Translate

Wednesday 16 May 2012

வெளிநாட்டுத் தீர்வைத் திணிக்கக் கூடாது! - அமெரிக்காவுக்குப் பீரிஸ் எச்சரிக்கை


தமது மக்களின் பிரச்சினைக்கு எந்தவொரு வெளிநாட்டுத் தீர்வையும் அமெரிக்கா திணிக்கக் கூடாது என்று  இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வாசிங்டனில் அனைத்துலக புலமையாளர்களுக்கான வூட்ரோ வில்சன் நிலையத்தில் - கொள்கை வகுப்பாளர்கள் முன்னிலையில் நேற்று உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையில்  இனப்பிரச்சினையை தீர்க்க தீர்வு அவசியம் என்பதையும் அது உள்நாட்டு தீர்வாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்.
அது வெளிநாட்டுக் கொடுப்பனவாகவோ வெளிநாட்டுத் தயாரிப்பாகவோ இருக்க முடியாது. 
அது வரலாற்றுத் தேவையை பூர்த்தி செய்ய நம்பிக்கை அளிப்பதாக இருக்காது. உள்நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தீர்வு அனைவரும் விரும்பக்கூடியதாக இருக்கும்.
இலங்கை தமது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. அர்த்தமுள்ள முறையில் அதனை செயற்படுத்த விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்தவுடன், போரினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றி அவர்களுக்கான பொருளாதார, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே, இலங்கை அரசின் ஒரே இலக்காக இருந்தது.
தற்போது 98 வீதமான மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு விட்டனர்.
வடக்கில் பொதுச்சேவைகள் முன்னேற்றமடைந்துள்ளன.
மீன்பிடி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில்- பொருளதார ரீதியாக வடக்கு மாகாணம் வளர்ச்சி பெற்றுள்ளது.
பரந்தளவிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த, பொருளாதார அபிவிருத்தி முக்கியம் என்று நாம் கருதுகிறோம்.

2011 ல் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.3 வீதமாக இருக்க, வடக்கில் பொருளாதாரம் 22 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.“ என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பீரிஸ் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோன் மக்கெய்னையும், ஜிம் வெப்பையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், பொருளாதார உறுதிநிலை, நல்லிணக்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள், இந்தியா மற்றும் சீனாவுடனான உறவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment