Translate

Monday, 30 April 2012

ஐ.நாவில் இந்தியாவுக்கு எதிராக வாக்களித்து பழிதீர்த்தது சிறிலங்கா


ஐ.நாவில் இந்தியாவுக்கு எதிராக வாக்களித்து பழிதீர்த்தது சிறிலங்கா

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவை ஐ.நாவிலேயே சிறிலங்கா பழிதீர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கான போட்டியிலேயே இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா வாக்களித்துள்ளது.

நீதிக்கான அனைத்துலக நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்தியாவின் சார்பில் உச்சநீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரி போட்டியில் நிறுத்தப்பட்டிருந்தார்.

ஐ.நா பொதுச்சபையில் அண்மையில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. இதன்போது இந்தியா நிறுத்திய நீதிபதி தல்வீர் பண்டாரிக்கு எதிராக சிறிலங்கா வாக்களித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கே சிறிலங்கா ஆதரவளித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவடப் பிரதிநிதி பாலித கொகன்ன மறுத்து விட்டார்.

இரகசிய வாக்கெடுப்பே நடத்தப்பட்டது என்பதால், சிறிலங்கா யாருக்கு வாக்களித்தது என்பது குறித்து எதுவும் பேசமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வாக்கெடுப்பின்போது இந்தியா சார்பில் நிறுத்தப்பட்ட நீதிபதி தல்வீர் பண்டாரி தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா ஆதரித்த 84 வயதான பிலிப்பைன்ஸ் நீதிபதி புளோரன்ரினோ பெலிசியானோ அனைத்துலக நீதிமன்ற நீதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது - சிறிலங்காவுக்கு ஆதரவாக – அந்தத் தீர்மானத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் முதன்மையான நீதிமன்ற அமைப்பான, நீதிக்கான அனைத்துலக நீதிமன்றம் 1946ம் ஆண்டு ஐ.நா சாசனப்படி உருவாக்கப்பட்டது.

15 நீதிபதிகளைக் கொண்ட இந்த நீதிமன்றம் அனைத்துலகச் சட்டங்கள், நாடுகளால் சமர்ப்பிக்கப்படும் சட்டப் பிரச்சினைகள் குறித்த ஆலோசனைகள், ஐ.நா அமைப்புகள் மற்றும் சிறப்பு முகவரகங்கள் தொடர்பான சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

No comments:

Post a Comment