தென்னாபிரிக்காவுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த மற்றுமொரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தென்னாபிரிக்காவின் தமிழ் அமைச்சர் இராதாகிருஸ்ண படையாச்சியின் இறுதிச்சடங்கு கடந்தவாரம் அந்த நாட்டின் அரச நிகழ்வாக நடத்தப்பட்டது. இதில் இலங்கையின் சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை.
இலங்கை வெளிவிவகார அமைச்சினால், இரு அனுதாபச் செய்திகள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இறுதிச்சடங்கில், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா கலந்து கொண்டு இரங்கலுரை நிகழ்த்தினார்.
டர்பன் மைதானத்தில் நடந்த இறுதிச்சடங்கில் இரங்கலுரை நிகழ்த்திய எட்டுப் பேரில் ஆறு பேர், படையாச்சியின் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுதாப உரை நிகழ்த்திய எஞ்சிய இருவரில் ஒருவர் சுரேன் சுரேந்திரா. மற்றவர் தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா ஆவார்.
இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன.
தென்னாபிரிக்காவின் ஆதரவை தமிழர்களின் பக்கம் தக்க வைத்துக் கொள்வதற்கு சுரேன் சுரேந்திரா இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளதாக இலங்கை அரச வட்டாரங்கள் விசனம் அடைந்துள்ளன.
தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த படையாச்சி மறைந்த போதும், அவரது இறுதிச்சடங்கைப் பயன்படுத்திக் கொண்டு, புலம்பெயர் தமிழர்கள் தென்னாபிரிக்காவுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டுள்ளதாக இலங்கைஅரச வட்டாரங்கள் கருதுகின்றன.
இறுதிச்சடங்கை நெறிப்படுத்திய அமைச்சர் இமனுவல், “மறைந்த அமைச்சர் படையாச்சி இலங்கைத் தமிழர் விவகாரங்களுடன் நெருக்கமாக பணியாற்றியவர்“ என்று குறிப்பிட்டபோது, தொலைக்காட்சிகள் சுரேன் சுரேந்திராவை நோக்கித் தமது பார்வையைத் திருப்பியிருந்தன.
இந்த நிகழ்வில் தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா மற்றும் அந்த நாட்டின் அனைத்துலக உறவுகளுக்கான அமைச்சர் மைட்டி நிகோனா மசாபான் ஆகியோருடன் சுரேன் சுரேந்திரா கலந்துரையாடியுள்ளதாகவும், படையாச்சி இல்லாத நிலையிலும் புலம்பெயர் தமிழர்கள் தென்னாபிரிக்காவுடனான உறவுகளை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தென்னாபிரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள கிடைத்த மற்றொரு வாய்ப்பை இலங்கை தவற விட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அண்மையில், ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்கு, உலகத் தமிழர் பேரவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், இலங்கை வெளிவிவகார அமைச்சு அந்த நிகழ்வைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் அனைத்துலக அளவில் உறவுகளை வலுப்படுத்தி வருவது இலங்கை அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
படையாச்சியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிய செய்தியும், அவரது இறுதிச்சடங்கில் வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment