தமிழ் மக்களின் விடிவுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு வலுவூட்டும் வகையில் பொறுப்பான ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் முழு ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ். நகரில் நடைபெற்ற எதிர்க் கட்சிகளின் கூட்டு தேசிய மே தின விழா மேடையில் உறுதியளித்தார்.
வட பகுதியில் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வன்னி மக்கள் நரகத்தில் வாழ்வதைப் போன்றே வாழ்கின்றனர். இவற்றை நான் கண்கூடாகக் கண்டிருக்கின்றேன். இவர்களுக்கு விடிவு ஏற்படுத்த வேண்டும் எனவும் ரணில் அங்கு வலியுறுத்தி உள்ளார்.
யாழ். குருநகரில் நேற்று நடைபெற்ற கூட்டு மே தினத்தில் உரையாற்றிய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
வாருங்கள் தம்பி வாருங்கள்.. தங்கைகளே.. நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றுபடுவோம். எம் மத்தியில் தமிழர், சிங்களவர், முஸ்லீம் என்ற மாறுபாடு இல்லை. இந்த நாட்டில் அராஜக்தை ஒழித்து ஜனநாயக மக்களாட்சியை ஏற்படுத்துவோம்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிந்த பின்னரும் இயல்புநிலை ஏற்படவில்லை. 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிந்த போது இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீண்டும் தத்தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவோம். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
ஆனால் இன்று வரை அவை எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அவர்களுடைய அபிலாஷைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஒன்றுபட்ட இனங்களின் நீதியானதும் நியாயமானதும், நிரந்தரமானதுமான தீர்வு காணப்படவேண்டும் என்று கூறினார். அவரது கூற்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. பொறுப்பான ஒரு எதிர் கட்சி என்ற வகையில் அதற்கு நாம் பூரண ஆதரவை வழங்கத் தயார். அரசு அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
தவறினால் அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம். இன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்து விட்டது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள், எரிபொருள்களின் விலைகள் அதிகரித்து விட்டன.
விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி அரச, தனியார்துறை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.
விவசாயிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றோம். ஆனால் அரசு தனவந்தர்களுக்கு சகாயம் அளித்துவிட்டு ஏழைகளின் தலையில் சுமைகளை ஏற்றிவைத்துவிட்டது.
அடுத்த ஜூன், ஜூலை மாதங்களில் மேலும் விலைவாசி அதிகரிப்பு ஏற்படுவது நிச்சயம். இலங்கை நாணயத்தின் பெறுமதி பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு அமெரிக்க டொலருக்கு 139 ரூபா செலுத்த வேண்டும். பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு லட்சம் ரூபாவுக்கு "றைனோ' கார் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனை இங்கு இறக்குமதி செய்கின்றனர். இதனால் யாருக்கு லாபம். அதே போன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெள்ளை வான்களும் மலிந்து விட்டன.
இந்த வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படுபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை. ஜனாதிபதியின் வெள்ளைவான் கலாசாரம் தான் இன்று ஜெனிவாவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அராஜக அரசை வீட்டுக்கு விரட்டி ஜனாநாயக மக்கள் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment