Translate

Tuesday 29 May 2012

படையினரின் அத்துமீறல்களால் கிளி. கிருஷ்ணபுர மக்கள் அவதி.

கிளிநொச்சி கிருஷ்ணபுர மக்கள் சிறஙீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரின் தொடரும் கெடுபிடிகள் கரணமாக அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் அலுவலகத்துக்கு அண்மையாக உள்ள படையினரின் பயிற்சி முகாம் ஒன்றினுள் நிலைகொண்டுள்ள படையினரே தொடர்ந்து கிருஷ்ணபுரம் மற்றும் அதை அடுத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் மாற்று வலுவுள்ள (அங்கவீனர்கள்) போராளிகளின் புனர்வாழ்வு நிலையமாக இருந்த நவம் அறிவுகூடம் காணப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படையினரே இவ்வாறு இடையூறை ஏற்படுத்துவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இரவு நேரங்களின் வீடுகளுக்குள் அத்துமீறி பிரவேசிப்பதாகவும், காணிகளுக்குள் வந்து மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள், இது சம்பந்தமாக கேள்வி எழுப்பியபோது அது தமது பயிற்சியின் ஒரு பகுதி என படையினர் அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் கூறினர்.

படையினர் தமது வீடுகள் மற்றும் காணிகளுக்குள் தங்கியிருப்பதால், தாம் அச்சத்துடன் இரவைக் கழிக்க வேண்டியுள்ளதாக, அந்தப் பிரதேச மக்கள் செய்தியாளரிடம் மேலும் கூறினர்.

இது மட்டுமன்றி ஆயுதம் தரித்த படையினர் இவ்வாறு இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பிரவேசிப்பதால், குழந்தைகள் பெண்கள் அச்சத்துடன் இரவைக் கழிக்கதாக தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத கிராம அமைப்பொன்று, இதற்கு முன்னரும் கிறிஸ் பூதம் என்னும் பீதியை மக்கள் மத்தியில் படையினர் கட்டவிழ்த்து விட்டிருந்தனர் எனச் சுட்டிக்காட்டினர்.

ஆனைத்துலக ரீதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் படைப் பயிற்சி முகாம்களை நடாத்திக் கொண்டிருக்கும் ஒரேயொரு படையினர், சிறீலங்கா படையினராகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், கிளிநொச்சியில் மட்டுமன்றி தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் தமது ஆக்கிரமிப்பை பலப்படுத்த படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் அதிகம் ஈடுபட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment