Translate

Wednesday, 16 May 2012

பண்டத்தரிப்பில் திருவிழா - 250 ஆட்டுக்கடாக்கள் உயிரைவிட்டன! பார்த்து மகிழ்ந்தனர் பக்தர்கள்.

Posted Imageயாழ் பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஆலயம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்களின் கண்முன்னே 250 இற்கும் அதிகமான ஆட்டுக்கடாக்கள் வெட்டிச்சாய்க்கப்பட்ட சம்பவம் பலியிடுதல் என்று நடைபெற்றுள்ளது. வருடந்தோறும் பண்டத்தரிப்பு பிரான்பற்று ஆலயத்தில் நடைபெறும் வேள்வியிலேயே இந்தமுறையும் இவ்வாறு பெரும் எண்ணிக்கையான ஆட்டுக்கடாக்கள் பலியிடப்பட்டுள்ளன.

ஆலய வேள்விக்காக அதிகாலை முதலே டிறாக்டர், லாண்ட் மாஸ்டர், மாட்டு வண்டிகளில் நீராட்டப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் ஆட்டுக்கடாக்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டன. மனிதனின் தேவைக்காகப் படைக்கப்பட்ட பொருள்களில் ஆட்டுக்கடாவும் ஒன்று. எனவே இறைவனின் சந்நிதானத்தில் பலியிடுவதால் மோட்சநிலைக்குச் செல்லும் வாய்ப்பு அவற்றுக்கு ஏற்படும் என்று ஆலய பூசகரால் அருள்வாக்குக் கூறப்பட்ட பின்னர் வேள்வி ஆரம்பமானது.
ஆட்டுக்கடாக்களின் தலைகள் ஒரே வெட்டில் அறுக்கப்பட்டன. இரத்தம் கொப்பளிக்க அவை நிலத்தில் வீழ, தொடர்ந்தும் காத்திருந்த ஆடுகள் பலியிடப்பட்டன. கூடவே 72 கோழிகளும் இதன்போது பலியிடப்பட்டன. வேள்வியின் போது பலியிடப்பட்ட முதல்நிலையான ஆடுகள் இரண்டு லட்சம் ரூபா வரை விலை போயின. ஓர் ஆட்டினைப் பலியிடுவதற்கு ஆலயத்துக்கு ஆயிரம் ரூபா கட்டணமும் செலுத்தப்பட்டது.
வேள்வியைத் தொடர்ந்து பொங்கல் வழிபாடுகளும் இடம்பெற்றன. பிரான்பற்றைத் தொடர்ந்து ஆனைக்கோட்டை, கவுணாவத்தை, சித்தன்கேணி, நவாலி போன்ற இடங்களிலுள்ள ஆலயங்களிலும் மிருக பலியிடல் நிகழ்வுகள் அடுத்துவரும் வாரங்களில் நடைபெறவுள்ளன. இதேவேளை, ஆலயங்களில் இவ்வாறு மிருக பலியிடலை மேற்கொள்வதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
நாவலர் வழியில் சைவநெறி தவறாது வாழ வேண்டிய நாம் இன்று சைவக்கோயில்களில் வேள்வி என்ற பெயரால் மிருகபலி செய்வது எமது சமயத்துக்குச் செய்யும் துரோகமாகும் என்று அகில இலங்கை இந்து மா மன்றம் இந்த மிருக பலியை கண்டித்துள்ளது. இந்து அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி குறித்த ஆலயங்களில் தொடர்ந்தும் மிருக பலியிடல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.seithy.co...&language=tamil 

No comments:

Post a Comment