Translate

Sunday, 10 June 2012

அதியுயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் இராணுவத்தின் கருத்தை கூட்டமைப்பு நிராகரிக்கிறது: மாவை _


  யாழ். குடாநாட்டிலுள்ள 40 சதவீத அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பதை கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக மாவை சேனாதிராஜா எம்.பி. நேற்று வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

வடக்கிலுள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்டு புத்த சிலைகள், விகாரைகள், இராணுவ குடியிருப்புகள், விமான ஓடு பாதைகள் அமைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.


கிழக்கில் குச்சவெளி போன்ற பிரதேசங்களில் பௌத்த சின்னங்கள் இருப்பதாகத் தெரிவித்து முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

வடக்கில் இராணுவத்தினரின் கூற்றுப்படி பார்த்தாலேயே இன்னும் 60 சதவீத அதி உயர் பாதுகாப்பு வலய நிலப்பிரதேசம் விடுவிக்கப்படவில்லை. அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 50 ஆயிரம் மக்கள் இன்னும் அகதி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலுமே கடந்த 25 வருட காலமாக வசித்து வருகின்றனர்.

வலி. வடக்கில் மாத்திரம் 24 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவில்லை 59.5 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் அரை வாசி நிலப்பகுதிகள் கூட விடுவிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் வசித்த மக்களை அதே பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தும் படி கோரி 2003ஆம் ஆண்டு நான் வழக்கொன்றைத் தொடர்ந்தேன். 2006ஆம் ஆண்டு அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீள்குடியேற அனுமதி வழங்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், சம்பூர் பிரதேசங்களில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மீள்குடியேற்றப்படாமலுள்ளனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படியும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சாசனங்களின் படியும் இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்களிலேயே குடியேற்றப்பட வேண்டுமென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment