Translate

Sunday, 20 May 2012

புத்தரின் புனித பொருள்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: வைகோ _


  பௌத்த சமயத்தைத் தோற்றுவித்த புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனித பொருள்கள் இலங்கையில் காட்சிப்படுத்துவதற்காக, டில்லியிலிருந்து அனுப்பப்பட இருக்கின்றன. இதனைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று கடிதம் எழுதியிருக்கிறார்.


அக்கடிதத்தில் வைகோ குறிப்பிட்டிருப்பதாவது;

டில்லியில் உள்ள தேசிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனித பொருள்களை, வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல், செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் வேண்டுகோளை ஏற்று, இந்திய அரசு இம்முடிவை மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது. இந்திய அரசின் முடிவு, வெந்து போன தமிழர்களின் நெஞ்சில் வேல் கொண்டு குத்துவதாக இருக்கின்றது.

இப்போது, இலங்கையில், தமிழர்களின் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும், பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுமையுமே, ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு, இலங்கை அரசு வெறித்தனமாகச் செயல்பட்டு வருகின்றது.

இந்திய அரசு, தமிழர்களுக்கு இழைக்கின்ற மன்னிக்க முடியாத துரோகம் இது. டில்லி தேசிய ஆவணக்காப்பகத்தில் உள்ள புத்த பெருமானின் புனித பொருள்கள், இன்றைக்கு உலகில் மிகவும் மதிக்கத்தக்க, பழமையான பொருள்களுள் ஒன்றாகும். புனிதம் நிறைந்த அப்பொருள்களை இலங்கைக்குக் கொண்டு செல்லக்கூடாது.

எனவே, புத்த பெருமானின் புனித பொருள்களை, இலங்கைக்குக் அனுப்புவதற்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. __

No comments:

Post a Comment