விநாயகர் ஆலயத்தை அகற்றுவதை அரசு கைவிட வேண்டும்: வேலாயுதம்
சிறுபான்மையினரின் மத உரிமை மற்றும் கலாசார விழுமியங்கள் பாதுகாக்கப்படும் என அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கின்ற போதிலும் தம்புள்ளையில் பள்ளிவாசலை தகர்த்து அரசு தனது கையாலாகாத் தன்மையை வெளிக்காட்டி விட்டது என்று ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஐ. தே. க.வின் உபதலைவருமான கே. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
தம்புள்ளையில் பள்ளிவாசல் புனித பிரதேசத்துக்குள் இருப்பதாகக் கூறி பௌத்த பிக்குகளின் தலைமையில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொலிஸார் இராணுவத்தினர் முன்னிலையில் பேரினவாதிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது மிகவும் கீழ்த்தரமானதும் அநாகரீகமானதுமான செயல்பாடாகும்.
அன்று ஜெனீவாவில் தமிழ் பேசும் மக்களின் மீதான மனித உரிமை மீறல் மீள்குடியேற்றம் அதிகார பகிர்வு போன்ற விடயங்கள் சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையை எதிர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஊது குழலாய் செயல்பட்ட முஸ்லிம் அரசியல் வாதிகளும் சில சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இப்பிரச்சினையை பார்த்துக் கொண்டு வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருப்பதை விடுத்து இந்த மோசமான மிலேச்சத்தனமான செயலை எதிர்த்து சிறுபான்மை மக்கள் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற இன பாகுபாடான நிலைப்பாட்டை எதிர்த்து குரல் கொடுக்கவும் மிகவும் ஆணித்தரமான நடவடிக்கையில் உடன் இறங்கவும் வேண்டும்.
அன்று வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் இந்து ஆலயங்கள் சிதைக்கப்பட்ட போது சிறுபான்மை அரசியல் கட்சிகளிடமும் அதன் தலைவர்களிடமும் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் தனக்கு வேண்டியதை பெரும்பான்மை சிங்கள மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசாங்கங்கள் செயல்படுத்தி வந்துள்ளன. இவற்றின் மூலம் பாடங்களை கற்றுக் கொண்டவர்கள் தமது சுயதேவைகளுக்காக தங்களது மத, இன விழுமியங்களை அடமானம் வைக்கின்ற செயல்பாடுகளிலிருந்து விலகி அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இக்காலகட்டத்தின் அவசியமானதாகும்.
தம்புள்ளையை தொடர்ந்து திருகோணமலையிலுள்ள பழைய விநாயகர் ஆலயத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசாங்கம் எடுத்து வரும் நிலைப்பாட்டை உடன் நிறுத்த வேண்டும். சகல இந்து அமைப்புகளும் சிறுபான்மை கட்சிகளும் ஜனாதிபதியை சந்தித்து இந்த மத அழிப்பு நடவடிக்கையிலிருந்து அரசாங்கம் தன்னை மாற்றிக் கொண்டு செயல்படுவதுடன் தங்களின் ஆணித்தரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் திருகோணமலையிலுள்ள பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தை அவ்விடத்திலிருந்து அகற்ற மேற்கொள்ளப்படும் அரச நடவடிக்கைக்கு எதிராக உறுதியானதும், ஆக்கபூர்வமான செயல்பாட்டினையும் மேற்கொண்டு இந்து மக்களது அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment