'வீழ்வதில் கூட வெற்றிதான் - அருவி' இந்தக் கவிதைகளை எல்லாம் வெறும் கவிதைகளாகவும், மாணவர்களை வெறும் மதிப்பெண் வாங்கும் எந்திரங்களாகவும் வளர்ப்பதின் விளைவுதான் மணிகண்டன்களும் , தைரியலெட்சுமிகளூம் அண்ணா பல்கலைக்கழகம் , IIT சென்றாலும் தேர்வில் தோல்வியை எதிர்கொள்ளத் துணிவின்றி வாழ்கையிலும தோற்றுப்போகிறார்கள்... கடைசியில் , அப்துல் ரகுமான் சொன்னதைப்போல புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடுகின்றன.
ஆபிரகாம் லிங்கனின் தோல்விகளை வெறும் வரலாறாகவும்... அல்ஜிப்ராவை வெறும் கணிதமாகவும்... ஹெலன் ஹெலர்களை வெறும் கதைகளாகவும்... காந்திகளை வெறும் மகாத்மாக்களாகவும்... அப்துல் கலாம்களை வெறும் விஞ்ஞானிகளாகவும்... முயற்சி திருவினையாக்கும் குறள்களை எல்லாம் மதிப்பெண்களை வாங்கும் செய்யுள்களாகவும் சொல்லிகொடுத்ததன் விளைவைத்தான் மாணவ மாணவிகளின் அதிகரித்துவரும் தற்கொலைகள் நமக்கு கற்றுக்கொடுக்கின்றன... அந்தச் சாதனை மனிதர்களும் சாமானிய மனிதர்களைப்போல பல தடைகளைத் தாண்டி வந்தவர்கள்தான் என்ற அடிப்படை உண்மையை ஆணித்தரமாய் இளம் தலைமுறைக்கு புரியும்படி சொல்லிக்கொடுக்காததுதான் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் கூட உடனே தூக்குக் கயிற்றை நோக்கி மாணவனை ஓட வைக்கிறது...
கழுதையைப்போல புத்தகமூட்டையை பொதியாய்ச்சுமந்து , வாழ்க்கைப்பந்தயத்தில் பெற்றோரின் பேராசையால் துரத்தப்பட்டு ஓர் குதிரையைப்போல வெறித்தனமாய் ஓடி , சுற்றியுள்ள இயற்கையை , மனிதர்களை படிக்காமலே போனதின் விளைவுதான் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தன் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துக் கொள்வதற்கான காரணம்...
முதலில் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களைப் படியுங்கள்...ஆயிரமாயிரம் தன்னம்பிக்கை கதைகளை சொல்லிக்கொடுப்பார்கள்...
அதைப் போன்ற ஓர் மனிதன்தான் நீங்கள் பார்க்கும் வேலு என்னும் மனிதர்.,
வயது 70...
36 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி இறந்துவிட்டார்...
3 பெண் குழந்தைகள் ஒரு ஆண்...
ஆனால் இப்போது எந்த விழுதும் இந்த ஆலமரத்தை தாங்க முன் வரவில்லை...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்...
அறந்தாங்கி - ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் பாலிடெக்னிக் கல்லூரிக்கு அருகில் விக்னேஷ்வரபுரம் பேருந்து நிறுத்ததில்தான் வேலு என்னும் தன்னம்பிக்கை ஆலமரம் கம்பீரமாய் நிற்கிறது...
ஊர் தள்ளுவண்டியில் பழங்களை வைத்து விற்பனை செய்கிறார்...
தன் பிள்ளைகள் உதவி செய்வார்கள் என்றோ இந்த சமுதாயம் கருணை காட்டும் என்றோ மூலையில் முடங்காமல் தள்ளாத வயதிலும் தன் உழைப்பை மட்டுமே நம்பி இந்த 70 வயது இளைஞன் வாழ்கிறார்...
மனிதர்கள் ஈரமற்றுப் போய்விட்டார்கள் என்று நினைத்தாரோ என்னவோ பல மரங்களையும் கோயில்களிலும் அருகிலுள்ள இடங்களிலும் நீரூற்றி வளர்த்து வருகிறார் இந்த சமுதாயச் சிற்பி...
உடம்பில் உள்ள வரிகளில் மட்டுமே அவரது வயோதிகம் தெரியும்...
அவர் வார்தை வரிகளிலும் வாழ்க்கையிலும் வைராக்கியம் மட்டுமே தெரியும்...
உங்களைச் சுற்றியும் ஆயிரமாயிரம் வேலுக்கள் வாழ்கிறார்கள்...
அவர்களிடம் நம்பிக்கை என்னும் பாடத்தை முதலில் படியுங்கள்...
பின்னர் வாழ்க்கையில் எத்தனை பெரிய தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கை மட்டுமே நம்மை வழிநடத்தும்...
"தற்கொலை" எண்ணம் தலைதெறிக்க ஓடிவிடும்!
No comments:
Post a Comment