இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 650 பேர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர். எனினும், இது குறித்து எதுவும் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 15,000 பேர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பசுபிக் வலயம் தொடர்பான 2011ம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இம்மாதம் 5ம் திகதி சிங்கள ஊடகவியலாளர் சாந்த விஜேசூரியவை கடத்துவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததுடன், நாட்டில் வேறு பல கடத்தல் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
கடந்த வருடம் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட மக்கள் எழுச்சி இயக்க உறுப்பினர் லலித், குகன் ஆகியோர் குறித்து இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளியாகவில்லை.
அத்துடன், இவ்வருட ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி மாலை, சிவலிங்கம் சிவகுமார் என்ற தமிழ் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவமும் பதிவானது.
இந்தச் சம்பவம் நடந்து 05 தினங்களின் பின்னர் அதாவது ஏப்ரல் 18ம் திகதி அவரது சடலம் யாழ்ப்பாணம் தொண்டமானாறு பிரேசத்தில் மீட்கப்பட்டது.
இந்த அனைத்துச் சம்பவங்களிலும் ஒற்றுமை என்னவெனில், இவர்கள் எந்தவொரு நபரையும் பொலிஸார் கைதுசெய்யவில்லை என்பதாகும்.
இலங்கையில் இடம்பெற்றுவரும் கடத்தல்களுடன் பாதுகாப்புத் தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டிருக்கின்றனர் என அண்மையில் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை தொடர்பான அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கொலன்னாவ நகர சபைத் தலைவரை கடத்திச் செல்ல முயற்சித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வெள்ளை வான் தரப்பினர், பிரதேச மக்களின் சுற்றிவளைக்கப்பட்டனர்.
எனினும், பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கமைய, பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க நேரடியாக வந்து அவர்களை மீட்டுச் சென்ற சம்பவமும் இந்த வருடத்திலேயே பதிவான ஒன்றாகும்.
வெள்ளை வான், கடத்தல் ஆகியன இலங்கையில் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. இந்த நிலையில், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மிகமோசமாக காணப்படுகிறது.
இராணுவத்தினரைப் போலவே, துணை இராணுவக் குழுக்களும் அந்தப் பிரதேசங்களில் ஆட்கடத்தலில் நேரடியாக ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கடத்தல்கள் குறித்து எதுவும் தெரியாது எனக் கூறுவது கேலிக்குரிய விடயமாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment