காஞ்சிபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி (21), லாலாகுட்டை தெருவை சேர்ந்தவர் சுமதி (20). இவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தனர். தேர்வு எழுத சென்ற இருவரும் வீட்டுக்கு வரவில்லை.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கவிதா (20). இவரும் திடீரென காணாமல் போனார். காஞ்சிபுரம் ஓட்டேரியை சேர்ந்த செரீனா பேகம் (16). வீட்டில் தனியாக இருந்த இவர் மாயமானார். மணிமங்கலம் காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (17) இவரும் திடீரென மாயமானார்.
காஞ்சிபுரம் தங்கவேலு தெருவை சேர்ந்தவர் ரேவதி (17). தனியார் கல்லூரியில் படிக்கிறார். தோழியை பார்க்க சென்றவரை காணவில்லை. சுப்பிரமணி கோயில் தெருவை சேர்ந்தவர் வித்யா (21). கல்லூரி மாணவியான இவர், திடீரென மாயமாகி விட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வன்னியர் தெருவை சேர்ந்தவர் ராதிகா (20). கோயிலுக்கு சென்றவர் காணவில்லை. கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (எ) ஓவியா (15). அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்த இவர் மாயமானார். செங்கல்பட்டு அருகே அம்மணம்பாக்கம் நந்தினி (15). பள்ளிக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. திருப்போரூர் தாழம்பூர் உத்தபிரான் தெருவை சேர்ந்தவர் மோனிசா (13). இவரையும் காணவில்லை.
இதுபோல், சோமமங்கலம் வரதராஜ மெயின் ரோடு சேர்ந்தவர் ராஜேஷ் (20). கூலி வேலைக்கு சென்றவரை காணவில்லை. நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (54). பாலிடெக்னிக்கில் பணியாற்றும் இவரை காணவில்லை. இதுகுறித்து புகார்கள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், காணாமல் போனவர்கள் பற்றி இதுவரை துப்புதுலக்க முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், விஷ்ணு காஞ்சி பொலிஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன், எஸ் ஐ கீதா ஆகியோர் ஜோதிலட்சுமி, கவிதா, சுமதி ஆகியோரை நேற்று மீட்டனர். இவர்கள் அனைவரும் தங்களது காதலனை திருமணம் செய்துள்ளனர்.
அனைவரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவருக்கும் திருமண வயது ஆகிவிட்டதாலும் விருப்பத்தின் அடிப்படையிலும் அனுப்பி வைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளம்பெண்கள் பலர் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment