்கள அரசுடன் இணைந்து தமிழர்களுக்கும், தம்மை வளர்த்தெடுத்த தலைவனுக்கும் களங்கம் ஏற்படுமளவு பேசி வருவது வெட்கக்கேடானது. பிரபாகரன் இட்ட பெயரை உச்சரிக்க அருகதையற்றவர்களே பிள்ளையான், கருணா போன்றவர்கள். உண்ட வீட்டிற்கே துரோகம் செய்யும் இவ் ஈனப்பிறவிகளை வர்ணித்து கட்டுரை எழுதுவது நமது நோக்கமல்ல. இவர்களுடைய அருவருக்கத்தக்க அரசியல் கோமாளித்தனத்தை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இணைய வேண்டுமென அறிவுரை கூறியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா. அரசியல் செய்ய ழுடியாது என்பதால் கூட்டமைப்பினர் குறித்த தெரிவுக் குழுவில் இணையமாட்டார்கள் எனக் கூறியுள்ளதானது தனது அழுக்குப்படிந்த அரசியல் வரலாறு என்னவென்பதை வெளிப்படுத்தியுள்ளார் டக்ளஸ்.
உலக நாடுகளை ஏமாற்றும் நோக்குடன் அரசினால் அமைக்கப்படும் எந்தவொரு குழுக்களிலும் தமிழரின் விடுதலையை வேண்டி நிற்கும் எவரும் இடம்பெறக்கூடாது என்பதே தமிழர்களின் விருப்பு. போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்குடன் செயற்படும் இப்படியான எட்டப்பர்களை தமிழ் மக்கள் பல காலங்களுக்கு முன்னரே நிராகரித்து விட்டார்கள்.
மற்றவர் வசை பாடினால் என்ன, மற்றவர் ஒதுக்கினால் என்ன நாம் எமது எதிர்காலத்திற்காக சிங்கள காடையர்களுக்குத் தொடர்ந்தும் உதவுவோமென்று கூறிவரும் டக்ளஸ் போன்றவர்கள் தமிழ் மண்ணில் கால் பதிப்பதே அருவருக்கத்தக்கது. இவர்களைப் போன்றே தமிழ்நாட்டிலும் பலர் இருக்கிறார்கள். சுப்ரமணிய சுவாமி, ராம், சோ, மணிசங்கர் அய்யர் போன்ற பல தமிழின விரோதிகள் தமிழர்களைப் பணயக்கைதிகளாக வைத்து பணம் சம்பாதிக்கும் வேலைகளைச் செய்கிறார்கள். தமிழர்கள் செய்த முற்பாவமோ என்னவோ இப்படியான எட்டப்பர்கள் காலத்திற்கு காலம் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் இருப்பது சாபக்கேடே.
சமீபத்தில் நடந்த ஒரு வைபவத்தில் டக்ளஸ் பேசியதாவது, “15 வருடங்களிற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து அரசியல் ஊடாக பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து, ஐனநாயக அரசியலுக்குள் நுழைந்தேன். 1950-ஆம் ஆண்டு முதல் அரசியல் பேச்சின் ஊடாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதால் 30 வருடங்களுக்குப் பின்னர் ஆயதமேந்திப் போராட ஆரம்பித்தோம். அதிலும் எட்டாத நிலையில் தற்போது மூன்றாம் கட்டத்திற்கு வந்துள்ளோம். பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்குத் தீர்வு காண, தெரிவுக் குழுவில் கூட்டமைப்பினர் இணைந்து கொண்டால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும்.”
“ஆனால் கூட்டமைப்பினர் வீரம் பேசுவார்கள். பிரச்சினையைத் தீர்க்கவல்ல. தெரிவுக் குழு ஊடாக பிரச்சினை தீர்க்கப்பட்டால் அவர்களால் அரசியல் செய்யமுடியாது என்பதால். நாங்கள் மக்கள் பிரதிநிதியாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம். எமக்கும் ஐனாதிபதிக்குமிடையில் நெருக்கமான உறவு இருக்கிறது. பலமான அரசாங்கத்தினூடாக எதனையும் தீர்க்கலாம். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்,” எனத் தனது பேச்சில் குறிப்பிட்டார் டக்ளஸ்.
இனம் இனத்தைச் சேரும் என்பது பழமொழி. ஒரு கொலைகாரன் இன்னொரு கொலைகாரனுடன் இணைவதென்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஜனாதிபதியுடனான தனது உறவு நெருக்கமானது என்று டக்ளஸ் கூறியுள்ளது சாலப் பொருந்தும். மகிந்தா தூக்குமேடை ஏறும் போது டக்ளசும் ஏறத் தயாரா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் பதில் வரும். அப்படியான ஒரு சூழ்நிலை வந்துவிட்டால் கட்சி தாவி தற்போதைய எதிர்கட்சியின் செல்லப் பிள்ளையாக ஆகிவிடும் சந்தர்ப்பவாதியே டக்ளஸ்.
“தற்போது நமது பிரதேசத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. நமக்கென்று ஓர் அரசியல் அதிகாரம் உள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நமக்கு எதற்குத் தேவை?” என கேள்வி எழுப்பியுள்ளார் கருணா. அவர் மேலும் பேசுகையில், “தற்போது இருக்கின்ற பாரிய பிரச்சினை என்னவென்றால் வேலைவாய்ப்பு பிரச்சினையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 1800 பட்டதாரிகள் உள்ளனர். வடக்கு கிழக்கில் 8000-இற்கு மேற்பட்ட பட்டதாரிகளும் உள்ளனர்.
இதனைவிட சாதாரண தரம், உயர்தரம் படித்தவர்கள் என்று அதிகமானோர் உள்ளனர். கடந்த யுத்தத்தில் பல பெறுமதியான உயிரிழப்பு, சொத்திழப்பு. எத்தனையோ பிள்ளைகள் அப்பா, அம்மா இல்லாமல் தவிக்கின்றார்கள். இளைஞர்இ யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இப்படியாக பாரிய பிரச்சனையை எமது மக்கள் அன்றாடம் எதிர் நோக்குகின்றார்கள்.”
“இங்கு கஷ்ரப்படுவது போல்த்தான் வெளிநாட்டுக்குப் போயும் அங்கேயும் பலர் கஷ்ரங்களை அனுபவிக்கின்றார்கள். வெளிநாடுகளுக்குப் போவது என்பது ஒரு வீண் வேலை. அவற்றையெல்லாம் விடுத்து நம் நாட்டில் நன்றாக சுய தொழில்களை மேற்கொள்ளலாம்,” எனக் கூறினார் கருணா. வேடிக்கை என்னவென்றால், கருணாவும் சில வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியவர்தான். தாம் சரியாக இருந்துகொண்டுதான் மற்றவர்களுக்கு அறிவுரைகளைக் கூற வேண்டும்.
பல நூற்றுக்கணக்கான சிங்களக் காவலர்களை கருணா கொன்றதாக இன்றுவரை சிங்களத் தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள். கருணாவினால் இக்குற்றச் சாட்டுக்களை மறுக்க முடியுமா? தனது குடும்பத்திற்கு எதிராக செயற்பட்ட பலரை கொன்று குவித்தவரே கருணா. இவற்றை இவரினால் மறுக்க முடியுமா? தமிழீழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய கருணா பின்னர் எதற்காகப் பிரதேச வாதத்தை முன்வைத்து சிங்கள அரசுடன் இணைந்தார்? விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த வேளையில் கிழக்கு மாகான மக்களின் துன்பங்களை அறியாமலா இருந்தார் அப்போதைய மட்டக்களப்பு தளபதியாக இருந்த கருணா?
சமாதான ஒப்பந்தம் கையொப்பமாகிய பின்னர் பிரபாகரனினால் வெளிநாடுகளுக்குப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்பட்ட கருணா கிழக்கு மாகாணத் தமிழர் இல்லையா? கிழக்கு மாகாண மக்களை பிரபாகரன் மதிக்கவில்லையென்றால் எவ்வாறு கருணாவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வைத்தார்? இதன் பின்னர் தானே கருணாவை தமது வசப்படுத்தியது சிங்கள அரசு? இதனை கருணாவினால் மறுக்க முடியுமா?
தன் வினை தன்னைச் சுடும்
அடிக்கடி தமிழர் பகுதிகளுக்கு பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் மகிந்தா மற்றும் அவருடைய குடும்பத்தினர். தமிழர் மீது தாம் பற்றுக்கொண்டுள்ளதாக உலக நாடுகளுக்கு காண்பிக்க அடிக்கடி வடக்கிற்கு பயணத்தை மேற்கொள்ளும் இவர்கள், டக்ளஸ் தேவானந்தா போன்ற தமிழ் எட்டப்பர்களையும் தமது பக்கம் வைத்துக் கொண்டிருப்பது அவர்களுக்கே ஆபத்தானது.
தனதருகில் இன்று இருப்பவர்கள் நாளை விரோதிகளாகி விடுவார்கள் என்பதை மகிந்தா உணராமல் இருக்கிறார் போலும். ஆபத்தான நபர்களை தனதருகில் வைத்துள்ள மகிந்தா நிச்சயம் இவர்களினாலேயே படுகுளிக்குள் தள்ளப்படுவார். தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கிணங்க இவர்கள் விதைத்த வினைகள் அனைத்துமே இவர்களினாலேயே அறுபடை செய்யப்படும்.
தனது காரியாலயத்தில் வைத்து சமீபத்தில் மாணவர்களை டக்ளஸ் சந்தித்தார். இச் சந்திப்பின் போது, யாழ் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் யாழ். தினக்குரல் பத்திரிகையில் சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்றை தூக்கிக் காண்பித்தார். இதனையடுத்து அதற்குப் பதிலளித்த டக்ளஸ், “என்னுடைய பெடியளைப் போய் அடியுங்கடா எண்டாலும் அடிக்கிறாங்கள் இல்லை, இனி நான்தான் போகோணும். போய் நாலு சாத்து சாத்தினால்தான் அடங்குவாங்கள்” என்று அநாகரிகமற்ற வார்த்தையை கக்கியுள்ளார். தான் கொண்ட வன்முறையை இன்றுவரை கடைப்பிடிக்கும் டக்ளஸ் நிச்சயம் மக்களினால் தண்டிக்கப்படுவார் என்பது மட்டும் திண்ணம்.
டக்ளஸ் போன்ற தமிழின விரோதிகள் நிச்சயம் ஒரு நாள் தண்டனையை அனுபவித்தே தீருவார்கள். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலைகளையல்லவா இவர் போன்ற துரோகிகள் செய்கிறார்கள். சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழர்கள் பட்ட வேதனைகள் சொல்லில் அடங்காதவை.
கடந்த காலங்களில் பல ஒப்பந்தங்களைச் சிங்கள அரசுகள் தமிழர்களுடன் செய்தன. குறிப்பாக சமீப காலத்தில் அமைக்கப்பட்ட மங்கள முனசிங்க ஆணைக்குழுவுக்கு என்ன நடந்தது? சர்வ கட்சி குழுவிற்கு என்ன நடந்தது? அந்த அறிக்கைகள் எவ்வாறு குப்பைக் கூடைக்குச் சென்றன என்பதெல்லாவற்றையும் அமைச்சர் டக்ளஸ் அறிந்து வைத்திருக்கிறாரோ இல்லையோ என்று தெரியாது. ஆனால் கூட்டமைப்பு நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றது என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “பாராளுமன்றத் தெரிவுக் குழு என்ற ஏமாற்றுக் குழுவில் அங்கம் வகிக்குமாறு கூறுவது முட்டாள்தனமான கூற்றாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸால் தமிழ் மக்கள் இதுவரையில் என்ன நன்மையைப் பெற்றிருக்கின்றனர்? அவரால் என்னென்ன சாதிக்க முடிந்துள்ளது என்பதெல்லாம் விடையில்லா கேள்விகளாகும்.”
“பல்வேறு நாடுகள் சிறிலங்கா அரசிற்கு கொடுத்து வருகின்ற அழுத்தங்களின் காரணத்தினாலேயே மீள் குடியேற்றப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் அமைச்சர் டக்ளஸ் தானே அதனைச் செய்வதாக பிரசாரம் செய்து வருகின்றார். பிரசாரத்தில் அரசியல் நடத்தும் அவருக்கு கூட்டமைப்பிற்கு சவால் விடுக்க தகுதியில்லை. மனசாட்சி இருந்தால் இது அவருக்குப் புரியும்.”
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் அமைச்சர் டக்ளஸ் ஒரு போட்டி அரசியல்வாதியே இல்லை. இதனை அவரே கூறியிருக்கிறார். அது மாத்திரமின்றி இந் நாட்டில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கூறியிருந்தார். அவ்வாறு கூறியவர்தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொண்டால் போட்டி அரசியலைக் கைவிடுவதாகக் கூறியுள்ளார். இவ்வாறு வாய்ச் சவால்களை விடுத்து அவர் ஏற்கனவே கூறியதை முதலில் செய்து காட்ட வேண்டும்” என்றார் பிரேமச்சந்திரன்.
தமிழ் மக்களின் விடுதலையை முன்வைத்து ஆயுதமேந்தியவர்கள் இன்று சிங்கள அரக்கர்களுடன் இணைந்துகொண்டு மாறுபட்ட கருத்துக்களை முன்வைப்பது வெட்கக்கேடானது. மதுபோதையில் உளறும் குடிகாரர்களே இவர்கள். தமது சுகபோக வாழ்க்கைக்காக தமது இனத்தையே சிங்கள அரக்கர்களுக்குக் காட்டிக்கொடுத்து தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை அழிக்கும் வேலைகளைச் செய்யும் இவர்கள் தமிழர்களின் நலன்கள் குறித்துப் பேச அருகதையற்றவர்கள்.
கொள்கை என்றால் என்னவென்று அர்த்தம் புரியாதவர்கள் எல்லாம் இன்று கொள்கைகள் பற்றி பேச முன் வந்துள்ளார்கள். போராளிகளாக ஒரு காலத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் இன்று அரசியல்வாதிகளாக உலாவருவதுடன், மாறுபட்ட கருத்துக்களைக் கூறி அரசியல் கோமாளித்தனத்தை வெளிப்படுத்தி வருவது அவர்களுக்கு தாமே அழிவுப் பாதையை ஏற்படுத்திக் கொள்வது போன்று உள்ளது.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

No comments:

Post a Comment