Translate

Wednesday 16 May 2012

இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியமென்பதை உணர்ந்துள்ளாராம் பீரிஸ்; அமெரிக்காவில் அவரே தெரிவிப்பு

news
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தீர்வு ஒன்று அவசியம் என்பதையும் அது உள்நாட்டு தீர்வாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம். என அமெரிக்காவில் வைத்து சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


அதேபோன்று தீர்வானது உள்நாட்டிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு வெளிநாட்டு அழுத்தங்கள் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திப்பதற்காக அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள பீரிஸ் தலைநகர் வொஷிங்டனில் இடம்பெற்ற ஒரு நிகழ்வொன்றில் மேற்படி தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
சிறிலங்காவில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. சிறந்த ஒரு வாய்ப்பை நாங்களே தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். இனப்பிரச்சினையை தீர்க்க தீர்வு அவசியம் என்பதையும் அது உள்நாட்டு தீர்வாக இருக்க வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்.

அது வெளிநாட்டு அழுத்தங்கள் அல்லது முயற்சிகளால் ஏற்படுத்த முடியாது. அவ்வாறு அமைவது வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்ய நம்பிக்கை அளிப்பதாக இருக்காது. உள்நாட்டில் இருந்து தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தீர்வே அனைவரும் விரும்பக்கூடியதாக அமையும்.

இடம்பெயர்ந்த மக்களில் 98% மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் புலிகளும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். இன உறவை வலுப்படுத்த மொழிப் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். வடக்கில் மீன்பிடி, விவசாயம் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. அர்த்தமுள்ள முறையில் அதனை செயற்படுத்த விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். அதேபோல் பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். வடக்கு கிழக்கில் 22 சதவீத பொருளாதார வளர்ச்சியும் முழு நாட்டில் 8.3 சதவீத பொருளாதார வளர்ச்சியும் 2011ம் ஆண்டு பதிவாகியுள்ளது. என்றார்.

ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான சிறிலங்காக் குழுவினர், அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜோன் மிக்கெய்னை அவரது அலுவலகத்தில் நேற்றையதினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதன் பின்னர் செனட்டர் ஜிம் வெப்யையும், ஜேம்ஸ் இன்ஹோப்பையும் இக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

நாளை மறுதினம் 18ம் திகதி அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரை வெள்ளை மாளிகையில் பீரிஸ் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment