Translate

Wednesday, 4 July 2012

யாழ்ப்பாணத்தில் படையினரின் தொடர் இருப்பு: தாக்கங்களும் விளைவுகளும்


யாழ்ப்பாணத்தில் படையினரின் தொடர் இருப்பு: தாக்கங்களும் விளைவுகளும் 
 
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை, கொல்லன்கலட்டி, பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறைப் பிரதேசம், பொன்னாலை தொடக்கம் தொண்டமானாறு வரையான கரையோரப் பிரதேசங்கள் (மாதகல், கீரிமலை, மயிலிட்டி, வசாவிளான் உள்ளடங்கலாக) பல உயர் பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளன.


இதேபோன்று மிருசுவில், கிளாலி, அரியாலை கிழக்கு, அல்லைப்பிட்டி போன்ற இடங்களும் இராணுவத்தால் முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நியூ யோர்க்கைத் தளமாகக் கொண்ட ஆய்வாளர் கிப்சன் பேற்மன் [Gibson Bateman] எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய கட்டுரையில் முழுவிபரம்:

யாழ்ப்பாண மாவட்டமானது 1995ல் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அன்றிலிருந்து யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் இருப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. யாழ் குடாநாட்டை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து குறுகிய காலத்தில் பல்வேறு இடங்கள் 'உயர் காப்பு வலயங்கள்' என முத்திரை குத்தப்பட்டன.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்நோக்குவதற்கும், இராணுவ முகாங்கள் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புக் கருதியும் 'உயர் பாதுகாப்பு வலயங்கள்' அமைக்கப்பட்டன. இலங்கையில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையான உயர் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன.

மக்களின் வாழிடங்களில் 16 சதவீதமானவை உயர் காப்பு வலயங்களாகும். இந்த இடங்களில் பொதுமக்களின் நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக இலங்கை அரசாங்கமானது, அனைத்துலக மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு மனிதாபிமான உடன்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ள நாடாக உள்ள போதிலும், உயர் காப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டு அவை இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுவதை, இவ் அனைத்துலக உடன்பாடுகள் மூலம் தடுக்கமுடியாது.

இதற்கான போதியளவு சட்ட வரைபுகள் காணப்படவில்லை. எனினும், உண்மையில் இவ்வாறான உயர் காப்பு வலயங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன. ஜனநாயக சோசலிச குடியரசான இலங்கையானது, பின்வரும் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சரத்துக்களைக் கொண்டுள்ளது:

• பேச்சு சுதந்திரம்

• அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்

• சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம்

• மத சுதந்திரம்

• ஒருவர் தனது சொந்த கலாசாரத்தை பின்பற்றி அதனை மேம்படுத்துவதற்கான சுதந்திரம்

• சட்ட ரீதியான தொழில்கள், வர்த்தகம், முயற்சியாண்மை போன்றவற்றை மேற்கொள்வதற்கான சுதந்திரம்

• நடமாடுவதற்கான சுதந்திரம், சிறிலங்காவுக்குள் எந்தவொரு பகுதியிலும் வசிப்பதற்கான சுதந்திரம்

இந்நிலையில், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான பெருமளவான நிலங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சொந்த இடங்களிலிருந்த மக்களை பலவந்தமாக வெளியேற்றியமை, மக்களின் நடமாடும் சுதந்திரத்தில் இடையூறு விளைவித்தல், சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதியாமை போன்றவற்றின் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது அடிப்படைச் சுதந்திரத்தைக் கொண்டுள்ள உள்நாட்டு மற்றும் அனைத்துலகச் சட்டங்களை மீறிச் செயற்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களும் அகற்றப்படும் என ஜனவரி 2010ல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். 2011 ஆகஸ்ட் முடிவில் அவசரகாலச் சட்ட நடைமுறைகள் காலவதியாகிய பின்னர், உயர் காப்பு வலயங்களில் காணப்பட்ட 'உத்தியோகபூர்வ' செயற்பாடுகள் காணாமற்போகத் தொடங்கின.

அதாவது இந்த மாற்றமானது ஒவ்வொரு மக்களும் இயல்பு வாழ்வை வாழமுடியும் என்பதை அறிவிப்பதாக இருக்கவில்லை என்பது கெட்டவாய்ப்பாகும். அல்லது இவ்வாறான 'உத்தியோகபூர்வ' செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமையானது, யாழ் குடாநாட்டில் இயங்கும் அனைத்து இராணுவ நிர்வாகங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கவில்லை.

இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் 2011 முடிவுக்குள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அரசாங்கமானது இக்காலக்கெடுவுக்குள் தனது பணியைப் பூர்த்தி செய்யவில்லை.

அண்மையில், மாதகலைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் தமது நிலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானித்திருந்தனர். ஆனால் நில உரிமையாளர்கள் தமது நிலங்களை மீட்பதற்கு சட்டத்தை அணுகினாலும் கூட இலங்கையில் தற்போது நடைமுறையில் காணப்படும் நீதிமுறைகள் இவர்களுக்கு வலுவான தீர்வை வழங்கப்போவதில்லை.

உயர் பாதுகாப்பு வலயங்களில் காணிகளைக் கொண்ட சுமார் 26,000 வரையானவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாது தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். குடாநாட்டில் உயர் காப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 வரையானவர்கள் தற்போது தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான கலந்துரையாடல், திட்டமிடல் மற்றும் அவற்றில் சில மக்களின் பாவனைக்காக விடப்பட்டமை போன்றன உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் தெளிவின்மையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து உயர் பாதுகாப்பு வலயங்களும் மக்களின் பயன்பாட்டுக்காக மீளத்திறக்கப்படுமா என்கின்ற சந்தேகம் நிலவுகின்றது. இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்படுவதில் இலங்கை அரசாங்கமானது விருப்பத்துடன் நடக்கவில்லை என்பதையே தற்போதைய நிலைப்பாடு சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை அரசாங்கமானது மனித உரிமைகளுக்கான அனைத்துலக பிரகடனம், பொது மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம் போன்ற பல முக்கிய சாசனங்களை ஏற்று கைச்சாத்திட்டுள்ள போதிலும், இவற்றை பின்பற்றி நடக்கவில்லை.

“ஒவ்வொருவரும் சமஉரிமையுடன், கௌரவத்துடன், சுதந்திரமாக பிறக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் மற்றையவர்களை சகோதரமனப்பான்மையுடன் ஏற்று அவர்களின் உரிமைகளை மதித்து நடக்கவேண்டும்" அனைத்துலக மனிதாபிமான உரிமைகள் சாசனத்தின் முதலாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையானது பல பத்தாண்டுகளாக இச்சாசனத்தின் சரத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நடக்கவில்லை என்பது கெட்டவாய்ப்பாகும்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக மத ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வதற்கான மக்களின் அடிப்படை மனித உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மக்களின் வரலாற்று சிறப்பு மிக்க பல இடங்கள் அழிந்துவருகின்றன. இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002-2006 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கமானது தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சில நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் கையளித்தது.

ஆனால் தற்போது அந்த நிலங்கள் உள்ளடங்கலாக பல பிரதேசங்களை இலங்கை அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தியுள்ளது.

தெல்லிப்பளை, கொல்லன்கலட்டி, பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறைப் பிரதேசம், பொன்னாலை தொடக்கம் தொண்டமானாறு வரையான கரையோரப் பிரதேசங்கள் (மாதகல், கீரிமலை, மயிலிட்டி, வசாவிளான் உள்ளடங்கலாக)பல உயர் காப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று மிருசுவில், கிளாலி, அரியாலை கிழக்கு, அல்லைப்பிட்டி போன்ற இடங்களும் இலங்கை இராணுவத்தால் முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களில் போதியளவு வசதி வாய்ப்புக்கள் காணப்படாததால் மக்கள் மீளவும் அங்கு செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

மூன்று பத்தாண்டுகளாக தொடரப்பட்ட குருதி சிந்தப்பட்ட யுத்தத்தை இவ்வாறான உயர் காப்பு வலயங்களில் தமது சொந்த வீடுகளைக் கொண்ட மக்கள் படும் துன்ப துயரங்கள் இன்றும் நினைவூட்டுவதாக உள்ளன.

முதன் முதலாக உயர் காப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்ட போது, பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்தனர். இந்த மக்கள் இன்று வரை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்திலுள்ள தமது நண்பர்களினதும், உறவினரதும் வீடுகளில் தற்காலிகமாக வாழ்கின்ற அதேவேளையில், ஏனைய மக்கள் நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் தங்கிவாழ்கின்றனர். இந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழ முடியாததால் இவர்கள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதில் சங்கடங்களை எதிநோக்கியுள்ளதுடன், எந்தவொரு தொழிலைக் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். தவிர, இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மிகத் தாழ்வாகக் காணப்படுகின்றது. ஏனெனில் முகாங்களில் இவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான தொடர் இடப்பெயர்வுகளின் விளைவாக தமிழ் இளையோர் தமது கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வாழ்கின்றனர். இடப்பெயர்வு காலத்தில் இந்த மக்கள் ஒரு உறுதியான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளத் தவறியுள்ளனர்.

இராணுவத்தினர் பல ஆண்டுகளாக மக்களின் நிலங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் இந்த மக்கள் தமக்கான வாழ்வை மீளக் கட்டியெழுப்ப முடியாதுள்ளனர். இலங்கையில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது பல பத்தாண்டுகள் வரை நீடித்து தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், தமிழ் மக்கள் வாழிடங்களில் இன்றும் இராணுவமயப்படுத்தலும், இராணுவச் செலவீனமும் அதிகரித்த வண்ணமேயுள்ளன.

இவ்வாண்டில் இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 2 பில்லியன் டொலர்களாகும். பாதுகாப்புச் செலவீனம் கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் ஏழு சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை பொருளாதார, சமூக மற்றும் பாதுகாப்பு என்கின்ற மூன்று தலைப்புக்களில் வகைப்படுத்தலாம்.

பொருளாதாரப் பிரச்சினையைப் பார்க்கும் போது தொழில் வாய்ப்பற்ற இளையோர்களின் பிரச்சினை முக்கியமானதாகும். இராணுவத்தினர் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்துள்ளதால், விவசாயிகளின் விவசாயத் தொழிலில் பாதிப்பு ஏற்படுகின்றது.

இதேபோன்று மீன்பிடிக்கச் செல்கின்ற மீனவர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வர்த்தக நடவடிக்கைகளை இராணுவத்தினர் தம்வசமாக்கியுள்ளதால், தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள், தொழில் வாய்ப்பின்றி பொருளாதார ரீதியாக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். தொழில் சார் சுதந்திரம் என்ற வகையில் மனித உரிமைகளுக்கான அனைத்துலக பிரகடனத்தின் 23வது சரத்தானது பின்வருவனவற்றை முதன்மைப்படுத்துகின்றது. இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்று கைச்சாத்திட்டுள்ளது.

01. அதாவது ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பிய தொழிலைச் செய்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. தான் விரும்பிய தொழிலை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமுண்டு. வேலைவாய்ப்பை பெறமுடியாத சூழலிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கான உரிமையை ஒவ்வொரு குடிமகனும் கொண்டுள்ளான்.

02. எந்தவொரு பாரபட்சமுமின்றி, சம வேலைக்கு சம ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையுண்டு.

03. வேலை செய்கின்ற ஒவ்வொரு குடிமகனும் தொழில் சார் சன்மானம் மற்றும் ஏனைய சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையுண்டு. அத்துடன் தனதும் தனது குடும்பத்தவர்களுக்குமான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

04. ஒவ்வொரு குடிமகனும் தனது விருப்புக்கேற்ப, தன்னைப் பாதுகாப்பதற்கேற்ப தொழிற் சங்கங்களை உருவாக்கி அதில் இணைவதற்கான உரிமையைக் கொண்டுள்ளான்.

மேலும் உயர் பாதுகாப்பு வலயங்களைப் பராமரிப்பதால் சமூக ரீதியாக பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் முறுகல்நிலை காணப்படுகின்றன.

