Translate

Thursday, 12 April 2012

தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

Posted Imageதமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்தியாவின் மதுவரையில் தெரிவித்துள்ளார்.


'இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் மதுரை வழக்குரைஞர் சங்கத்தில் புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அகிம்சை வழியிலும், ஆயுதம் ஏந்திய வழியிலும் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் 3 லட்சம் மக்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த கடைசிக் கட்ட போரில் மட்டும் 1.40 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலிச் சிறைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்வது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இரண்டாம் தர, மூன்றாம் தரக் குடிமக்களாக தமிழர்கள் நடத்தப்படுகின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள்தான் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்தன. அதற்கான அடையாளங்களையே அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது.

திருகோணமலை பகுதியில் 22 சதவீதமாக இருந்த சிங்களவர், முஸ்லிம்களின் மக்கள்தொகை தற்போது 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. அம்பாரத்துறை பகுதியில் 21 சதவீதமாக இருந்த சிங்களவர் மக்கள்தொகை தற்போது 90 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இறுதிப் போர் நடந்த முல்லைத் தீவு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மீண்டும் தமிழர்கள் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது. சிங்கள ராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல், இன அழிப்பு உலகுக்கு தெரியவந்துவிடும் என்பதால், அப் பகுதியில் குடியேற்றத்தை தடுத்து வருகிறது.

தமிழர்களின் எதிர்பார்ப்பு: ஜெனீவா தீர்மானம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சுதந்திரம், சம உரிமை கிடைக்கும் என்றால், அது தமிழகத்தில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தின் காரணமாகவே வழங்கப்படும் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலும் ஓங்கி ஒலித்ததன் காரணமாகவே, ஜெனீவா தீர்மானத்துக்கு இந்திய அரசு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு கொள்கை ரீதியான மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழக மக்களின் உணர்வுப்பூர்வ நடவடிக்கைகள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஜெனீவா தீர்மானத்தின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினை சர்வதேச சமூகத்தின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. இருந்தபோதும், தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை முழுமையாக வெளியேற்றுவது, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு, கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பொது விசாரணை என்பதெல்லாம் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்குத்தான் குறிப்பாக தமிழகத்துக்கு ஆபத்தாக இருக்கும். யாழ்ப்பாணம் அருகில் சீனா காற்றாலை அமைத்து வருகிறது. ஆனால், அங்கிருந்து 3 விநாடிகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தாக்க முடியும் என்கின்றனர். இவ் விஷயத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். இலங்கை வரும் இந்திய எம்.பி.க்கள் குழு, சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து சுதந்திரமாக தமிழர் பகுதிகளைப் பார்வையிட வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் உண்மை நிலை தெரியவரும் என சிறிதரன் தெரிவித்துள்ளார். 
http://www.globaltam...IN/article.aspx 

No comments:

Post a Comment