சம்பூர் காளியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்ல உள்ளூர் மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்த இலங்கை கடற்படையினர் தற்காலிக தடை விதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.சம்பூரில் இருந்து 2006 ஆம் ஆண்டு போர் காலத்தில் இடம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் நான்கு முகாம்களில் தங்கியுள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த முகாம்களில் உள்ளவர்கள் அந்தக் கோவிலுக்கு வாரம் ஒருமுறை சென்று வழிபட்டு வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அவ்வகையில் தமது பல ஆண்டு கால நேர்த்திக் கடன்களை செலுத்த இன்று-செவ்வாய்க்கிழமையும் அப்பகுதி மக்கள் அங்கு சென்ற போது, கடற்படையினர் அனுமதி மறுத்துவிட்டனர் என்று, சம்பூர்வாசிகளை மூதூர் பிரதேச சபையில் பிரதிநிதித்துவப்படுத்தும், உறுப்பினர் ஆர் நாகேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சம்பூரிலுள்ள காணிகள் தொடர்பில் அந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள காரணத்தினால், நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை, உள்ளூர் மக்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கடற்படையினர் தெரிவித்ததாகவும் நாகேஸ்வரன் கூறுகிறார்.
செவ்வாய்க்கிழமை காலை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனத்துக்காக திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்ததாகவும் உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.இந்த ஆலயம் தற்போது உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் வரவில்லை என்றும் நாகேஸ்வரன் சுட்டிக்காட்டுகிறார்.
No comments:
Post a Comment