யுத்தம் முடிவுற்றதிலிருந்து இந்நிலையானது மேலும் தீவிரமுற்றுள்ளது. அண்மையில், இராணுவத்தினர் தமிழ் மக்கள் வாழிடங்களில் அதிகளவில் குவிக்கப்பட்டு அவர்களது தலையீடுகள் அதிகம் காணப்படுவதையும் தமிழ் மக்கள் வாழிடங்களில் இலங்கை அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து வருவது தொடர்பிலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களின் சொந்த நிலங்களின் எல்லைகளில் இலங்கை இராணுவத்தினர் மாற்றத்தை ஏற்படுத்துவதால் நில உறுதிப் பத்திரங்களும் செல்லுபடியற்றதாகும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. இதைவிட தமது பெண்பிள்ளைகளுக்கு சீதனமாக இக்காணிகளை வழங்கத் திட்டமிட்டுள்ள பெற்றோர்கள் தமது நிலங்கள் தம்மை விட்டுப் போய்விடுமோ என்கின்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.

இவ்வாறான உயர் பாதுகாப்பு வலயங்கள் சிறுவர்களின் உரிமையை பாதிக்கின்றன. இலங்கையானது சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

இச்சாசனத்தின் மூன்றாவது சரத்தானது சிறுவர்களின் சிறந்த நலனைப் பாதுகாத்தல் தொடர்பாகவும், ஆறாவது சரத்தானது சிறுவர்களின் உயிர்களைப் பாதுகாத்தல், அவர்களை முன்னேற்றுதல் தொடர்பாகவும், சரத்து 12ல் சிறுவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் தொடர்பாகவும், சரத்து 19ல் சிறுவர்களின் உள, உடல் நலனைப் பாதுகாத்தல் தொடர்பாகவும், சரத்து 20ல் சிறுவர்களின் வாழ்வுத் தரத்தை உயர்த்துதல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள இலங்கையானது நீண்ட காலமாக மேற்கூறப்பட்டுள்ள சரத்துக்களை மீறிச் செயற்படுவதற்கு உயர் காப்பு வலயங்கள் காலாக உள்ளன.

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டமும் சிறுவர் உரிமையைப் பாதிக்கின்றது. அதாவது யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவர் போராளிகள் கைதுசெய்யப்பட்டு, சிறுவர் புனர்வாழ்வு மையங்களில் புனர்வாழ்வுப் பயிற்சிக்காக இணைக்கப்பட வேண்டும் என பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிய சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கை சிறுவர்கள் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தேசிய மற்றும் அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாக உள்ளது.

இராணுவத்தினர் பாடசாலைகள், கோவில்கள், வணக்க தலங்கள் போன்றன உள்ளடங்கலாக மக்களின் பயன்பாட்டுக்கான கட்டடங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும், பாடசாலைகளுக்கு அருகில் இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளதாலும் தமிழ்ச் சிறார்கள் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகுகின்றனர்.

இந்தச் சிறார்கள் மன வடுக்களைத் தாங்கி வாழ்கின்றனர். அத்துடன் சில சந்தர்ப்பங்களில் தமிழ்ச் சிறார்கள் சிறிலங்கா இராணுவத்தால் பலாத்காரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவை சிறார்களின் உள மற்றும் உடல் நல மேம்பாட்டை சீர்குலைப்பதாக காணப்படுகின்றன. குறைபோசாக்கு மற்றும் குழந்தை இறப்பு வீதம் அதிகரித்தல் போன்றனவும் தற்போது இலங்கையில் காணப்படும் பாரிய பிரச்சினைகளாகும்.

கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களை இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றாதிருப்பது உண்மையில் எரிச்சலை உண்டுபண்ணுகின்ற செயலாகும். அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 12வது சரத்தின் படி,

01. சுதந்திரமாக நடமாடுதல் மற்றும் தமது நாட்டு எல்லைகளுக்குள் சுதந்திரமாக வசித்தலுக்கான உரிமையை ஒவ்வொரு குடிமகனும் கொண்டுள்ளான்.

02. தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குச் செல்வதற்கும், பின் மீண்டும் தனது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கான உரிமையும் உண்டு.

'நான் ஏன் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை?' என கேட்கின்ற குடும்பங்கள் நிறைய உண்டு. இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் குடும்பங்கள் சிதறுண்டு வாழக் காரணமாக உள்ளன. இந்நிலை மேலும் மோசமாவதற்கு இவ்வாறான கொள்கைத் திட்டமிடல்கள் வழிவகுத்துள்ளன.

