Translate

Saturday, 18 February 2012

தாயத்தில் தமிழ் மீது ஆக்கிரமிப்பு போர்! புலத்தில் தமிழ் மெல்லச் சாகிறது!


தமிழ் மொழி இனம் சார்ந்தது. இனத்தின் அடையாளம். வாழ்வியல் நெறி. செம்மொழி அந்தஸ்த்தை உடைய மூத்த மொழி. இப்படி தமிழ் மொழியின் சிறப்பும், பெருமையும், தகைமையும், கனதியும் நீண்டிருக்கிறது.

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட எமது மொழி மெல்ல இனிச் சாகும் என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற நிலையை உணரும்போது நெஞ்சம் தீயாய்த் தகிக்கிறது.
ஒரு இனத்தை தனித்து யுத்தத்தால் மட்டும் அழித்துவிட முடியாது. அந்த இனத்தினுடைய மொழி மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்தி அதனை சிதைக்கின்ற போது தான் குறித்த இனத்தினுடைய கலை, கலாசாரம், விழுமியங்கள் உள்ளிட்ட மொத்த அழிவு சாத்தியமாகின்றது. இன்று இந்த சம்பவம் எமது தாய் மண்ணில் நடந்தேறி வருகிறது. மாறாக புலம்பெயர் தேசங்களில் தமிழ் மறக்கப்படுகிறது அல்லது விலக்கப்படுகிறது.
யுத்தத்தால் அடிமைப்படுத்தப்பட்ட தமிழினத்தின் மீது சிங்கள அரசால் ஒரு மொழி ஆக்கிரமிப்புப் போர் நூதனமாய்க் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தரப்படுத்தல், மண்பறிப்பு, மற்றும் மொழி உரிமை மறுப்புக்காக எழுந்த விடுதலை உணர்வை குழிதோண்டிப் புதைப்பதற்காக சிங்கள அரசால் அனைத்து மக்களுக்குமான மும்மொழித் திட்டம் தயார்ப்படுத்தப்பட்டு ஆரம்ப நிகழ்வு நடாத்தப்பட்டிருக்கிறது. இதற்கு இந்தியாவின் முன்நாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழர்களுடைய பிணங்களுக்கும் கபாலங்களுக்கும் நடுவில் சாட்சிப் பொருளாகியிருக்கிறார்.
தமிழர் தாயகப் பிரதேசத்தை நோக்கி புத்தம் முன்னே செல்ல சிங்கள மொழி பின்னே செல்கிறது. தெருக்களில் தொடங்கி பாடசாலைகளில் ஒலிக்கப்படுகின்ற தேசியகீதம் வரை சிங்கள மொழி வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழ் பிரதேச நிர்வாக நடைமுறைகளை நிர்வகிப்பதற்கு தமிழ் மொழி தெரியாத சிங்களவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அரசு சிங்கள துணைவேந்தரை நியமித்திருக்கிறது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த நியமனம் ரத்துச்செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பிரதம, கௌரவ விருந்தினர்களை அழைப்பதாயின் யாழ் கட்டளைத் தளபதியிடம் அனுமதி பெறவேண்டுமாம்? அதே வேளை தானே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமென சில பிரபல பாடசாலைகளிடம் கேட்டிருக்கிறார். இப்போது யாழ்ப்பாண அரச அதிபர் நியமனத்துக்கு சிங்களவர் ஒருவரை நியமிப்பதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இனசமத்துவம் என்ற பெயரில் ஆமி – புலி திருமணம் மூலம் இனக்கலப்பு செய்து வைக்கிறது. இப்படி தமிழர்கள் தாயகப் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் தொடர்கிறது.
முன்னதாக தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழ்ந்த நீhகொழும்பு பிரதேசம் தற்போது சிங்கள மயமாகிவிட்டது. அங்கிருந்த தமிழ் பாடசாலைகள் சிங்கள பாடசாலைகளாக ஆக்கப்பட்டுவிட்டன. அங்கு வாழ்கின்ற தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழிமூலமான கல்வி திணிக்கப்பட்டுள்ளது. இருக்கின்ற ஒரு சில தமிழ் பாடசாலைகளின் வளங்கள் குறைக்கப்பட்டு தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவையெல்லாம் தாயகத்தில் தமிழ் மொழியை படிப்படியாக அழிப்பதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகள்.
புலத்தில் தமிழ்.
புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் எமது இரண்டாவது தலைமுறை தமிழ்மொழியையும் தமிழ் கலாசாரங்களையும் இழந்துவிடக்கூடிய ஒரு அபாய நிலை தோன்றியுள்ளது. இங்குள்ள பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழிகளில் தமது கல்வியை தொடர வேண்டிய நிலை இருப்பினும், தாய் மொழியான தமிழை இரண்டாம் தர மொழியாகக் கூட கற்பதற்கு பின்னடிக்கிறார்கள் அல்லது விருப்பமற்ற நிலைக்கு தாங்களாகவே செல்கிறாhகள். –வேலை வேலை என்று ஓய்வின்றி இயந்திரத் தனமாக ஓடித்திரியும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீதான கவனிப்பை செலுத்த முடியாத காரணத்தால் வெளிநாடுகளில் உள்ள அக, புறச் சூழல் பிள்ளைகளினுடைய வாழ்வில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது. அத்தோடு அந்நிய தேசங்களில் எமது பிள்ளைகளிடம் இருந்து தமிழ் மொழி பறிக்கப்படுகிறது. மொழி பறிக்கப்படும் போது வாழ்க்கைமுறை, பண்பாட்டுமுறை, கலாசார முறைகள் ஒட்டுமொத்தத்தில் தமிழினத்தின் அடையாளமே பறிக்கப்படுகிற துர்ப்பாக்கிய நிலை எற்பட்டுவிடுகிறது.
இதைவிட பிள்ளைகளினுடைய காட்சிகளில் தமிழ் இல்லை. உரையாடல்களில் தமிழ் இல்லை. இப்படி எங்களுடைய பிள்ளைகள் தமிழ் மொழியில் இருந்து விலகி நிற்கும் சூழலால் இவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள வெளி நீண்டுகொண்டே செல்கிறது. உதாரணத்திற்கு வீட்டிலுள்ள இரண்டு சகோதராகள் தாய் மொழியைத் தவிர்த்து தாம் வாழம் நாட்டினுடைய மொழியிலேயே உரையாடுகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் பிற மொழிப் படங்களையும் காட்டூன்களையும் தேடுகின்றார்கள். இது கூட மொழியை கற்றுக்கொள்வதற்கான வழியை அடைத்துவிடுகிறது எனலாம்.
உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவர்; தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான். அவர்களுடைய போரியல் வீழ்ச்சிக்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், தமிழ் பாடசாலைகள் எல்லாம் தறிகெட்டு குட்டிச்சுவர்களாகிவிட்டது. மொழியை வளர்ப்பதில் முன்னர் இருந்த உற்சாகமும் உத்வேகமும் குறைந்துகொண்டே செல்வதும் புலத்து தமிழ் மாணவர்களின் தமிழ் மொழியறிவு குறைவதற்கு ஒரு காரணம்.
ஒரு முறை இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து க.ப.அறவாணர் (முன்நாள் துணைவேந்தர்) பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது வரவேற்பு கூடத்தில் அவருடன் கூடவந்தவர்களுக்கும் சேர்த்து அவரவர் தாய் மொழியில் வணக்கம் சொல்லி வரவேற்பு வழங்கப்பட்டது. எல்லோரும் அங்கிருந்த கருவியை (Head Phone) எடுத்து காதில் பொருத்தி தங்கள் தாய்மொழியில் வரவேற்பை கேட்டு மகிழ்ந்தார்கள். அவர்களைப் போல அறவாணர் அவர்களும் அந்த கருவியை எடுத்து காதில் பொருத்தி கேட்டார். அப்போது அவருடைய முகம் ஏமாற்றம் கலந்ததாக மாறியிருந்தது. இதனை அவருக்கு அருகில் இருந்த வேறு நாட்டு நண்பர் ஒருவர் அவதானித்துவிட்டு கேட்டாராம் ஏன் உங்கள் தாய் மொழியில் வணக்கம் சொல்லவில்லையா என்று? அப்போது அறவாணர் சொன்னாராம் இல்லை எனது தாய் மொழியில் வணக்கம் சொல்லவில்லை என்று.
மீண்டும் கூட இருந்த நண்பர், உங்கள் நாடு இந்தியா தானே உங்கள் தாய்மொழி ஹந்தி தானே. ஹந்தியில் வணக்கம் சொல்லவில்லையோ என்று. அப்போது அறவாணர், எனது நாடு இந்தியா தான். இந்தியாவின் தேசிய மொழி ஹந்தி தான். ஆனால் எனது தாய் மொழி ஹிந்தி அல்ல. நான் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தமிழ் நாட்டில் வாழ்ந்து வருகிறேன். எங்களுடைய தாய் மொழி தமிழ், நாங்கள் தமிழ்மொழியைத்தான் பேசுபவர்கள் என்றாராம். என்ன சொன்னீர்கள்? ஓ! உங்களுடைய தாய் மொழி தமிழா? நீங்கள் தமிழ் தான் பேசுவீர்களா? அப்படியாயின் அது பிரபாகரன் பேசுகின்ற மொழிதானே! என்றாராம். இப்படி எமது மொழியையும் வீரத்தையும் உலகம் வியப்புடன் அறிந்திருக்கையில் நாம் எமது மொழியை பேச தயங்குவதேன்? கற்றுக்கொள்ள மறுப்பதேன்?
யூதர்கள் தங்கள் நாட்டை விட்டு துரத்தப்படும் போது துக்கம் நிறைந்த வலிகளோடு தான் வெளியேறினார்கள். ஆனாலும் அவர்களுடைய கனவுகளில் தாங்கள் வாழ்ந்த தேசம், மொழி மீதான பற்று சற்றும் விடுபட்டுப் போகவில்லை. காலவோட்டம் பல ஆண்டுகளாக அவர்களது விடுதலையைத் தாமதப்படுத்தியிருந்தன. தங்கள் தாய் மொழியை தாம் வாழுகின்ற தேசங்களில் திக்கொன்றாக சிதைந்து அறுநூறு (600) வகைகளில் பேசினார்களாம். ஆனால் இன்று அந்த மொழியை ஒரு குடையின் கீழ் ஒரு மொழியாக்கி மீண்டும் தமது மொழியை சரியான முறையிலே தமது சந்ததிக்கு புகட்டினார்கள். அடுப்படியில் இருந்து ஒவ்வொரு பொருளாக தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டி அதன் அர்த்தங்களை சரியாகப் புரிய வைத்து கற்பித்தார்கள். இன்று யூதர்களின் ஹீபுறு மொழி கணனி உலகில் 2வது இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். நாம் யூதர்களிடம் இருந்து படிக்க வேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று.
இதனிடையே நாடு கடந்த நிலையில் மலேசியாவிலே சீனர்கள் சீன மொழியை வளர்த்து வருகிறார்கள். எப்படித் தெரியுமா? அங்கு அதிகமான பெண்கள் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களிடம் சென்று சீனமொழியில் உரையாடி மீன் வாங்கினால் இரண்டு வெள்ளிக்காசுகள் குறைவாக அந்த மீனை விற்பனை செய்கிறார்களாம். இந்த மொழியுணர்வைத் தான் ரஷ்யக் கவிதையொன்று இப்படிச் சொல்கிறது.
நான் செத்துக்கொண்டிருந்தேன்
யாரோ என் தாய் மொழியில் பேசினார்கள்
எழுந்து கொண்டேன் – என்று
தமிழ் உறவுகளே!
எங்களுடைய அடுத்த சந்ததிக்கு நாம் எதை விட்டுச்செல்லப் போகிறோம்? ஏன்ற கேள்வி சந்தேகத்துடன் தொக்கி நிற்கிறது. எமது தமிழ் இனம் தொடர்ந்து அதே பெறுமதியுடன் வாழவேண்டும். உலகிலே பலவற்றை சாதிக்க வேண்டும் என்றால் தாய் மொழியான தமிழோடு விடுதலை உணர்வையும் எமது சந்ததிக்கு ஊட்டிச் செல்லவேண்டும். எங்களுடைய பிள்ளைகளுக்கு தமிழை அறிமுகப்படுத்த வேண்டும். கம்பனை, வள்ளுவனை, பாரதியை, பாரதிதாசனை, விபுலானந்தரை அறிமுகப்படுத்துவோம். ஏன் எங்களது போராட்ட தலைவர்களையும் போராட்ட வரலாறுகளையும் சொல்லிக்கொடுப்போம். இவற்றுக்கு மேலாக தமிழர்களோடு தமிழில் பேசக் கற்றுக்கொடுப்போம். மொழி உணர்வால் ஒன்று பட்டு உலகமெலாம் தமிழ் வளர்ப்போம். எமது தாய் மொழியை அழிக்க நினைப்பவனை பாரதிதாசன் வரிகளில்
பொங்கு தமிழுக்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் உண்டென்று சங்கே முழங்கு என்று உரக்கச் சொல்வோம். அதையே செய்வோம்.
- சுதேசிகன்

No comments:

Post a Comment