Translate

Wednesday, 16 May 2012

சிறிலங்கா அதிபரின் இலண்டன் வருகை - பழமைபேண் கட்சியின் ஆதரவுத் தமிழர்களும் அதிருப்தி


சிறிலங்கா அதிபரின் இலண்டன் வருகை - பழமைபேண் கட்சியின் ஆதரவுத் தமிழர்களும் அதிருப்தி

பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவிற்கு சிறிலங்கா அதிபர் அழைக்கப்பட்டுள்ள செய்தியானது மிகுந்த வேதனையைத் தருவதாக, பழமைவாதிகளுக்கான பிரித்தானிய தமிழர் அமைப்பு [The British Tamils for Conservatives - BTC] தெரிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியார் அரச பொறுப்பேற்று அறுபதாவது ஆண்டு நிறைவானதை முன்னிட்டு, யூன் 2-5 வரையான நான்கு நாட்கள் கொண்டாடப்படவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

தனது ஆட்சியில் வைரவிழாவை நிறைவுசெய்யும் பிரித்தானிய மகராணியாரை வாழ்த்தி மேற்கொள்ளப்படவுள்ள இம் முக்கிய விழாவில் பங்குபற்றுமாறு, யுத்தக் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போது முப்படைகளினதும் பிரதம நிறைவேற்றுத் தளபதியாக விளங்கிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இம் முக்கிய நிகழ்வில் சிறிலங்கா அதிபர் அழைக்கப்பட்டுள்ள செய்தியானது மிகுந்த வேதனையைத் தருவதாக, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கு நீதி, சமாதானம் மற்றும் சுயகௌரவம் என்பன வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் விழிப்புணர்வை மேற்கொண்டு வரும் பழமைவாதிகளுக்கான பிரித்தானிய தமிழர் அமைப்பு [The British Tamils for Conservatives - BTC] தெரிவித்துள்ளது.

"மதிப்புக்குரிய எலிசபெத் மகாராணியார் பிரித்தானியாவில் மட்டுமல்லாது உலகம் பூராவும் வாழும் பல்வேறு சமூகத்தவர்களை ஒன்றிணைத்து மேன்மைமிக்க வாழ்வொன்றுக்கு வழிகாட்டியாக, தலைமைதாங்குகின்றார். பழமைவாதிகளைப் பொறுத்தளவில் அவர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை விரும்பமாட்டார்கள். இந்நிலையில், யுத்த மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்களை மேற்கொண்டவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டவர்கள், மகாராணியாரின் அறுபதாவது ஆட்சி நிறைவைக் கொண்டாடும் விழாவில் விருந்தாளியாக அழைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை" என பழமைவாதிகளுக்கான பிரித்தானியத் தமிழர் அமைப்பைச் சேர்ந்த அருச்சுனா சிவநாதன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மகாராணியாருக்கு மதிப்பு வழங்கும் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பில் அதிருப்தி அடையும் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் மற்றும் இது தொடர்பில் கவலை கொள்ளும் ஏனைய மக்கள் அனைவரும் உடனடியாக தமது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் திரு.சிவநாதன் கோரியுள்ளார்.

இறுதியாக 2010ல் சிறிலங்கா அதிபர் பிரித்தானியாவுக்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட போது, பிரித்தானியத் தமிழ் மக்கள் இவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது நிறைவுக்கு வந்த வேளையில், பெரும் எண்ணிக்கையான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் ஏனைய யுத்தகால மீறல்களை மேற்கொள்வதற்கு காரணமாக இருந்த சிறிலங்கா அதிபரின் பிரித்தானிய வருகையை, பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது மிகப் பெரியளவில் மேற்கொள்ளப்பட்டதால், பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், சிறிலங்கா அதிபரால் மேற்கொள்ளப்படவிருந்த உரைநிகழ்வு இறுதியில் கைவிடப்பட்டது

No comments:

Post a Comment