பெரும்பாலான மக்கள் உத்தியோகபூர்வமாக மீள்குடியேற்றப்பட்டுள்ள போதிலும், அவர்களின் வாழ்வு இயல்புநிலைக்குத் திரும்பிவிடவில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் கேள்விக்குறியாக காணப்படுகின்றது.

போரால் பாதிக்கப்பட்ட, குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்களின் பாதுகாப்பு என்பது யாழ்ப்பாண குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. யுத்தம் முடிவுற்றதிலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகளவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அச்சம் காரணமாக, பாலியல் ரீதியாக சித்திரவதைப்படுத்தப்பட்ட பெண், குற்றமிழைத்த இராணுவ வீரரை அடையாளங்காட்ட முன்வருவதில்லை.

இடம்பெயர்ந்து தற்போது குடியேற்றப்பட்ட மக்கள் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருவதால் மிகப் பலமான, பாதுகாப்பளிக்கக் கூடிய கதவுகளை இந்த வீடுகள் கொண்டிருக்கவில்லை.

இதனால் பெண்கள் அச்சத்துடன் இரவுப் பொழுதைக் கழிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த மக்களுக்கான சமூக சேவைகள் அவர்களைச் சென்றடைவதில்லை. இவர்கள் மீள்குடியேற்றப்படாததால் சில சமூக நல சேவைகளைப் பெறமுடியாதுள்ளனர்.

இதற்கும் அப்பால், யுத்தத்தால் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான சேவைகளில் மத அமைப்புக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பங்குபற்றுவதற்கான தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில்இலங்கை அரசாங்கத்தின் கீழ்த்தரமான, பொறுப்பற்ற, முட்டாள்தனமான செயலாக காணப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் வடக்குப் பகுதியில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டால் பெரும் உதவியாக அமையும். இலங்கையில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்பன பெரும் சவாலைத் தோற்றுவித்துள்ளன.

இலங்கையில் வடக்கில் சேவை வழங்க முன்வரும் தொண்டர் அமைப்புக்கள் ஜனாதிபதியின் செயலக வேலைத்திட்டக் குழுவின் கண்காணப்பின் கீழேயே தமது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இக்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னரே அரச சார்பற்ற நிறுவனங்கள் வடக்கில் பணிகளை மேற்கொள்ள முடியும். ஜனாதிபதி செயலக வேலைத்திட்டக் குழுவானது உள்ளர் அரச நிறுவனங்கள் கொண்டுள்ள அதிகாரங்களைவிட கூடிய அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு இராணுவத்துக்கு இவ்வாறான குழுவின் ஒத்துழைப்பு கிடைக்கின்றது. தற்போது யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களில் 10 பேருக்கு ஒரு இராணுவத்தினன் பணியில் உள்ளான்.

இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவமயப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றமையானதுநாட்டில் உருவாக்கப்படும் நேர்மையான மீளிணக்கப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நிலையான, உண்மையான மீளிணக்கப்பாடு உருவாக்கப்பட வேண்டுமாயின் முதலில் இராணுவ மயப்படுத்தல் நிறுத்தப்படவேண்டும். இதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை மேம்படுவதுடன், அவர்கள் சுதந்திரமாக நடமாட முடிவதுடன் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் உருவாகின்றது.

தமது சொத்துக்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆள், சொத்து மற்றும் தொழில் புனர்வாழ்வு அதிகாரசபையானது உரிய நட்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வாழும் தமிழ் மக்களுக்கு கொள்கை வகுப்பாளர்களும் இலங்கை அரசாங்க அதிகாரிகளும் மேலும் பல்வேறு உதவிகளை வழங்க முடியும்.

இவர்கள் இதனைச் செய்ய முன்வராது விட்டால், குறுகிய காலத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கமானது தனது சொந்த மக்களைப் புறக்கணிக்காது அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகளவில், பரந்தளவில் காணப்படும் 'உயர்காப்பு வலயங்கள்' மக்களின் பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் சரியான, பொருத்தமான அரசியல் ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் இலங்கையில் 'ஜனநாயகம்' நிலவுகின்றது என்பதில் அர்த்தம் உள்ளதா?

No comments:

Post a Comment