தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான இக்குழுவில் கூட்டமைப்பின் முக்கிய அரசியல் தலைவர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இவ்வகையில் மே மாதத்தின் இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள், அங்கு இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆயினும் அவர்கள் யார், யாரைச் சந்திக்கவுள்ளார்கள் என்ற விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதன்போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் இழுத்தடிப்பு மற்றும் அரசியல் தீர்வில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ள இக்குழுவினர், அரசியல் தீர்வை விரைவுபடுத்துவது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் இந்திய அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா சென்று திரும்பியதும் தமிழரசுக் கட்சியின் மாநாடு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு மீண்டும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், இப்போருக்குக் காரணமான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
இது குறித்து சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் வற்புறுத்திய போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை. இத்தகையதொரு பின்னணியிலேயே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு கடந்த வருடம் அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து அந்நாடுகளின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை தெரிந்ததே.
No comments:
Post a Comment