இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடம் எங்கள் நிலைமைகளை எடுத்துக் கூறி எமது விடுதலைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுங்கள் என த.தே. கூ தலைவருக்கு உருக்கமான கடிதமொன்றினை தமிழ் அரசியல் கைதிகள் அனுப்பியுள்ளனர்.
இலங்கைச் சிறைச்சாலைகளில் அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான எமக்கு விடுதலை தொடர்பான விபரங்கள் எதுவுமே கேள்விக்குறியாக உள்ளது.
இதனால் விடுதலைக்காக இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடம் எமது நிலைமைகளை எடுத்துரைத்து அவர்கள் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, இவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தின் விபரம்,
தமிழ் அரசியல் கைதிகள்
அனைத்திலங்கை சிறைச்சாலைகள்.
13.04.2012
கௌரவ ஆர்.சம்பந்தன் அவர்கள் பா.உ
தலைவர்,
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு
ஐயா,
இந்திய பாராளுமன்றக் குழுவினரிடம் எமது நிலையினை எடுத்துரைத்து விடுதலைக்கு வழிசமைக்க வேண்டுகிறோம். அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு, இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் மிக நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் தங்களிடம் விடுக்கும் வேண்டுகோள்:
காலம் காலமாக எமது விடுதலையை வலியுறுத்தி, அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தும், பல கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தற்போது, மனமுடைந்த நிலையில் விடுதலைக்கான இலக்கு தெரியாமல் சிறைகளில் அடைபட்டு கிடக்கும் எமது அவல நிலைமை நீங்கள் அறிந்ததே.
அந்த வகையில் எமது நிலையினையும், எமது குடும்ப உறவுகள் எதிர்கொள்ளும் வறுமை, பாதுகாப்பு அத்துடன் சமூக பிரச்சினைகள் உட்பட மனவேதனை, உளரீதியான தாக்கங்களையும் இலங்கை வந்திருக்கும் இந்திய பாராளுமன்றக் குழுவினரிடம் எடுத்துரைத்து, எமது எதிர்காலத்திற்கு ஒளியேற்றும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ் அரசியல் கைதிகள்
அனைத்திலங்கை சிறைச்சாலைகள்.
இதுவரை காலமும் சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய முறையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இங்குள்ள அரசியல் வாதிகளும் சிறையில் உள்ள இவர்களைச் சென்று பார்த்து விட்டு அறிக்கை விடுவது மட்டும் தான்.
தற்போது இந்தியக்குழு தமிழ் மக்களது பிரச்சினைகளை நேரடியாக பார்க்க வேண்டும் என அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்துள்ள நிலையில் அரசியல் கைதிகளும் தமக்கு தீர்வு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றே கூறிக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment