அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. உண்ணாவிரதமிருந்துவரும் கைதிகள் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவைத் தவிர ஏனைய உணவுகளை உட்கொள்கின்றனர் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு எளிதில் நடவடிக்கை எடுக்கமுடியாது என்றும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் யாழில் படையினர் நிலைகொண்டுள்ளதற்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்றும் அவர் கூறினார்.
அரசியல் கைதிகள் இருக்கின்றனர் எனக்கூறி நாடாளுமன்றத்தையும் சர்வதேச சமூகத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தவறாக வழிநடத்துவதற்கு முயற்சிக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு விளக்கமறியலிலும் வவுனியா, களுத்துறை ஆகிய சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருந்துவரும் விடயம் குறித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் விசேட கூற்றொன்றை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமனற உறுப்பினர் இரா.சம்பந்தன் உரையாற்றினார்.
நிலையியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் சம்பந்தன் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளிக்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய, நேற்று நாடாளுமன்றில் கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
எந்தவொரு அரசியல் கைதியையும் அரசு தடுத்துவைக்கவில்லை. அரசியல் கைதியென்று இங்கு எவரும் இல்லை. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்களும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களுமே தவிர, அவர்கள் அரசியல் கைதிகள் அல்லர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 359 பேரும், சந்தேகத்தின் பேரில் 309 பேரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பைப் பேணியவர்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அரசியல் கைதி எனக் கூறி சம்பந்தன் நாடாளுமன்றத்தையும், சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்த முயன்றமையையிட்டு அரசு கவலையடைகின்றது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுள் அங்கவீனர்களும் உள்ளனர் என்றும், அவர்களை விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுவதற்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது.
பயங்கரவாத நடவடிக்கையின் போதே அவர்கள் அங்கவீனமாக்கப்பட்டனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சரணடைந்தவர்களை அரசு புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளது. ஏன், அவர்களுக்குக் கடன் உதவிகளைக்கூடச் செய்து கொடுக்கின்றது.
தற்போது உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகள் சிறைச்சாலைகளில் வழங்கும் உணவுகளை உட்கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் வெளியில் இருந்து வழங்கப்படும் உணவுகளை உட்கொள்கின்றனர் என எமக்குத் தகவல் கிடத்துள்ளது. கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்கள் உணவு சகிதமே வருவர்.
தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு வருபவர்கள் 75 பேர் அடுத்த மாதம் 02ஆம் திகதி (2012. 06.02) உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மீதியுள்ள 597 பேரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் படையினரை நிலைநிறுத்துவதற்கும், மாணவன் தாக்கப்பட்டமைக்கும் இடையில் எதுவித சம்பந்தமுமில்லை.
புனர்வாழ்வளித்து அரசு மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து இவர்கள் கதைப்பதில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் புனர்வாழ்வு அளிக்கும் செயற்பாட்டில் அரசு ஈடுபட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு சட்டபூர்வமாக நிவாரணம் வழங்கப்படும் என்றார் நிமல்.
No comments:
Post a Comment