Translate

Thursday, 21 June 2012

கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களில் படையினரே ஈடுபடுகின்றனர் – ரணில் குற்றச்சாட்டு!

கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுடன் பல சந்தர்ப்பங்களில் ஆயுதப்படையினரே ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க நாடாளுமன்றில் கூறினார். இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது. காட்டுச் சட்டமே நடைமுறையில் உள்ளது. ஹம்பாந்தோட்டையில் ஜே.வி.பி. நடத்திய பகிரங்கக் கூட்டத்தின் போது ஆயுததாரிகள் அங்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இன்னும் தெற்கில் சுதந்திரமாக நடமாடித்திரிகின்றனர். பொலிஸார் சந்தேக நபர்களைக் கைதுசெய்யாது மௌனம் காக்கின்றனர். இறந்தவர்களுக்கான இறுதிக்கிரியையைக் கூட நடத்த விடாமல் பொலிஸார் தடுக்கின்றனர்.
இந்த ஆயுததாரிகள் வீதிகளில் ஆயுதங்கள் ஏந்தித் திரிவதற்கு யார் பாதுகாப்புப் பெற்றுக்கொடுத்தது? பொலிஸ் அரசியல் மயமாகிவிட்டது. நாடு முழுவதும் இதே நிலைதான்.

2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில்2,318 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் 1,112 இடம்பெற்றுள்ளன. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் 431 இடம்பெற்றுள்ளன.  இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசு எந்த நடவடிக்கையையும் இதுவரையும் எடுக்கவில்லை. பொலிஸாரின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன. இதனால், எமது நாடு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்குள்ளாகியுள்ளது.
இந்த நாட்டில் காட்டுச்சட்டமே நடைமுறையில் இருக்கின்றது என்பதை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையே கூறுகின்றது.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தவும் நல்லாட்சியை நிலைநாட்டவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொலிஸ் சேவை அரசியல்மயமாக்கப்பட்டிருப்பது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் படிக்கும்போது நன்றாகத் தெரிகின்றது.நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் பொலிஸிற்கு அரசு தனி அமைச்சை உருவாக்குமா?

நகைகளை அணிந்துள்ள ஒரு பெண் தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறைவரை எதுவித ஆபத்துமின்றி நடந்து செல்லக்கூடிய யுகம் ஒன்று இலங்கையில் இருந்தது என்று எமது மூதாதையர்கள் பெருமையுடன் கூறியிருக்கிறார்கள்.
இன்று நிலைமை வேறு. எவருமே வீதிகளில் சுதந்திரமாக நடந்துசெல்ல முடியாது. ஒருவரும் மாற்றுக்கருத்துகளைத் தெரிவிக்க முடியாது. அவ்வாறு செய்தால் அவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்படுகின்றனர்.

கடத்தல் நடவடிக்கைகளுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆயுதப் படையினர் பயன்படுத்தப் பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் கூறுகின்றன.உயர் பாதுகாப்பு வலயங்களில் மாத்திரம் அன்றி நீதிமன்ற வளாகங்களில் வைத்தும் மக்கள் கடத்தப் படுகின்றனர். பொலிஸ் நிலையங்களில் கொலைகள் இடம்பெறுகின்றன. ஆயுதம் தாங்கிய காடையர்கள் மக்களைக் கொல்கின்றனர்.
காணாமல் போதல் மற்றும் கொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குப் பொருத்தமான பொறிமுறை ஒன்று இல்லாததால் நிலைமை மோசமாகியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளித்துள்ளது. ஜெனிவாவிலும் ஹிலாரி கிளின்டனிடமும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகள் உடன் நடைமுறைப்படுத்தப்படுமா என அரசிடம் நாம் கேட்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment