Translate

Saturday, 12 May 2012

பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் சுஷ்மா சுவராஜ் – சீமான்


பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் சுஷ்மா சுவராஜ் – சீமான்

seeman
இலங்கை தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை என்பது அப்பட்டமான பொய். இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார்?, என கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான். 
சுஷ்மா சுவராஜுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கை:

மதுரையில் நடந்த தாமரை சங்கமம் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை என்று பேசியுள்ளார்.
இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை வகித்துச் சென்ற சுஷ்மா சுவராஜ், இலங்கையில் உள்ள தமிழர்கள், தமிழர் கட்சியினர் என அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது, இங்குள்ள கட்சிகள் மட்டும் ஏன் தனி ஈழம் கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இலங்கைக்கு 5 நாள் பயணமாக சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் நோக்கம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படுகிறதா, இந்திய அரசு அளித்த உதவிகள் அவர்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளவே தவிர, தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதல்ல.
ஆனால் தமிழர்களின் நிலை அங்கு எப்படியிருக்கிறது, எந்த அளவிற்கு அங்கு இராணுவத்தின் அடக்குமுறை இன்றும் தொடர்கிறது, தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டு, தமிழர் பகுதிகள் சிங்கள காலனிகளாக மாற்றப்படுகின்றனவே, இராணுவ ஆக்கிரமிப்பினால் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரே என்று தமிழர்கள் கூறியதையெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும் தங்கள் மாநாட்டில் பேசாத சுஷ்மா சுவராஜ், அவர்களின் அரசியல் விருப்பம் தனித் தமிழ் ஈழம் அல்ல என்று பதிவு செய்ய முற்படுவது ஏன்?
தமிழர் பகுதிகளில் ஒரிரு நாட்கள் மட்டும் பயணம் செய்து ஒரிரு மணி நேரங்கள் மட்டும் சில தமிழர்களிடம் பேசிவிட்டு, அவர்கள் விரும்புவது தனித் தமிழ் ஈழம் அல்ல என்று சுஷ்மா பேசிகிறார் என்றால், அவர் தமிழர்களின் விருப்பத்தை விட, தமிழ் ஈழம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டையும், ராஜபக்சவின் விருப்பதையும்தான் பேசியுள்ளார்.
தங்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலை இயக்கத்தை அழித்தொழிக்க, பாதுகாப்பு வளையத்தில் தஞ்சமடைந்திருந்த தங்கள் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்களான கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், இரசாயணக் குண்டுகள் ஆகியவற்றை போட்டு கொத்துக்கொத்தாக தங்கள் சொந்தங்களை ஈவிருக்கமின்றி அழித்த இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா?
இரண்டரையாண்டுக் காலப் போரில் தங்கள் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை திட்டமிட்டு இனப் படுகொலை செய்து, தங்கள் சகோதரிகள் ஒரு இலட்சம் பேரை விதவையாக்கி, வாழ வழியற்ற நிலையை ஏற்படுத்திய இனவெறி இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா? அரை நூற்றாண்டுக் காலமாக இராணுவத்தை பயன்படுத்தி தங்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் கட்டவிழ்த்துவிட்ட அரசுடன் இணைந்து வாழ்வதே தங்களுக்குப் பாதுகாப்பு என்று சுஷ்மாவிடம் எங்களது தமிழ்ச் சொந்தங்கள் கூறினரா? எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்!
இலங்கைத் தமிழர்களின் விருப்பம் தனித் தமிழ் ஈழமல்ல என்று கூறும் சுஷ்மா சுவராஜூம், அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் இலங்கைத் தமிழர்களின் முடிவை அறிய அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பத் தயாரா என்று நாங்கள் கேட்கிறோம்.
இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே உலக நாடுகளுக்கும், ஐ.நா.விற்கும் தமிழினம் விடுக்கும் கோரிக்கை இதுவே. அதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி முன் வைக்குமா? என்று கேட்கிறோம். அப்படிச் செய்தால் அது அறிவு நாணயமுடைய செயலாக இருக்கும். ஒரிரு மணி நேரங்கள் மட்டும் அங்குள்ள தமிழர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்து அவர்கள் தமிழீழ தனி நாட்டை ஏற்கவில்லை என்று கூறுவது இந்திய, இலங்கை அரசுகளின் இரகசியத் திட்டத்தையே பிரதிபலிக்கிறதே தவிர, உண்மையை அல்ல.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, தங்கள் இனத்தை அழித்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், அதன் மூலம் தங்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழினம் உலகளாவிய அளவில் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் இருந்து தமிழினம் ஒரு போதும் பின்வாங்காது. தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல், எத்தனை மாநாடுகள் போட்டாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளராது.
தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை இந்திய நாடாளுமன்றக் கருவூலத்திற்கு அளித்துவிட்டதாகக் கூறுகிறார் சுஷ்மா சுவராஜ். இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சென்ற உங்களுக்கு தமிழினத்தை அழித்தொழித்த ராஜபகச் எதற்காக பரிசுப் பொருட்களை வழங்க வேண்டும்? அதனை எதற்காக நீங்கள் பெற்றுக்கொண்டு வரவேண்டும்? உங்களுக்குப் பரிசுப் பொருட்களை ராஜபக்ச அளிக்கிறார் என்றால், நீங்கள் தமிழர்களுடைய சகோதரியா அல்லது ராஜபக்சவின் அறிவிக்கப்படாத தூதரா?
தமிழினப் படுகொலை செய்த குற்றத்திற்காக உலகின் முன் ராஜபக்ச கும்பல் நடுநடுங்கி நின்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகள் மட்டும் ராஜபக்ச அரசை தூக்கி பிடித்துக்கொண்டு, தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்தி வருகின்றன. இது கண்டனத்திற்குரியது.
-இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment