3 வருடங்களில் 417 படுகொலைகள்; 2006 – 2008 இடையில் குடாநாட்டில் பயங்கரம்; ஆனால் ஒரு கொலையாளிகூட அகப்படவில்லை. -உதயன்
யாழ். மாவட்டத்தில் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 417 பேர் நீதிக்குப் புறம்பான வகையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரச ஆவணங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் “சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புக் கருதி அவரது பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்தக் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இவர்களின் பெயர்கள், முகவரிகள், கொல்லப்பட்ட திகதிகள் போன்ற அனைத்து விவரங்களையும் உதயன் பத்திரிக்கை ஆவணப்படுத்தியுள்ளது இவற்றுக்கு மேலாக இதேகாலப் பகுதியில் விடுதலைப் புலிகள் எனக் கருதப்படும் 9 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களது சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
வடமாகாணத்தின் தற்போதைய ஆளுநராகப் பதவி வகிக்கும் ஜி.ஏ.சந்திரசிறி, இலங்கை இராணுவத்தின் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்த காலப் பகுதியிலேயே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் பல கொலைகள் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டன என்பது பதிவுகளில் இருந்து தெரியவருகிறது. இந்தக் காலப்பகுதியில் யாழ். குடாநாடு முழுவதும் இராணுவ ஊடரங்குச் சட்டத்துக்குள் இருந்தபோதும் கொலைகளுக்கான காரணங்களோ அவை தொடர்பான விசாரணைகளோ பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பான எந்தவொரு சம்பவத்திலும் கொலையாளி எவரும் இனங்காணப்படவும் இல்லை.
இந்த மூன்று வருட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலைகளுக்கு இராணுவத்தினரும் துணைப்படைகளுமே காரணம் என்று சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அரசும் இராணுவமும் முற்றாக மறுத்து வருகின்றன.
சர்வதேச சமூகம் இறுதிப் போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று விசனம் தெரிவிக்கும் யாழ்ப்பாணத்தின் புலமையாளர்கள், இங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டுவதற்கான அழுத்தங்களையும் சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
இதேவேளை, “இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்குவதன் காரணத்தினால் கடத்தல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் தண்டிக்கப்படுவோம் என்கிற எந்தவிதப் பயமும் இன்றி ஈ.பி.டி.பியினால் ஈடுபட முடிகிறது” என்று 2007ஆம் ஆண்டில் கொழும்புக்கான அமெரிக்கத் தூதராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக், வாஷிங்ரனுக்கு அனுப்பி வைத்த இரகசிய ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆவணத்தை விக்கி லீக்ஸ் தனது இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுக்கிறார். அத்தகைய தகவல் பொய்யானது போலியானது என்று அவர் கூறுகிறார்.
“ஒருவரைக் கொலை செய்வதற்கு ஈ.பி.டி.பியினர் தீர்மானித்துவிட்டால் அது பற்றி முதலில் இராணுவத்தினருக்குத்தான் தகவல் தெரிவிக்கப்படும். பொதுவாகச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு சந்தியிலும் படையினரின் நிலைகள் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட ஒரு நேரத்தில் எல்லாப் படையினரும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வது வழமை. அந்தச் சமயத்தில் மோட்டார் சைக்களிலில் வரும் முகமூடி அணிந்த நபர்கள் தாம் நினைத்த நபர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பிவிடுவார்கள்” என்று பிளேக்கின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதை முற்றாக மறுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விக்கிலீக்ஸ் கசியவிட்ட பிளேக்கின் ஆவணத்தை வெளியிட்டமைக்காக உதயன் பத்திரிகைக்கு எதிராக 1,000 கோடி ரூபா நட்டஈடு கேட்டு யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதனை உதயன் பத்திரிகை சட்டப்படி எதிர்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment