Translate

Monday 12 March 2012

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவிடோம் ஜெனிவா மாநாடு முடிந்ததும் போராட்டம்; தயாராகின்றனர் இனவாதிகளும் பங்காளிக் கட்சிகளைச் சார்ந்தோரும்


பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவிடோம் ஜெனிவா மாநாடு முடிந்ததும் போராட்டம்; தயாராகின்றனர் இனவாதிகளும் பங்காளிக் கட்சிகளைச் சார்ந்தோரும்
news
 நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் முன்மொழிந்துள்ள அதிகாரப் பரவலாக்கல் உள்ளிட்ட முக்கியமான பல பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தக்கூடாது என வலியுறுத்தியும், அது தொடர்பில் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களின் ஆதரவைத் திரட்டும் முனைப்புடன் நாடளாவிய ரீதியில் பெரும் வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கடும் போக்குடைய அரசின் பங்காளிக்கட்சிகளும், இனவாதப் போக்குடைய சிங்கள அமைப்புகளும் தீர்மானித்துள்ளன என நம்பகரமாக நேற்று "உதயனு'க்குத் தெரியவந்தது.


 
ஜெனிவா மாநாடு நிறைவடையும் கையோடு இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ள மேற்கூறப்பட்ட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், இதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சுடன் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுத்து வருகின்றன என்றும் அறியமுடிகின்றது.
 
அதேவேளை, இலங்கைக்கு எதிரானது எனக் கூறப்படும் பிரேரணை ஜெனிவா மாநாட்டில் நிறைவேறும் பட்சத்தில் அதற்குக் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் இடம் பெறுகின்றன எனக் கூறப்படுகின்றது.
 
அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும், அதனைச் சார்ந்த சில அமைப்புகளும் இணைந்து எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பில் விசேட மாநாடொன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளன என்று நம்பகரமாகத் தெரியவருகிறது.
 
அதற்கு அடுத்தபடியாகத் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட தேசிய அமைப்புகள் ஒன்றியம் முதற்கட்டமாக அநுராதபுரத்தில் தமது பரப்புரைகளை ஆரம்பிக்கவுள்ளன. சிங்கள மக்கள் கணிசமாக வாழும் பிரதேசங்களை இலக்குவைத்தே தெளிவுபடுத்தல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் முக்கிய பிரமுகரொருவர் தெரிவிக்கையில்; நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப் படுத்தக்கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு. இருப்பினும், சர்வதேசத்துக்கு அரசு உறுதியளித்துள்ளதால் ஒருசில சிபாரிசுகளையாவது நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும்.
 
அதனால்தான் நாம் கூறுகின்றோம், அதிகாரப்பரவலாக்கல், போர்க்குற்றம் சம்பந்தமான உள்ளக விசாரணை போன்ற நாட்டுக்குப் பாதகமான பரிந்துரைகளைத் தவிர்த்து செய்யக்கூடியவற்றைச் செய்யுங்கள் என்று.
 
அரசு முழுமையான பரிந்துரைசுகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என சிங்கள மக்களை ஒன்றுதிரட்டி நாம் வலியுறுத்துவோம். முதற்கட்டமாக அமைச்சர் விமல் வீரவன்ஸ விசேட வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிப்பார்.
 
அதனைத் தொடர்ந்து சில சிங்கள அமைப்புகள் நாடளாவிய ரீதியில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும். ஜெனிவா மாநாடு நிறைவடையும் கையோடு நாம் இதனை ஆரம்பிப்போம். ஜாதிக ஹெல உறுமயவும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளது எனக் கூறினார் அந்தப் பிரமுகர்.

No comments:

Post a Comment