தமிழர்களை அரசு உதாசீனம் செய்வதாலேயே இலங்கை இந்திய உறவுகளில் விரிசல் நிலை குற்றஞ்சாட்டுகிறது ஐ.தே.க. |
வடக்கு வாழ் தமிழ் மக்களின் மனிதாபிமான வாழ்வாதாரப் பிரச்சினைகளை மஹிந்த அரசு உதாசீனப்படுத்தி இருப்பதாலேயே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் பெரிதும் விரிசலடைந்து வருகிறன.
அரசியல்வாதிகள் மட்டு மல்ல, சாதாரண உல்லாசப் பிரயாணிகள் கூடத் தமிழகத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரான கயந்த கருணாதிலக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று எதிர்க்கட்சித் தலை வரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டின்போதே அவர் அதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களையும் தாண்டி விட்டோம் என நாட்டின் பல பாகங்களிலும் வெற்றி விழாக்களைக் கொண்டாடி வருகிறது அரசு. ஆனால் இன்றும் பல இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாகவே தெருவில் விடப்பட்டுள்ளனர். தங்களுடைய சொந்த வீடுகளுக்கும், காணிகளுக்கும் கூட போக முடியவில்லை.
பாரம்பரியமாகத் தாம் வாழ்ந்த காணிகளுக்குச் செல்ல அனுமதிக்கும்படி அந்த மக்கள் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்த வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியான போராட்டங்களைக் கூட அரசு அடக்குமுறை சட்டம் போட்டுத் தடை செய்கிறது.
வடக்கில் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. அராஜகம் தலைவிரித்தாடுகிறது. அடிப்படை மனித உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தலை நடத்த அரசு தயங்குகிறது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தினால் நாடு இரண்டாகப் பிரிந்துவிடும். அங்கே நடத்தக் கூடாது என்று சில அமைச்சர்கள் துவேசப் பிரசாரம் செய்கின்றனர். ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறுகின்றனர். சிலர் மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை, கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்கின்றனர்.
மற்றும் சில அமைச்சர்கள் 2013 செப்ரெம்பரில் வட மகாண சபைக்கான தேர்தல் நடத்துவோம் என்று ஒருவருட அவகாசம் கோருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும், உள்ளூராட்சித் தேர்தலையும் நடத்த முடியும் என்றால், ஏன் மாகாண சபைத் தேர்தலை மட்டும் நடத்த முடியாது?
மஹிந்த அரசு வடபகுதி மக்களை வஞ்சம் தீர்க்கிறது. தொடர்ந்தும் அடிமைகளாகவே வைத்துக் கொள்ள முனைகிறது. இதனைச் சர்வதேச சமூகம் அவதானமாக நோக்குகிறது.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வடபகுதி மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றன.
இந்திய மத்திய அரசுக்கும் அழுத்தங்கள் அதிகரித்து விட்டன. தமிழ் நாட்டுக்கு இலங்கை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சாதாரண உல்லாசப் பிரயாணிகளும் செல்ல முடியாத நிலை.
இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கை விமானப் படையினருக்கு மட்டுமல்ல எவருக்கும் பயிற்சி வழங்கக் கூடாது என்று போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த யதார்த்தத்தை மஹிந்த அரசு உணர வேண்டும். வடபகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண முன்வர வேண்டும். தவறின் விபரீதமான பின்விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றார்.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 10 July 2012
தமிழர்களை அரசு உதாசீனம் செய்வதாலேயே இலங்கை இந்திய உறவுகளில் விரிசல் நிலை குற்றஞ்சாட்டுகிறது ஐ.தே.க.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment