Translate

Wednesday, 2 May 2012

கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் யோகேஸ்வரன்


தேசிய உணர்வுமிக்க தமிழர்களாக இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் மட்டு,மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,நாம் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக எங்களது உரிமைக்காக, எமது மக்கள் பல உயிர் தியாகங்களை புரிந்துள்ளார்கள் இதனை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.
இரண்டு இலட்சத்தக்கு மேல் உயிர்களை இழந்துள்ளோம். ஆயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாகவும், விதவைகளாகவும்,அநாதைகளாகவும் இருப்பிடங்கள், சொத்துக்கள், பொருளாதாரம், கல்வி, கலாசாரம் உட்பட பலவற்றை இந்நாட்டில் இழந்துள்ளோம்.
இவ் இழப்புக்களை அனுபவித்த எமது இனம் தான் எதிர்பார்த்த இலக்கை அடைந்தே ஆக வேண்டும் இது காலத்தின் கட்டாயம் தமிழ் மக்கள் எதிர்பார்த்த இலக்கை நோக்கியும்,வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் ஒரு சிறந்த அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் எமக்கு வழங்கவேண்டிய சகல அதிகாரங்களையும் கொண்ட நிரந்தர அரசியல் தீர்வை பெறும் பாதையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்று கொண்டிருக்கின்றது.
எங்களது கட்சியின் செயற்பாட்டுக்கு ஆதரவு தரவேண்டிய கடமை எம் வடக்குக், கிழக்கு தமிழ் மக்களுக்கு உண்டு. ஆகவே பொறுமையை பாதுகாத்து எங்களது நோக்கத்தை நிறைவேற்ற எங்களுடன் என்றும் துணையாக நிற்க வேண்டும்
இன்று சில சுயநல அரசியல்வாதிகள் கிழக்கு மட்டும் தனியாக இருக்க வேண்டும். எங்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என பிரதேசவாதம் பேசி, தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொள்ளாமல் செயற்பட்டு வருகிறார்கள். இவர்களது செயற்பாடுகள் குறித்து வட,கிழக்கு தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment