Translate

Friday 4 May 2012

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில் புத்த விகாரை - இளந்தி

அரியாலை கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப் பட்டாலும் அவர்கள் அமைத்த புத்த விகாரை மாத்திரம் நிலைத்து நிற்கிறது. மண்ணும் கற்களும் வைத்துக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை யாழ்நகரில் வதியும் பிக்குகள் மேற்ப்பார்வை இடுகின்றனர்.

இந்த இடத்தில் இருந்து வெளியேறிய போது எக்காரணம் கொண்டும் இந்த விகாரையை எவரும் சேதப் படுத்தக் கூடாதென்று பொது மக்களுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இது இராணுவத்தினரின் வழமையான செயற்பாடு. முகாம் சூழலில் ஒரு விகாரையை அமைப்பார்கள் அல்லது ஒரு புத்தர் சிலையை நிறுத்துவார்கள். அவை அமைக்கப்பட்ட நிலம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றி இராணுவத்தினர் கவலைப்படுவதில்லை.

இராணுவம் பிற இடத்திற்கு நகர்ந்தாலும் முன்பு அமைக்கப்பட்ட விகாரையும் சிலையும் அப்படியே இருக்கும் பிரதமர் டி.எம் ஜெயரத்தின தலைமையில் இயங்கும் புத்த சாசன அமைச்சு அதற்கு அங்கீகாரம் வழங்கிவிடும்.

இராணுவம் இவ்வாறு தமது தேவைக்காக அமைத்த மதச் சின்னங்கள் அரச நிதியில் இருந்து நிரந்தர கட்டிடங்களாக அமைக்கப்படுகின்றன. புத்த பிக்குகள் வருவார்கள். அவர்களைத் தொடர்ந்து சிங்களக் குடியேறிகளும் வருவார்கள்.

தமிழர் மண் பறிபோகும் புத்த விகாரையும் சிலையும் தமிழர் கண்ணோட்டத்தில் ஆக்கிரமிப்புச் சின்னங்களாக மாறிவிட்டன. புத்தர் சிலையை வைத்தவுடன் ஈழத் தமிழன் நிலம் அரச சொத்தாக மாற்றப்படுகிறது.

இது தான் கடந்த காலந் தொட்டு இன்று வரை நடக்கும் வரலாறு. தனியார் நிலங்களில் அத்துமீறி புத்த விகாரைகள் அமைக்கும் நடவடிக்கையும் பரவலாக நடக்கிறது. 2011 ஒக்டோபர் 18ம் நாள் கொக்குளாயில் நடந்த சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம்.

முல்லை மாவட்டம் கொக்குளாயில் புத்த கோவில் அமைப்பதற்குத் தனது நிலத்தைத் தரமறுத்த தமிழ் உரிமையாளர் இராணுவத்தால் தாக்கப்பட்டார். அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற இராணுவத்தினர் அவரை அடித்து விரட்டினர்.

பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம் சைவக் கோவிலுக்கு முன்பாகவுள்ள நிலத்தில் புத்த விகாரை கட்டப்படுகிறது. கோணேஸ்வரம் பறிபோனது போல் திருக்கேதீஸ்வரமும் புத்த கோவிலாகமாறும் ஆபத்து நெருங்கிவிட்டது.

www.Tamilkathir.com 

No comments:

Post a Comment