Translate

Tuesday 21 February 2012

அமெரிக்காவின் முடிவும் தமிழர்களின் எதிர்பார்ப்பும்


ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.


ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதற்கு முன்பாக, இப்படியான ஒரு நிலைமை ஏற்படும் என்பதனையும் அதனை தவிர்க்க சிறீலங்கா எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அமெரிக்கா சிறீலங்காவிற்கு பலமுறை தெளிவு படுத்தியிருந்தது.
அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர் கிலாரி கிளிண்டன் முதல் சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் வரை அமெரிக்காவின் பல உயர்மட்டத் தலைவர்கள் பல தடவைகள் சிறீலங்காவின் தலைவர்களை நேரில் சந்தித்தும் எடுத்துக் கூறிவிட்டார்கள். ஆனால், அமெரிக்கா எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை.
தமது சொந்த அரசியல் பிரச்சினைக்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் தள்ளியிருக்கும் போர் நடைபெற்றபோது படையினரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை, போர்க் குற்றச்சாட்டுக்களுடன் மகிந்த அரசு சிறையினுள் தள்ளியிருந்தால்கூட சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களில் இருந்து ஓரளவிற்கு சிறீலங்கா தப்பியிருக்கும்.
ஆனால், சிறீலங்கா இராணுவம் போர்க் குற்றங்களிலோ மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என்று மகிந்த அரசு விடாப்பிடியாக மறுத்துவருகின்றது. மகிந்த அரசின் இந்தப்போக்கு மட்டுமல்ல, ஈரான் போன்ற அமெரிக்காவிற்கு உவப்பான நாடுகளுடனான அதனது இறுக்கமான உறவும்தான் இப்போது இக்கட்டான ஒரு கட்டத்திற்குள் மகிந்த அரசைக் கொண்டுவந்துள்ளது.
சிறீலங்காவைக் காப்பாற்ற அமெரிக்கா எடுத்த அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போன நிலையிலேயே, சிறீலங்கா அதற்கு வளைந்து கொடுக்காத ஒரு நிலையிலேயே இவ்வாறான ஒரு முடிவிற்கு அமெரிக்கா வந்திருக்கும் என்பது திண்ணம். ஏனெனில், ஈராக்கில் சதாம் உசைனின் ஆட்சியை அகற்றுவதற்கும், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை அகற்றுவதற்கும், தனது சொந்த மக்களையே கொல்வதாகக் கூறி லிபியாவில் கடாஃபி ஆட்சியாளர்களை உடனடியாகவே அகற்றுவதற்கும், இன்று சிரியாவில் அதே காரணங்களுடன் அதன் ஆட்சியாளர் பசார் அல்-ஆசாத்தை அகற்றுவதற்கும் மிகவும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவரும் அமெரிக்காவிற்கு சிறியதொரு தீவான இலங்கையில், மகிந்த குடும்ப ஆட்சியாளர்களை அகற்றுவதென்பது அவ்வளவு கடினமாக இருந்திருக்காது.
எனவே, மகிந்த அரசைக் காப்பாற்றவே அது கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடி, அது முடியாமல் போனதன் விளைவே தற்போதைய ஜெனீவாவாவில் தண்டிக்க எடுத்த முடிவு என்று கொள்ளமுடியும். எனவே, இது தமிழ் மக்கள் மீது கொண்ட கரிசனையால் வந்த முடிவாகக் கருதிவிடமுடியாது. எனினும், அமெரிக்காவின் இந்த முடிவு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதே.
சிறீலங்காவை ஐ.நா. தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த மூன்று வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இதன் தொடர்ச்சியாகவே இம்முறை என்றாலும் தண்டனை வழங்கவேண்டும் என்பதற்காக பெல்ஜியத்தின் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகத்தில் இருந்து மூன்று தமிழர்கள் நீதி கேட்டு ஐ.நா. மனித உரிமைகள் அவையை நோக்கி கடும் குளிருக்கும் மத்தியில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

சிரியாவில் இராணுவத்தின் தாக்குதலில் விழுகின்ற ஒவ்வொரு மரணத்தையும் உடனடியாக கணக்கிலெடுத்துக் கண்டிக்கின்ற ஐ.நா., நாள் தோறும் கொல்லப்படுபவர்கள், மாதத்தில் கொல்லப்பட்டவர்கள், இதுவரை ஒட்டு மொத்தமாகக் கொல்லப்பட்டவர்கள் என புள்ளிவிபரங்களை விரைவாக வெளியிட்டு சிரியாவில் ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது நடத்துகின்ற படுகொலைகளை உலகிற்கு அம்பலப்படுத்திக்கொண்டிருக்கின்ற ஐ.நா. தமிழ் மக்களின் படுகொலை குறித்து பெரும் மௌனம் சாதித்துவருகின்றது.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொடுக்கப்போகின்ற அழுத்தமும் தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களும் சிறீலங்காவின் இனப்படுகொலை முகத்தை அம்பலப்படுத்தும் என்று நம்பலாம். ஆனாலும், ஐ.நா. போர்க் குற்றச்சாட்டுக்களில் சிறீலங்கா தண்டிக்கப்படுவதன் ஊடாக அல்லது அந்தக் குற்றச்சாட்டில் ஒருசில சிறீலங்கா இராணுவத் தளபதிகளுக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக தமிழர்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகின்றது என்ற கேள்வியே எழுகின்றது.
ஏனெனில் சிறீலங்காவிற்கு வழங்கப்படுகின்ற தண்டனை என்பது, குற்றவாளிகளுக்கான தண்டனையாக மட்டும் இல்லாமல் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் அமையவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
ஆசிரியர் தலைப்பு 
நன்றி :ஈழமுரசு

No comments:

Post a Comment