இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பான 13 ஆம் திருத்தத்தையும், இலங்கையின் சொந்தத் தயாரிப்பான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு சிபாரிசுகளையும் குப்பையில் போட்டது ஏன் என்று இலங்கை ஜனாதிபதியிடம் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கேள்வி எழுப்ப வேண்டும். சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பில் கூடிய அக்கறை காட்டவேண்டும்.
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்திய எம்.பிக்களின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு 13ஆம் அரசமைப்புத் திருத்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம் பெற்றெடுத்த குழந்தை. இந்திய அரசின் சொந்தத் தயாரிப்பு. இதன்மூலம் மாகாண சபைகள் இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசமைப்புத் திருத்தத்தின்படி அதிகாரம் பரவலாக்கப்படவில்லை.
இது தொடர்பில் இலங்கை அரசு இந்திய அரசிற்கு வழங்கிய வாக்குறுதிகளை பலமுறை மீறியுள்ளது. நாட்டின் ஏனைய மாகாணங்களில் உள்ள இந்த அரைகுறை மாகாண சபைகூட இன்று வடக்கில் இல்லை.
கற்றுக்கொண்ட ஆணைக்குழு என்பது இலங்கை பெற்று எடுத்த குழந்தை. இந்நாட்டு அரசின் சொந்த தயாரிப்பு. இதன் சிபாரிசுகளை அமுல் செய்வதாகத்தான் இலங்கை அரசு உலகத்திற்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளது. இன்று இது தொடர்பிலும் அரசு உலகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிக் கருத்துத் தெரிவிக்கிறது.
இந்தியஇலங்கை கூட்டு தயாரிப்பான 13ஆம் திருத்தத்தையும், இலங்கையின் சொந்தத் தயாரிப்பான கற்றுக்கொண்ட பாடங்கள் சிபாரிசுகளையும் குப்பையில் போட்டது ஏன் என இலங்கை அரச தலைவரிடம் இலங்கை வந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழு கேள்வி எழுப்ப வேண்டும்.
இலங்கை விவகாரம் தொடர்பில் டில்லியில் மாநாடு நடத்தியவரும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான சுதர்ஷன நாச்சியப்பன் இது தொடர்பில் கூடிய அக்கறை காட்டவேண்டும்.
இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாட்டு அரசுகளின் நல்உறவுகளுக்காக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் நல்வாழ்வு எப்போதும் பலிகடாவாக்கப்பட்டுள்ளன. இதுதான் கடந்த 60 வருட கால வரலாறு.
சம்பந்தப்பட்ட மலையக தமிழ் மக்களின் ஒப்புதல் இல்லாமல் சிறிமாசாஸ்த்ரி நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது நடந்திராவிட்டால் இன்று, மலையகத்தில் இருந்து மாத்திரம், சுமார் 30 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்திருப்பார்கள். மலையக மக்களின் அரசியல் பலத்தை இந்தியா இந்த ஒப்பந்தத்தின் மூலம் காவு கொடுத்தது.
அதேபோல் வடக்கு, கிழக்கு மக்களின் ஒப்புதல் இல்லாமல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. அதைக்கூட முழுமையாக அமுல் செய்விக்க பிராந்திய வல்லரசு என தன்னைப் பிரகடனப்படுத்தும், இந்திய அரசால் முடியவில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கி இந்திய மாநிலங்களுக்கு சமானமான ஒரு ஆட்சி அமைப்பை இலங்கையில் ஏற்படுத்த இன்னமும் இந்தியாவால் முடியவில்லை.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்கள் ஆகியோருக்கு நியாயம் வழங்கப்படாமல் இலங்கையில் அமைதி திரும்ப முடியாது. தமிழ் பேசும் மக்களுக்கு நியாயம் வழங்கப்படாமல் தடுத்து நிறுத்தி இருப்பது, இலங்கை அரசு முன்னெடுக்கும் கடுமையான இனவாதக் கொள்கை என்பதை இந்திய நாடாளுமன்ற குழு அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாகக் கருதப்பட முடியாத மாகாண சபைகளைக்கூட தமிழ்ப் பகுதிகளில் முழுமையான சட்டப்படியான அதிகாரம் மிக்க சபைகளாக அமுல் செய்ய இந்த அரசு தயார் இல்லை. அதேபோல் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அனைத்து கொடுமைகளுக்கும் தீர்வு தராத, கற்றுக்கொண்ட ஆணைகுழுவின் சிபாரிசுகளைக்கூட அமுல் செய்ய அரசு தயங்குகிறது.
அரைகுறை தீர்வுகளைக்கூட தருவதற்கு இலங்கை அரசு தயார் இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலைமைக்கு இந்திய அரசு தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும்.
இதுதொடர்பில் இந்தியத் தூதுக்குழுவில் இடம்பெறும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சுதர்ஷன நாச்சியப்பன் ஆகிய முன்னணி எம்.பிக்கள் தமது பயணத்தின் இறுதி தினத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தும் சந்திப்பின் போது கேள்வி எழுப்ப வேண்டும்.
இலங்கை ஜனாதிபதி தரப்போகும் புதிய வாக்குறுதிகள் என்ன என்பதை அறிந்துகொள்ள உலகம் ஆவலாக காத்திருக்கின்றது.
இப்படி அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment