Translate

Tuesday, 8 May 2012

பூஷாவில் மாத்திரமே முன்னாள் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!


பூஷாவில் மாத்திரமே முன்னாள் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!
இலங்கையில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட மே 18 ஆம் திகதியை உலகத் தமிழர்கள் துக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர். எனினும், இலங்கை அரசாங்கம் மே 19 ஆம் திகதியன்று இந்த தடவை விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட மூன்றாவது வருட கொண்டாட்டத்தை நடத்தவுள்ளது.

இந்தநிலையில், பயங்கரமான ஆயுதக்குழு ஒன்றை தோற்கடித்ததன் மூலம் இலங்கையில் சமாதானம், விடுதலை மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடிந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

படையினரின் அர்ப்பணிப்பும் தற்துணிவுமே இந்த வெற்றிக்கான அடிப்படைகள் என்று அவர் ஏசியன் ரிபியூனுக்கு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் எந்த இடத்திலும் பிரச்சினைகள் இடம்பெறவில்லை.

போரின் போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் பேரையும் மீண்டும் குடியமர்த்தும் போது, விடுதலைப்புலிகள் புதைத்து வைத்து கண்ணிவெடிகளை அகற்றுவதே பிரதான தடையாக அமைந்திருந்தது.

எனினும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் இலங்கை அரசாங்கம் வெற்றிக்கண்டது.

மக்கள் போரின் போது இடம்பெயர்ந்த நிலையில், படையினரே அவர்களது வீடுகளின் கூரைகள் ஜன்னல்கள் என்பவற்றை கொண்டு தமது முகாம்களை அமைத்தததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும் பொதுமக்கள் இடம்பெயரும் போது விடுதலைப்புலிகளே குறித்த கூரைகளையும் ஜன்னல்களையும் எடுத்துச்சென்றதாக கோத்தபாய ஏசியன் ரிபியூனுக்கு குறிப்பிட்டுள்ளார்.

போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளுக்காக தற்போது பூஷாவில் மாத்திரமே தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தண்டனைக்கு பதிலாக முன்னாள் புலிகளுக்கு நன்நடத்தைகள் சொல்லித்தரப்படுகின்றன.

வடக்கில் இராணுவ பிரசன்னம் இருப்பதாக கூறப்படுகின்ற போதும், அங்கு நாளுக்கு நாள் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு பொலிஸாரின் அதுவும் தமிழ்த் தெரிந்த பொலிஸாரின் சேவைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து பேசப்படுகின்றன. இன்று வடக்குகிழக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை. பலாலியில் மாத்திரம் பாதுகாப்பு தேவைகளுக்காக முன்னரை விட சிறிய இடம் அதியுயர் வலயமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த நிலங்களுக்கு உரியவர்களுக்கு நட்ட ஈடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளிடம் பாரியளவில் ஆயுதங்கள் இருந்தன. மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்றும் மீட்கப்பட்டு வருகின்றன. சரணடைந்த விடுதலைப்புலிகள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களை கொண்டு மீண்டும் பிரச்சினைகளை உருவாக்க வெளிச்சக்திகள் முயல்கின்றன.

அதற்கு இடம் தரப்படமாட்டாது. போர் முடிவடைந்துள்ளது. படையினருக்கு இன்று யுத்தத்துக்கு பதிலாக அபிவிருத்தியில் பங்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களே பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வடக்கு கிழக்கில் சுதந்திரமாக அரசியல் செய்கின்றனர். பிரபாகரன் இருந்தபோது அதற்கு இடம்தரப்படவில்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment