Translate

Thursday, 12 April 2012

சிறிலங்காவையும், அதன் தேசிய விமான சேவையையும் புறக்கணிக்கும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள்

நட்டத்தில் இயங்கும் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ், ஐரோப்பாவுக்கான தனது சேவைகளையும் விமானத்தில் வழங்கப்படும் பயணிகளுக்கான வசதிகளையும் குறைப்பதாக அறிவித்துள்ளது. 

செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயணிகளுக்கான உணவு வசதிகளை குறைக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 


“ஆசனப்பதிவுகள் குறைந்து போனதால், லண்டன் உள்ளிட்ட ஐரோப்பாவுக்கான பல பயணத் திட்டங்களை நாம் நிறுத்தியுள்ளோம். 

முன்னர் வாரத்தில் 12 சேவைகளை நடத்தி வந்தோம் தற்போது அது 7 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவும் குறைக்கப்பட்டுள்ளன. 

உதாரணத்துக்கு கொழும்பு- சென்னை - கொழும்பு விமானப் பயணத்தின் போது முன்னர், மதுசாரம் அடங்கிய அல்லது மதுசாரம் இல்லாத பானங்களுடன் சூடான முழுமையான உணவு வழங்கப்பட்டது. 

ஆனால் தற்போது ஒரேயொரு சிற்றுண்டியும், கேட்டால் மட்டும் பானமும் வழங்கப்படுகிறது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

கடந்த ஆண்டில் ஐரோப்பாவில் இருந்து சிறிலங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறியளவு சரிவு காணப்பட்டது. 

ஆனால் தூரகிழக்கு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. 

இந்தநிலையில், சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவையின் ஆசனப்பதிவுக்கான கேள்வி திடீரெனக் குறைந்து, அதன் சேவைகளும் வசதிகளும் மட்டுப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. 

இது, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவையும், சிறிலங்காவின் தேசிய விமான சேவையையும் புறக்கணிக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment