Translate

Monday 16 April 2012

இலங்கைக்கு செல்லும் இந்தியக் குழுவால் பயனில்லை: டி.ராஜா

டெல்லி: இலங்கை செல்லும் இந்திய எம்.பிக்கள் குழுவால் பயன் ஏதும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமை குறித்து ஆராய சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ளது. இக்குழு வரும் 21-ந் தேதி வரை அங்கு பயணம் மேற்கொள்கிறது.


இக்குழுவினால் எந்தப் பயனும் ஏற்படாது என்று அதிமுக, திமுக கட்சிகள் கூறியுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜாவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையை நேரில் பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் குழுவை அனுப்பி வைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் கூறினர். ஆனால், தற்போது செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இடம்பெறவில்லை.

மேலும் தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவும், முக்கிய கட்சியான திமுகவும் இக்குழுவைப் புறக்கணித்துள்ளன.

இலங்கை சென்றுள்ள குழுவானது போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்தித்து அவர்களது உண்மையை நிலையை முழுமையாக அறியுமா என்பது சந்தேகம்..

மருத்துவமனைக்கு மருத்துவக் கருவிகள் வழங்குவது, வீட்டுவசதித் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளைத் தருவது, சைக்கிள்களை அளிப்பது போன்றவற்றுக்காக இக்குழு செல்வதுபோல் தெரிகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களை இக்குழு சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்பதுகூட சந்தேகமே. காரணம், இலங்கை ராணுவத்தினர் அழைத்துச் செல்லும் பகுதிகளுக்கு மட்டுமேதான் இந்தியக் குழுவினர் செல்ல முடியும்.

ஆகவே, இக்குழு இலங்கை அரசுடனான இந்திய அரசின் நல்லெண்ணக் குழுவாகத்தான் இருக்குமே ஒழிய, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து ஆராயவோ, அவர்களுக்கான அரசியல் தீர்வுக்கு உதவுமா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்தக் குழுவால் முழுமையான பலன் கிடைக்குமா என்பது சந்தேகம் என்றார் அவர்.

No comments:

Post a Comment