Translate

Thursday 19 April 2012

மூன்றாம் தரப்பு இல்லாமல் தமிழர்களுக்குத் தீர்வு சாத்தியமா? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்


ஈழத்தமிழரின் அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தம் தேவையில்லை என அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார். இந்த விடயம் ஈழத்திலும் சரி புலத்திலும் சரி எந்தவிதமான அதிரிவலைகளையும் உருவாக்கி விட்டிருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இதற்கு காரணம் சரியான புரிதல் இல்லையா? அல்லது ஜயா சம்மந்தர் மீதான அபரிமிதமான நம்பிக்கையா? என்று எமக்கு நிச்சயமாகப் புரியவில்லை. கூட்டமைப்பின் குழறுபடிகள் தமிழர்களுக்கு இன்று புரிந்திருக்கின்றது. எனவே மீண்டும் மீண்டும் அவர்கள் தொடர்பாகவே பேசிக்கொண்டு காலத்தை நீட்டிக்கவோ, அல்லது எம்மை அவர்களின் எதிராளிகளாக காட்டிக்கொள்ளவோ எமக்கு கட்டாயம் கிடையாது.
இதில் இன்னொரு பக்கமும் உள்ளது. அதாவது இப்படியே நாம் பேசிக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் எம்மை இவர்கள் தமிழ் தேசியத்தின் எதிராளிகளாக கூட சித்தரித்து விடக்கூடும். ஆனால் கூட்டமைப்பினர் பேசும் பேச்சுக்களைப் பற்றியும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைகள் குறித்தும் சற்று நாம் அமைதியாக இருந்து நிதானிப்பது நல்லது என்பது எங்கள் எண்ணவோட்டமாக இருக்கின்றது.
அண்மையில் ஜயா சம்மந்தர், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்க்குமிடையிலான பேச்சுக்களில் மூன்றாம் தரப்பினரின் மத்தியஸ்த்தம் தேவையில்லை எனக்குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இது ஒரு மூட்டாள்தனமான கருத்து எனக்குறிப்பிடுவதைத் தவிர என்னுடைய அறிவுக்கு எட்டியவரையில் வேறொரு வார்த்தை கிடையாது என்றே கருதுகின்றேன்.
தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் கடந்த அறுபது வருடங்கள் இதே பெரும்பான்மைச் சிங்கள அரசாங்கங்களுடன்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம். தமிழர்கள் நிமிர்ந்து நின்றிருந்தபோதும், நலிந்து கிடந்தபோதும், சர்வதேசத்தை ஏமாற்றவும், சர்வதேசத்தில் தன்னையொரு மனிதவுரிமை மதிக்கும் மனிதராகவும் காட்டிக்கொள்ளவும் காலத்திற்குக் காலம் ஆட்சியிலிருந்த சிங்கள அசர தலைமைகள் முயன்றன.
இந்த கசப்பான வராலற்று உண்மைகளை நாங்கள் படித்தல்லாது அனுபவத்திலேயே கண்டிருக்கின்றோம். எனவே நிலைமை இவ்வாறிருக்க, இனிமேலும் ஒரு பிடியில்லாமல் தொடர்ந்தும் இந்த பேரினவாத சக்திகளுடன் பேசிக் கொண்டிருப்பது நிச்சயமாக தமிழர்களை அழிவுப்பாதைக்குக் கொண்டுசெல்லப்போகின்றது என்பதில் சந்தேகம் கிடையாது.
முன்னராயினும் பேச்சுவார்த்தை தோற்றுப் போகின்றபோது புலிகள் ஒரு பலமான பேசும் சக்தியாக இருந்தார்கள், அடுத்தகட்டம் என்ன என்பது பற்றி சிந்திக்க முடிந்தது. ஆனால் இன்று அடுத்தகட்டம் என்ன என்று சிந்திக்க அவகாசம் இல்லாத ஒரு சந்திப்பில் நின்று கொண்டு, தொடர்ந்தும் நாம் அரசுடன் பேசத் தயார், அதற்கு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தம் தேவை கிடையாது என்றால், அந்தக் கருத்து ஒரு இனத்தின் விடுதலை சார்ந்து அந்த இனத்தின் விடுதலையின் தேவையினை உணர்ந்து வருகின்ற வார்த்தைகள் கிடையாது என்பதை தமிழர்கள் நாங்கள் புரிந்து கொண்டாகவேண்டும்.
முறைப்பிரகாரமும், நாங்கள் வரலாற்றிலிருந்து பெற்றிருக்கின்ற படிப்பினைகளின் அடிப்படையிலும் இந்த அரசாங்கத்துடன் நாங்கள் பேசவே கூடாது. அறுபது வருடங்களும், அதற்கு முன்னரும் இதே பெரும்பான்மை பேரினவாத சக்திகளுடன் பேசி தமிழர்களுக்கு அழிவுகளை தவிர வேறு எதுவுமே கிடைக்கவில்லை. இனிமேலும் கிடைக்கப்போவதில்லை.
எனவே பேசவே கூடாது என்ற தமிழரின் நிலைப்பாட்டையும் மீறி இந்த அரசாங்கத்துடன் பேசிக் கொண்டிருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு இந்தப் பேச்சுக்களுக்கு ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் தேவையில்லை எனக் குறிப்பிடுவதன் சூட்சுமம் என்ன என்பது உண்மையில் எமக்குத் புரியவில்லை.எங்கள் இனத்தின் பேசும் சக்தியாக உலகமே வாய்
பிளந்து பார்த்திருந்த மிகப்பெரிய போராட்ட வலுவை   அழியவிட்டு, இன்னமும் இந்த அரசாங்கத்துடன் பேசிக் கொண்டிருக்கப்போகின்றோம் என்றால் அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமுடியாதவொன்று. இந்த இடத்தில் ஈழத்திலுள்ள தமிழர்களும், புலத்திலுள்ள தமிழர்களும் கூட்டமைப்பின் உன்மையான உளப்பாங்கு என்ன என்பதை கேட்கவேண்டும்.
வெறுமனே பூச்சியங்களை வைத்துக் கொண்டு நாங்கள் கணக்குப்போட்டுக் கொண்டிருக்க முடியாது. காரணம் ஒரு வாரம் பசி கிடந்தவனுக்கு உணவு எப்படித்தேவையோ அப்படியே விடுதலையும் எமக்குத் தேவை. உணர்ச்சிவசப்பட்ட மனிதர்களாக, விடுதலை கேட்பதன் தாற்பரியத்தை புரிந்து கொள்ளாத மனிதர்களாக நாங்கள் விடுதலைக்காக போராடவில்லை.
விடுதலைக்கான விலை எமக்குத் தெரியும். அதை கொடுக்கத் தயாரன நிலையில் பேராடினோம், விலை கொடுத்தும் இருக்கின்றோம், இன்னும் மீதியாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.
இந்தக் கட்டத்தில் மீதியை கொடுக்க மாட்டோம், அல்லது காலம் தாழ்த்தியே கொடுப்போம் என்பதெல்லாம் விடுதலையை எப்படி பின்னகர்த்துமோ, அப்படியேதான் இன்று அரசுடனான கூட்டமைப்பின் பேச்சுக்களும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் வேண்டாம் என்ற பேச்சுக்களும் நிச்சயமாக எங்கள் விடுதலையை பின்னகர்த்தத்தான் போகின்றன. சரி மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தம் இல்லாமல் நடைபெறும் பேச்சுக்கள் எப்படியிருக்கும் என்பது பற்றி ஒரு தடவை சிந்தித்துப் பார்ப்போமே.
இதற்காக சமகால நிலைமையினையே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். ஜ.நா மனிதவுரிமைகள் பேரவையின் அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதில் நிறையவே குறைகளும், குற்றங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் அந்தத் தீர்மானத்தை கூட நிறைவேற்ற முடியாத நிலையில், நிறைவேற்றும் மனமில்லாத மமதையில் இன்று அரசாங்கம் இருக்கின்றது. மேலும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துடன் இருக்கின்ற இனவாத சக்திகள் அதற்கு அனுமதிக்கப்போவதும் கிடையாது.
அதுபோக யுத்தத்தின் பின்னர் கூட்டமைப்பு இதே அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றது? ஆனால் குறைந்தபட்ச தீர்வுகள் குறித்தாவது இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் முடிபு காணப்பட்டதா? நிச்சயமாக கிடையாது. இந்த நிலையில் தமிழர்களின் நீண்டகால அரசியல் அபிலசைகளை எப்படி இந்த அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்து கூட்டமைப்பு புரிந்து கொள்ளவில்லையா? அல்லது தமிழ் மக்கள்தான் புரிந்து கொள்ளவில்லையா? காணி, காவல்துறை அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்கமுடியாது, மாகாண ஆளுநருக்கே அதிகாராம், வடகிழக்கு இணைப்பு கிடையாது.
இப்படியே எல்லாவற்றுக்கும் கிடையாது, கிடையாது என்றே அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்றது. இனிமேலும் அப்படித்தான் கூறப்பபோகின்றது. இப்படித்தான், இதைத்தான் கூறப்போகின்றது என்கிற அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதன் மூலம் தமிழர்களுக்கு என்ன கிடைக்கப்போகின்றது.
மீண்டும் மீண்டும் நாங்கள் ஒரு நிலைப்பாட்டைத்தான் கூறப்போகின்றோம், சிங்களமும் மீண்டும் மீண்டும் தங்களுடைய மறுப்பைத்தான் தெரிவிக்கப்போகின்றன. எனவேதான் அரசுடன் தமிழ் தலைமைகள் பேசத்தான் போகின்றன என்றால் அது மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தத்துடன் பேசவேண்டும்.
எங்களுடைய நிலைப்பாடு சிங்களத்தால் புரிந்து கொள்ளப்படாமையினால் அவை நிராகரிக்கப்படவில்லையே! புரிந்தும் புரியாததுபோல் ஏற்றுக் கொள்ளப்படாமையினாலேயே அவர்கள் இதுவரை எமக்கான ஒரு தீர்வை தர முன்வரவில்லை. ஆனால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் கொண்டுவரப்பட்டால் ஒரு நடுநிலைவாதிக்கு நிச்சயமாக நீதியின் கருத்துக்கள் புரியும். எனவே அந்த மத்தியஸ்த்தர் யார் என்பதை தெரிந்துகொண்டு அவர்களுடன் பேசுவதே அர்தபுஸ்டியுள்ள ஒரு பேச்சுவார்த்தையாக அமையும்.
அல்லாது போனால் இப்படியே எங்கள் அடுத்த தலைமுறையும் பேச்சுவார்த்தை நடத்தும், அடுத்த தலைமுறையும் விடுதலைக்கான போரை கொண்டு செல்லவேண்டியிருக்கும். எனவே மீண்டும் மீண்டும் நாம் ஒரு விடயத்தை தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். எமக்கான சுதந்திரத்தை வேறு யாரும் பெற்றுக் கொடுக்க முடியாது, ஆனால் வேறு சக்திகளை எங்கள் விடுதலைப் போராட்டப் பாதையில் இணைத்துக் கொள்ள முடியும். அது எமக்கு வலுச்சேர்ப்பதாக இருக்கும்.
நன்றி : ஈழமுரசு

No comments:

Post a Comment