Translate

Saturday, 11 February 2012

ஈழத்தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா.வில் நியாயம் கிடைக்குமா?


அனலை நிதிஸ் குமாரன்
ஈழத்தமிழருக்கு நேர்ந்த மனிதப் பேரவலங்களுக்கு ஐ.நா.வினாலோ அல்லது சர்வதேச சமூகத்தினாலோ நீதியைப் பெற்றுத்தர முடியுமா என்கிற கேள்வி இன்று நேற்றல்ல கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கேட்கப்பட்டு வருகிறது.  ஐ.நா.வின் பணியாளர்கள் மற்றும் பிற நாடுகளின் ஊழியர்கள் சிறிலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள். குறித்த நாடுகளினாலோ அல்லது ஐ.நா.வினாலோ எந்தவொரு நடவடிக்கைகளையும் சிறிலங்காவிற்கு எதிராக எடுக்கப்படாமல் போய்விட்டது. 

ஐந்தாம் கட்ட ஈழப் போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேசப் போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் பல உலகநாடுகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பல உலகநாடுகள் தமது இராஜதந்திர காய்நகர்த்தல்களை சிறிலங்காவிற்கு எதிராக கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக செய்து கொண்டுள்ளன. இவைகளினால் ஏதேனும் பயன் உண்டா என்று கேட்டால் இல்லை என்கிற பதிலே வரும்.
சிறிலங்கா அரசிற்கு ஆதரவாக சில பலம் பொருந்திய குறிப்பாக சர்வாதிகார நாடுகள் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றன. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் நேரடியாகவே சிறிலங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். சீனா போன்ற வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளை வெறுத்து ஒதுக்குவதற்கு பல நாடுகள் பின் நிற்கின்றன. இப்படியான சூழ்நிலையிலேயே ஐ.நா. மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மாநகரில் ஆரம்பமாக இருக்கிறது.
சிறிலங்கா அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிபுணர் குழு பரிந்துரை செய்த  அறிக்கையை அடுத்த மாதம் இடம்பெற இருக்கும் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் என்கிற வாதம் ஒரு பகுதியினரினால் தெரிவிக்கப்பட்டாலும், சிறிலங்கா அரசு தன்னாலான அனைத்து இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக ஈழத்தமிழருக்கு நிகழ்ந்த மனிதப் பேரவல விவாகரத்தை முறியடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சிறிலங்கா அரசின் இராஜதந்திர நகர்வுகளை நன்கே அறிந்த சில தமிழ் அமைப்புக்களும் தங்களால் முடிந்த வகையில் வேலைத்திட்டங்களைச் செய்து வருகிறார்கள். ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தமிழருக்கு அநீதியை இழைத்துவிட்டார் என்கிற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் அடிவருடியாகவே இவர் செயற்படுகிறார் என்கிற கருத்து பரவலாக நிலவுகிறது. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை மூன் அவர்கள் இதுநாள் வரை கூறிவருகிறார். இப்படியான ஐ.நா.வின் உயர் தலைவர்களினால் எவ்வாறு ஈழத்தமிழர் மீது மேற்கோள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும் என்கிற வாதம் ஒவ்வொரு மனித உரிமை ஆர்வலர்களிடையே இன்றுவரை இருந்துவருகிறது.
மேற்கத்தைய நாடுகளை நம்ப முடியுமா?
ஈழப் போர் உச்சக்கட்ட நிலையில் இருந்த வேளையில் மிகப் பலம் பொருந்திய பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் போரை நிறுத்த பல இராஜதந்திர காய்நகர்த்தல்களை மேற்கொண்டன. இவைகளினால் கூட பேரழிவுகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது. எதனை தான் செய்ய நினைக்கிறதோ அதனை ஐ.நா. மூலமாக செய்து முடிக்கும் திறன் அமெரிக்காவிடம் இருந்தும் அதனை செய்யாமல் விட்டது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியே.
அமெரிக்கா இரட்டை வேடத்தையே கடைப்பிடிக்கிறது. இந்தியாவை ஒதுக்கி அமெரிக்கா எதனையும் செய்ய விரும்பவில்லை. ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா நேரடியாக எதனையும் செய்ய அக்காலகட்டத்தில் விரும்பவில்லை. இன்று வரை எதனைச் செய்வது என்று தெரியாமலே குழம்பிப் போயுள்ளது இந்தியா. இப்படிப்பட்ட இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இந்தியாவின் ஆலோசனைப்படி அமெரிக்கா எதனைச் செய்து சாதிக்க முடியும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
ஒரு புறத்தில் தமிழக மக்களின் உணர்ச்சிகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென்கிற கடப்பாடு இருந்தாலும், சிறிலங்காவிற்கு ஆதரவான சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வேலைத்திட்டங்கள் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதே உண்மை. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஆதரவான நிலையை சிறிலங்கா தொடர்ந்தும் எடுத்துவருகிற காரணத்தினால் இந்திய நடுவன் அரசு சிங்கள அரசை பகைக்க விரும்பவில்லை. 
இப்படியான ஒரு சூழ்நிலையிலேயேதான் இரண்டு பகுதியினரையும் பகைக்காமல் காய்நகர்த்தல்களை இந்தியா மேற்கொள்கிறது. மேற்கத்தைய நாடுகளின் பங்களிப்புடன் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் இந்தியா மறைமுகமாக ஆதரவை அளிக்குமே தவிர தமிழர் விடயத்தில் நேரடிப் பங்கீட்டை இந்தியா செய்யாது என்கிற கருத்து நிலவுகிறது. மேற்கத்தைய நாடுகளினால் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியுமா என்கிற கேள்வி எழும்போது இரு வகையான பதில்கள் வருகிறது.
மேற்கத்தைய நாடுகள் நினைத்தால் தமிழருக்கு நீதியை அடுத்த கணமே பெற்றுத்தர முடியும். அதனை செய்ய இந்நாடுகள் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. வழக்கமாக இந்நாடுகள் மேற்கொள்ளும் மென்மையான இராஜதந்திர காய்நகர்த்தல்கள் மூலமாகக் காலத்தை கழிக்கவே இந்நாடுகள் முனைகின்றன.
மேற்கத்தைய நாடுகளினால் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியாது என்கிற பதிலும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற பிராந்திய வல்லரசுகளின் வெறுப்பை சம்பாதிக்க மேற்கத்தைய நாடுகள் விரும்பவில்லை.  இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற வளரும் பொருளாதார நாடுகளை மேற்கத்தைய நாடுகள் வெறுப்புக்கு ஆளாக்க விரும்பவில்லை. தமிழர் விடயத்தில் தலையீடு செய்வதனூடாக ஏதேனும் நலன்கள் இருக்குமேயானால் இந்நாடுகள் உடனேயே தமது ஈடுபாட்டை அதிகரித்து விடுவார்கள். தமிழர் விடயத்தில் இந்நாடுகளுக்கு எவ்வித பலனும் இல்லை என்கிற நிலையே பரவலாகக் காணப்படுகிறது.
மேற்கத்தைய நாடுகளை தமிழர்களோ அல்லது அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்களோ நம்பிக் காலத்தைக் கடத்த வேண்டியதில்லை. உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவை தமிழர் பக்கம் ஈர்ப்பதனாலேயே ஈழத்தமிழருக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும். மேற்கத்தைய நாடுகளின் ஆதரவுடன் பிற பிராந்தியங்களில் இருக்கும் நாடுகளின் ஆதரவைப் பெறுவதே புத்திசாலித்தனம். 
ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளின் ஆதரவே முக்கியம்
ஐ.நா. மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை மையப்படுத்தி தீர்மானம் வருவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறது. தமிழருக்கு நிகழ்ந்த மனிதப் பேரவலத்தை எடுத்துரைத்து அதற்கு வேண்டிய தக்க வேலைத்திட்டங்கள் என்னவாக இருக்க முடியும் என்கிற வாதத்தை இவ் மனித உரிமைச் சபையின் அமர்வில் முன்வைத்தால் சிறிலங்கா அசட்டை செய்ய முடியாது. இவ் மனித உரிமைச் சபை தனது செல்வாக்கை பிற இறமையுள்ள நாட்டின் மீது திணிக்க முடியாது என்று கூறினாலும் குறிப்பாக இவ் அமைப்பிற்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் என்பது உலக நாடுகளின் கவனத்தை தமிழருக்கு சார்பாக திருப்ப வழிவகுக்கும். 
இவ் மனித உரிமைச் சபையில் 47 நாடுகள அங்கம் வகிக்கின்றன. 13 ஆபிரிக்காவிற்கும், 13 ஆசியாவிற்கும், 8 லத்தின் அமெரிக்காவிற்கும், 7 மேற்கு ஐரோப்பா மற்றும் பிற வளர்ந்த நாடுகளுக்கும், 6 கிழக்கு ஐரோப்பாவிற்கும் ஒதுக்கபட்டுள்ளன. 26 இடங்கள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறித்த 47 நாடுகளில் பெரும்பான்மை நாடுகள் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான நிலையைக் கொண்டனவாக இருக்கின்றன. பெரும் பலம் இல்லாவிடில் இச் சபையினால் தமிழருக்கு ஆதரவான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் போய்விடும்.
அமெரிக்க அரசு ஈழத் தமிழருக்கு நேர்ந்த அவலத்தை இச் சபையில் முன்வைக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஒரு நாட்டினால் முன்வைக்கப்பட்டு சில நாடுகளினால் அங்கீகாரம் பெறுவதனால் மட்டும் குறித்த சபையினால் உறுதியான தீர்மானத்தை எடுக்க முடியாது. குறித்த சபை சிறிலங்காவிற்கு எதிராக எந்தவொரு கருத்தை முன்வைத்தாலும் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவின்றி அவைகள் அனைத்துமே தோல்வியிலேயே முடியும். தோல்வியில் முடியப்போகும் விடயத்தை எதற்காக நாம் விவாதிக்க வேண்டும் என்கிற வினா எழுகிறது. வெறும் பரப்புரைகளின் மூலமாக நியாத்தைப் பெற முடியுமென்பது பகல் கனவே.
தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டுமாயின் உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று அதனூடாக இராஜதந்திர வேலைத்திட்டங்களைச் செய்வதே சிறந்த பலனளிக்கும். மேற்கத்தைய நாடுகளை மட்டும் நம்பிக்கொண்டு தமிழர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் மாபெரும் தவறை இழைக்கிறார்கள் என்றே கருத வேண்டும். உலகில் இருக்கும் மூன்றில் இரண்டு நாடுகளைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க செய்வதனூடாக தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்களுக்குத் தீர்வு கிடைப்பது மட்டுமின்றி, தமிழர்களின் இலட்சியக் கனவான தமிழீழத்தை வெகு சீக்கிரத்திலேயே அடையலாம்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றனதொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:nithiskumaaran@yahoo.com

No comments:

Post a Comment