இலங்கை தமிழர் பிரச்சினை தீர ஒரே வழி தனி ஈழம் உருவாவது தான்!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஈழப்போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் சுமார் 1 1/2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றும் ஈழத் தமிழர்கள் முள்வேலியில் சிக்கி துன்பப்படுகிறார்கள்.
தமிழ் இனத்துக்காக உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் தமிழ் இனம் அழிக்கப்பட்ட மே 18-ம் நாளில் ஊர்வலம் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறோம்.
அதன்படி இந்த ஆண்டு நாளை (இன்று) கோவை சிவானந்தா காலனியில் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களிடையே மாற்றம் வேண்டும் என்ற உணர்வை நாம் தமிழர் கட்சி ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தினால் எந்த பலனும் இல்லை. அந்த தீர்மானம் மென்மையான தீர்மானம் ஆகும்.
இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் சேர முடியாது. ஈழத் தமிழர்களை இலங்கை அரசு வேறுபடுத்தி பார்க்கிறது.
இலங்கை தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றப்படுகிறார்கள்.
இப்படி இருக்கும்பட்சத்தில் அவர்களால் என்ன அரசியல் தீர்வு கொடுக்க முடியும்.
சமீபத்தில் இலங்கைக்கு சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற எம்.பி.க்கள் குழுவினால் எந்த பலனும் கிடையாது. சிங்கள அரசு ஈழ தமிழர்களுக்கு எந்த அரசியல் தீர்வையும் அளிக்காது.
தமிழக அரசு ஒரு ஆண்டு சாதனை செய்து விட்டதாக சொல்கிறார்கள்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினை மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஆகிய பிரச்சினைகளில் தான் தமிழக அரசு சாதகமாக செயல்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை தீர ஒரே வழி தனி ஈழம் உருவாவது தான்.
ஆனால் அதற்கு இப்போதுள்ள மத்திய, மாநில அரசுகள் உதவாது.
இலங்கை தமிழர் பிரச்சினை இப்போது சர்வதேச அரசியல் ஆக்கப்பட்டுள்ளது.
எனவே உலகம் முழுவதும் பரவி உள்ள 12 கோடி தமிழர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் ஈழம் மலர போராட வேண்டும்.
நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து போராடும். இவ்வாறு சீமான் கூறினார்.
No comments:
Post a Comment