Translate

Saturday 12 May 2012

அரசுக்கு ஆதரவான புளொட் இயக்கத்திற்கு கூட்டமைப்பில் இடமில்லை- அரியநேத்திரன் அதிரடி அறிவிப்பு!


அரசுக்கு ஆதரவான புளொட் இயக்கத்திற்கு கூட்டமைப்பில் இடமில்லை- அரியநேத்திரன் அதிரடி அறிவிப்பு!

இப்பொழுதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இராணுவத்துடன் ஒட்டுக்குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் புளொட் இயக்கத்தை நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்து கொள்ளமாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தினக்கதிருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுகிறார், தமது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து விட்டதாக கூறிவருகிறார். ஆனால் மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தினர் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுவாக இயங்கி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு புளொட் உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக அமெரிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாநகரசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை புளொட் உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர்.
ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட போது அதை எரித்து அதற்கு எதிராகவும், சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். அந்த உண்ணாவிரதத்தில் அரசுக்கு ஆதரவான சிவகீதாவுக்கு அருகில் தமிழ் மக்களுக்கு எதிரான சுலோகங்களையும், அரசுக்கு ஆதரவான சுலோகங்களையும் தாங்கிக்கொண்டு முன்வரிசையில் இருந்தவர்கள் தான் புளொட் உறுப்பினர்கள்.
இப்படி தமிழ் மக்களுக்கு எதிராக கேடுகெட்ட கேவலமான வேலைகளை செய்து கொண்டிருக்கும் புளொட் இயக்கத்தினரை எப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்து கொள்ள முடியும்?
முள்ளிவாய்க்கால் பேரவலம் முடியும் வரை சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து தமிழ் மக்களை கொன்றொழிக்கும் வேலைகளைத்தான் புளொட் இயக்கத்தினர் செய்து வந்தனர். மட்டக்களப்பில் உள்ள புளொட் இயக்கத்தினர் இப்பொழுதும் இராணுவத்தினருடன் இணைந்து துணை இராணுவ குழுக்களாகத்தான் இயங்கி வருகின்றன.
மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தினர் இராணுவத்தினருடன் சேர்ந்து தமிழ் மக்களை படுகொலை செய்த பட்டியல் எங்களிடம் இருக்கிறது. அதை வெளியிட்டால் பலரும் அதிர்ந்து போவார்கள்.
எனவே புளொட் இயக்கத்தினர் மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு எதிராக செய்து வரும் வேலைகளுக்கு புளொட் இயக்க தலைவர் சித்தார்த்தன் விளக்கம் சொல்ல வேண்டும். இதன் பின்னர்தான் அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்து கொள்வதா இல்லையா என்பது பற்றி யோசிக்க முடியும்.
மட்டக்களப்பு மாநகரசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அரசுக்கு ஆதரவாக புளொட் இயக்கம் எதற்காக வாக்களித்தது என்பது பற்றியும், சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில் மாநகரசபையின் புளொட் உறுப்பினர் எதற்காக கலந்து கொண்டார் என்பது பற்றியும் சித்தார்த்தன் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஒரு புறத்தில் அரசுக்கு ஆதரவளித்துக் கொண்டு மறுபுறத்தில் தேர்தலில் சில ஆசனங்களை பெற வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒட்ட நினைக்கும் இரட்டை வேடத்தை புளொட் இயக்கம் கைவிட வேண்டும்.
அதேபோல ஆனந்தசங்கரியும் முள்ளிவாய்கால் படுகொலை வரை மகிந்த ராசபக்ச அரசுக்காகவும், சிறிலங்கா அரசின் போரை நியாயப்படுத்தியும், விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்றும் உலகம் எல்லாம் சென்று பிரசாரம் செய்து வந்தவர். முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் கொத்து கொத்தாக கொன்று கொண்டிருந்த போது மகிந்த ராசபக்சவுக்காக ஐரோப்பிய நாடுகளில் பிரசாரம் செய்து திரிந்ததை நாங்கள் மறக்கவில்லை.
சித்தார்த்தன் தலைமையிலான புளொட் இயக்கத்தினரையும், ஆனந்தசங்கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள கூடாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி கிளை தீர்மானம் நிறைவேற்றி , மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் இட்டு தமிழரசுக்கட்சி தலைமைக்கு சமர்ப்பித்திருக்கிறோம்.
கடந்த வியாழக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடைபெற்ற போது புளொட் இயக்கத்தையும், ஆனந்தசங்கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆலோசனை முன்வைத்த போது அதை நான் கடுமையாக எதிர்த்திருந்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக்கட்சியை மீறி, மாவட்டத்தில் உள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தை மீறி புளொட் இயக்கத்தையோ, ஆனந்தசங்கரியையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள முடியாது. அப்படி சேர்த்துக்கொண்டால் அதன் விளைவுகள் பாராதூரமாக இருக்கும் என எச்சரிக்க விருப்புகிறேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறிக்கொண்டு கிழக்கில் புளொட் இயக்கம் கால் வைக்க முடியாது. முக்கியமாக மட்டக்களப்பில் கால் வைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தினக்கதிருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.
( இது நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் அவர்களிடமிருந்து தினக்கதிர் பிரத்தியேகமாக பெற்ற செய்தியாகும். இதனை மீள்பிரசுரம் செய்வோர்   கண்டிப்பாக நன்றி தினக்கதிர் என அதன் மூலத்தை வெளியிட வேண்டும். அண்மைக்காலத்தில் தினக்கதிர் வெளியிடும் பிரத்தியேக செய்திகளை சில இணையத்தளம் திருடி வெளியிட்டு வருகின்றன.)

No comments:

Post a Comment